மை டியர் ஜீபா !
ஹாசிப்கான்
##~## |
''ஹலோ ஜீபா... மீன்களைத் தொட்டியில் வளர்க்கும் பழக்கம் எப்போது ஏற்பட்டது?''
- வி.கிருபாகர், பரமத்திவேலூர்.
''முதன்முதலில் ஜப்பானியர்களும் சீனர்களும்தான் பொழுதுபோக்குக்காக மீன்களுக்கான கண்காட்சியை நடத்தினார்கள். அங்கே வியாபார விஷயமாக சென்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வணிகர்கள் அந்தப் பழக்கத்தை தங்கள் நாடுகளுக்கு அறிமுகம் செய்தார்கள். அலங்கார மீன்கள் விற்பதை ஒரு தொழிலாக மாற்றியவர்கள் அமெரிக்கர்களே. 1770-ல் இங்கிலாந்து நாட்டில், தங்கமீன்களை தொட்டியில் வளர்க்க ஆரம்பித்தார்கள். அது, உலக அளவில் எல்லோரையும் கவர்ந்தது. 'மகிழ்ச்சிக்காக' என்று தொடங்கிய விஷயம், இப்போது 'அதிர்ஷ்டம்’ எனச் சொல்லி வாஸ்து மீன்களை வளர்க்கும் அளவுக்கு பெரிய தொழிலாக மாறிவிட்டது.''
''ஜீபா... எனக்கு ஒரு டவுட். ஆறிப்போன காபியையோ, உணவையோ சாப்பிடும்போது டேஸ்ட் மாறிவிடுகிறதே ஏன்?''
- கி.அர்ச்சனா, பழநி.

''இதில் இரண்டு விஷயங்கள் இருக்கு அர்ச்சனா. ஒன்று, உணவின் பதம். ஒவ்வோர் உணவும் தயாராகும் முறையைப் பொருத்து குறிப்பிட்ட சூடு அல்லது குறிப்பிட்ட குளிர்ச்சி மற்றும் குறிப்பிட்ட கால அளவுக்கு சுவையைத் தன்னிடம் தக்கவைத்திருக்கும். அந்த அளவு மாறும்போது சுவையின் தன்மையும் மாறும். இரண்டாவது விஷயம், ஓர் உணவை நமக்கு சுவையாக உணர்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பது. நாக்கில் இருக்கும் சுவை உணர்வு இழைகள்தான். அதனுடன் நமது கண்கள், நாசி மற்றும் உள்மனமும் உணவை சுவையாக்குவதில் பங்கு வகிக்கின்றன. எப்படித் தெரியுமா? நமக்குப் பிடித்த உணவை கண்களால் பார்த்து பரவசம் அடைகிறோம். நாசியால் சுவாசிக்கிறோம். அதைச் சாப்பிட விரும்புகிறோம். இவை எல்லாம் செய்தியாகச் சென்று மூளையைத் தூண்டுவதும் உணவின் சுவைக்குக் காரணமாக அமைகின்றன. இதில் ஒன்று சரியில்லாமல் போனால்கூட உணவின் சுவை மாறும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.''

''ஹாய் ஜீபா... நான் தலைமுடிக்கு ஷாம்பு போடுகிறேன். அதனால் நன்மையா... தீமையா?''
- சு.மோகனசுந்தரம், தாண்டாக்கவுண்டன் பாளையம்.
''முன்பெல்லாம் இயற்கையில் கிடைக்கும் சீயக்காயை அரைத்து, தலைக்குக் குளிப்பார்கள். இப்போது சீயக்காய் உபயோகிப்பது மிக மிக அரிதாகி, ஷாம்புதான் சுலபமான வழி என்றாகிவிட்டது. எனவே, அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நன்மையும் தீமையும் உள்ளது. வாரத்துக்கு ஒரு பிராண்ட் என மாற்றிக்கொண்டிருக்காமல், ஒரே பிராண்ட் ஷாம்புவை உபயோகிக்க வேண்டும். தினமும் ஷாம்பு குளியல் போடாமல், அதிகபட்சம் வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஷாம்புவை நேரடியாகத் தலையில் கொட்டிக்கொள்வதும் தவறு. உள்ளங்கையில் இட்டு, அதில் கொஞ்சம் தண்ணீரைவிட்டு, பிறகு தலைக்குப் பயன்படுத்த வேண்டும். இப்படி முறையாகப் பயன்படுத்தினால், தீமை ஏற்படாது.''
''டியர் ஜீபா... வேலூர் கோட்டையைக் கட்டியது யார்?''
- எஸ்.பிருந்தா, கோவை.

''விஜயநகரப் பேரரசு, 16-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆட்சி செய்தது. அப்போது வேலூரை ஆட்சி செய்தவர், 'குச்சிபொம்மு நாயக்கர்’ என்கிற குறுநில மன்னர். அவரால் கட்டப்பட்டதுதான் வேலூர் கோட்டை.''
''ஹலோ ஜீபா... சூடான எண்ணெயில் தண்ணீரை விட்டால், படபடவெனப் பொரிகிறது. ஆனால், சூடான நீரில் எண்ணெயை விட்டால் எதுவும் ஆவதில்லையே ஏன்?''
- ஆர்.சிவரஞ்சனி, சென்னை-24.
''தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி சென்டிகிரேடு; எண்ணெயின் கொதிநிலை 200 முதல் 250 டிகிரி சென்டிகிரேடு. அதனால், கொதிநிலையில் இருக்கும் எண்ணெயில் தண்ணீர் படும்போது, அதுவும் உடனடியாக கொதிநிலையை அடைந்து ஆவியாக மாறுவதால், அப்படிப் பொரிகிறது. ஆனால், தண்ணீரில் எண்ணெயை விடும்போது, அது கொதிநிலையை அடைவது இல்லை.''