Published:Updated:

காத்திருக்கும் நண்பர்கள்!

தி.ஜெயப்பிரகாஷ் படங்கள் : மு.சரவணக்குமார்

காத்திருக்கும் நண்பர்கள்!

 
''நூலகம் என்றால், பட்டப் படிப்பு படிக்கிறவர்கள் தங்களின் ஆராய்ச்சிக்குக் குறிப்பு எடுக்கவும், வயதில் மூத்தவர்கள் பொழுதுபோக்கவும் சென்றுவரும் இடம் என்ற அளவுக்குத்தான் இன்றைய நூலகங்களை நாம் பயன்படுத்துகிறோம்.. இது தவறு. 'நூலகம் நமக்கான இடம்’ என்பதை குழந்தைகள் மனதில் விதைக்கவே இந்த முயற்சி'' என்கிறார் லெனின் பாரதி.  

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு நூலகத்தில், 'குழந்தைகள் வாசகர் வட்டம்’ என்ற அமைப்பு செயல்பட்டுவருகிறது.

''தொலைக்காட்சிப்பெட்டியும் வீடியோ கேம்களும்தான் மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்குகள் என்ற எண்ணம் குழந்தைகளிடம் உள்ளது. அவற்றைவிட இனிய அனுபவம், ஒரு புத்தகம் வாசிக்கும்போது கிடைக்கும். வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் ஊக்குவித்து, கற்பனைத் திறனை மேம்படுத்த வேண்டும். இதுபற்றி லெனின் பாரதி சொன்னதும், நானும் சந்தோஷமாக இந்த முயற்சியில் இறங்கினேன்'' என்கிறார் நூலகர் பீர்பாட்ஷா.

உடுமலைப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் வாசகர் வட்டத்தின் தலைவர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர் எல்லோருமே மாணவர்கள்தான்.

காத்திருக்கும் நண்பர்கள்!

''நாங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை, ஞாயிற்றுக்கிழமையில் வாசகர் வட்ட அமைப்பைக் கூட்டுவோம். அறிவு, ஒழுக்கம், பண்பாடு வளர்க்கும் கதைகளையும், வரலாற்று நூல்களையும் படிப்போம். பிறகு, படித்த நூல்களைப் பற்றி, சக உறுப்பினர்களோடு கருத்துகளைப் பரி¢மாறுவோம். இது, எங்களுக்கு புதிய அனுபவம்'' என்கிறார்கள், சுட்டிகள்.

''65 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த இந்த நூலகத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இவை எல்லாமே மாணவர்களுக்குப் பயன்பட வேண்டும். இந்த அமைப்பை உருவாக்கிய பின், இந்தப் புத்தகங்களுக்கே ஒரு புத்துணர்வு வந்துவிட்டதாக உணர்கிறோம்'' என்கிறார் பீர்பாட்ஷா.

புத்தகம் படிப்பது, அதைப் பற்றிப் பேசிக்கொள்வதோடு வேறு என்ன செய்கிறார்கள்?

காத்திருக்கும் நண்பர்கள்!

''நாங்களே கதைகளை உருவாக்கிச் சொல்லும் அளவுக்கு, எங்களோட கற்பனைத்திறன் வளர்ந்திருக்கு. எதிர்காலத்தில், சூப்பர் எழுத்தாளர்கள் பலர், இங்கிருந்து வருவோம் பாருங்க'' என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் சுட்டி எழுத்தாளர்கள்.

நீர் மேலாண்மை, சூழல் இலக்கியம் பற்றிய கருத்தரங்குகளையும் பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார்கள்.

''ஒவ்வொரு கூட்டத்திலும் என்னென்ன செய்யலாம்னு  முன்கூட்டியே திட்டம் போட்டுவிடுவோம். அதனால், எந்தக் குழப்பமும் இல்லாமல், நிகழ்ச்சிகளை நடத்த முடியுது. பீர்பாட்ஷா சாரும் லெனின் பாரதி சாரும் எங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்காங்க. எங்க நண்பர்களிடமும் இந்த அமைப்பு பற்றிச் சொல்லியிருக்கோம். அவங்களும் இதில் இணைய ஆர்வமா இருக்காங்க. சீக்கிரமே இதில் நிறைய உறுப்பினர்களைச் சேர்த்து, மிகப்பெரிய அமைப்பாக மாற்றுவோம். வாசிப்பின் அற்புதத்தை எல்லோருக்கும் புரியவைப்போம்'' என்று உற்சாகத்துடன் சொல்கிறார்கள்.

காத்திருக்கும் நண்பர்கள்!

''100 நண்பர்களுக்கு இணையாக ஒரு புத்தகம், தலைசிறந்த நண்பனாக இருக்க முடியும். அந்த  நண்பனை, ஒவ்வொரு மாணவனும் மாணவியும் தங்களது நண்பர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார் லெனின் பாரதி.

இந்தக் கோடை விடுமுறையில், நீங்களும் உங்கள் பகுதியில் இருக்கும் நூலகத்துக்குச் சென்று பாருங்கள். அங்கே உங்களுக்காக, அலமாரிகளில் நண்பர்கள் காத்திருப்பார்கள். அந்தச் சிறந்த நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்!