ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா...
##~##

''மை டியர் ஜீபா... பனிப் பிரதேசங்களில் முற்றிலும் பனியால் உறைந்திருக்கும் ஆறு, ஏரிகளில் உள்ள மீன்கள் எவ்வாறு வாழ்கின்றன?''

 - பி.பிரேமிகா, பெரம்பூர்.

''எல்லாத் திரவங்களுக்கும் குறிப்பிட்ட கொதிநிலை மற்றும் உறைநிலை இருக்கிறது பிரேமிகா. தண்ணீரைக் கொதிக்கவைக்கும்போது, குறிப்பிட்ட கொதிநிலையில் ஆவியாகும். குளிரவைக்கும்போது, குறிப்பிட்ட உறைநிலையில் பனிக்கட்டியாக மாறும். அப்படி பனிப் பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகள் உறையும்போது, அவற்றின் மேற்பரப்பு மட்டுமே உறையும். அடிப்பகுதித் தண்ணீர் அப்படியேதான் இருக்கும்.  ஆக்ஸிஜனும் பனிப்பரப்புக்கு அடியில் இருப்பதால், மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும் அங்கே உயிர்வாழ முடியும். மேலும், பனிப் பிரதேசங்களில் வாழும் உயிரினங்களின் உடல் அமைப்பு, குளிரைத் தாங்கும் சக்தி கொண்டவை. சில மீன் வகைகள், சில ரசாயன மாற்றங்களின் மூலம் தங்கள் உடல் திரவங்களின் உறைநிலையைக் குறைத்துக்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளன.''

''ஹலோ ஜீபா... மருத்துவத்தில் 'டயட்’ என்றால் உணவு என்றுதானே பொருள்? பின்னர், எதற்கு உணவுக் கட்டுப்பாட்டுக்கு 'டயட்’ என்று கூறுகிறார்கள்?''

- பரதன், திருவாரூர்.

மை டியர் ஜீபா...

''ஆங்கிலத்தில் 'டயட்’ (Diet) என்ற சொல்லுக்கு, 'உணவு’ என்றுதான் அர்த்தம். உணவுக் கட்டுப்பாட்டை 'டயட் கன்ட்ரோல்’ என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக, நீரிழிவு இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவை, 'டயபெடிக் டயட்’ என்பார்கள். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உணவு, 'ரீனல் டயட்’ (Renal diet). எனவே, உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதை 'டயட்டிங்’ என்று சொல்வதே சரி. பேச்சுவழக்கில் 'டயட்’ என்று மாறிவிட்டது.''

''டியர் ஜீபா, தேனைத் தலையில் தேய்த்தால், முடி வெள்ளை நிறமாக மாறிவிடும் என்பது உண்மையா?''

- கௌ.தயானந், சேலம்.

மை டியர் ஜீபா...

''இல்லை தயானந். நம்முடைய முடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம்,  உடலில் இருக்கும் 'மெலனின்’ எனப்படும் நிறமிகள்தான். வயது ஆக ஆக, மெலனின் குறைந்து முடியின் நிறம் மாறும். இதில், தேனின் பங்கு  கிடையாது. உண்மையில் தேன், முடிக்கு சிறந்த கண்டிஷனர். தேனில் எலுமிச்சைச் சாறைக் கலந்து, தலையில் தேய்த்து அலசினால், முடி மென்மையாகுமே தவிர, வெள்ளை ஆகாது. வெறும் தேனைச் சாப்பிட்டு கையைத் தலையில் தேய்த்துக் கொள்வதைத் தவிர்க்க, பெரியவர்கள் இப்படிச் சொல்லப்போய், அதுவே நிலைத்திருக்கலாம்.''

''காற்றால் நிரப்பப்பட்ட பலூன் பறப்பது இல்லை. ஹீலியம் நிரம்பிய பலூன் பறக்கிறது. எப்படி ஜீபா?''

- ஆர்.சரவணன், பெரியநாகப்பாளையம்.

''ஹீலியம் வாயு, மிக மிக லேசானது. காற்றைவிட எடை குறைந்தது. ஒரு லிட்டர் காற்றின் எடை 1.25 கிராம் எனக் கொண்டால்,  ஹீலியத்தின் எடை 0.18 கிராம் மட்டுமே. தண்ணீருக்குள் பந்தை அமிழ்த்தினாலும் அது வேகமாக வெளியேறி மிதக்கும். காரணம், தண்ணீரைவிடக் குறைந்த எடைகொண்டது காற்று. பந்தின் எடையை அதிகப்படுத்தினாலும், அது அந்த இடத்தில் உள்ள தண்ணீரின் எடைக்குக் குறைவாகவே இருக்கும். அதேபோல, பலூனில் எவ்வளவு ஹீலியத்தை நிரப்பினாலும், அது காற்றின் எடையைவிடக் குறைவாகவே இருப்பதால், மேலே எழும்பிப் பறக்கிறது.''

மை டியர் ஜீபா...

''டியர் ஜீபா... எனக்கு ஒரு டவுட். உலகத்தில் மக்கள் பரந்த இடங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பூமியின் ஒரு பகுதியில் கூடினால், பூமி ஒரு பக்கமாகச் சாய்ந்துவிடுமா?''

- கு.மகேஷ் முரளிகிருஷ்ணா, பவானி.

''சுவராஸ்யமான சந்தேகம்தான் மகேஷ். உலகில் 600 கோடி மக்கள் உள்ளார்கள். ஒவ்வொருவரின் எடையும் சராசரியாக 60 கிலோ என்று வைத்தாலும், பூமியின் எடையைவிட மிகவும் குறைவுதான். தவிர, பூமி என்பது ஒரு பந்து போல சுழன்றுகொண்டே இருக்கும் கோள். இதில் ஏதேனும் ஒரு பக்கத்தில்... உதாரணமாக, இந்தியாவில் பூமியின் மொத்த மக்களும் கூடி நின்றாலும் எதுவும் ஆகாது. சமமான பரப்பில்தான் ஒரு முனையில் எடை அதிகம் சேரும்போது, மறுமுனை தூக்கிக்கொள்ளும். ஆனால், பந்து போன்ற பூமியில் அது சாத்தியம் இல்லை.''