Published:Updated:

வெண்ணிலா 5 ஆம் வகுப்பு 'பி'பிரிவு

பிரேமா நாராயணன் படங்கள் : ஆ.முத்துக்குமார்

''வணக்கம்... வாங்க அம்மா!''

சிறு வெண்கல மணியின் ஒலி போல குரல் ஒலிக்க, கைகுவித்து வரவேற்கிறார், வெண்ணிலா. சென்னை,    தி.நகரில் உள்ள, செ.நெ.நாயகம் தியாகராய நகர் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி.

அப்பா வெங்கடேசன், கார் டிரைவர். அம்மா பத்மாவதி, வீட்டு வேலை செய்பவர். உடன் படிக்கும் நண்பர்களை நேசிக்கும் விதமாக வெண்ணிலா செய்த ஒரு செயல், அவரைப் பள்ளியில் பிரபலமாக்கி இருக்கிறது.

''இந்த வருஷம் நடந்த சென்னை புத்தகக் காட்சியில், பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்துச்சு. ஆரம்பப் பள்ளிகளில் இருந்து, 144 மாணவர்கள் கலந்துக்கிட்டாங்க. அதில், எங்க பள்ளியிலருந்து 12 பேர் கலந்துக்கிட்டோம். போட்டியில் முதல் பரிசு, 3,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள். நமக்குப் பிடிச்ச புத்தகங்களை நாமே தேர்வுசெய்யலாம். அதில், எனக்கு முதல் பரிசு கிடைச்சது'' என்கிறார் வெண்ணிலா.

வெண்ணிலா 5 ஆம் வகுப்பு 'பி'பிரிவு

பரிசு பெற்ற வெண்ணிலாவை, புத்தகங்களைத் தேர்வு செய்யச் சொன்னார்கள். தனக்காக 2,000 ரூபாய்க்கு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார். மீதி 1,000 ரூபாய்க்கு, தன்னுடன் வந்து போட்டியில் கலந்துகொண்டு பரிசு கிடைக்காத, தனது நண்பர்களைப் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளச் சொன்னார்.

''இதைப் பார்த்து, அங்கே இருந்தவங்க நெகிழ்ச்சியில் திகைச்சுட்டாங்க. வெற்றியின் பயனை தான் மட்டுமே அனுபவிக்காமல், மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் குணம் எல்லோருக்கும் வராது. அந்தக் குணம், இந்தச் சின்ன வயதிலேயே வெண்ணிலாவிடம் இருக்கு'' என்று பெருமையுடன் சொல்கிறார், தலைமை ஆசிரியை மகாலெட்சுமி.

இந்தப் பள்ளியில், ஒவ்வொரு வகுப்பிலும் நன்னடத்தைக்கான தேர்தல் நடத்தப்பட்டு, பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள், தாங்கள் விரும்பும் 'நன்னடத்தை’ வேட்பாளருக்கு ஓட்டுப் போடலாம். அதிக ஓட்டுகள் வாங்கிய மாணவன் அல்லது மாணவிக்குப் பரிசு வழங்கப்படும். இந்தத் தேர்தலிலும் அமோக வெற்றிபெற்றவர், வெண்ணிலாதான்.

வெண்ணிலா 5 ஆம் வகுப்பு 'பி'பிரிவு

தான் பரிசாகப் பெற்ற புத்தகங்களைக் கைகளில் அள்ளியபடி வந்தார் வெண்ணிலா. ''எனக்குப் பரிசு கிடைச்சு, என்கூட வந்தவங்களுக்குக் கிடைக்கலைன்னதும், வருத்தமா இருந்துச்சு. அதனாலதான் அவங்களையும் புத்தகங்கள் வாங்கிக்கச் சொன்னேன். பிடிச்ச புத்தகங்களை அவங்க எடுத்துக்கிட்டப்போ, சந்தோஷப்பட்டாங்க. அதைப் பார்த்த எனக்கும் சந்தோஷம். அந்த சந்தோஷம், 3,000 ரூபாய்க்கும் நானே புத்தகங்கள் வாங்கி இருந்தா கிடைச்சிருக்குமா அம்மா?'' என்கிறார் வெண்ணிலா.

வெண்ணிலா தேர்வுசெய்த புத்தகங்கள், அவருடைய முழுமையான ஆளுமையையும் எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. மகாத்மா காந்தியின் சத்திய சோதனை, பாரதிதாசன் எழுதிய தேன்தமிழ்க் கவிதைகள், பாரதியாரின் சமூகம், திருக்குறள், கல்பனா சாவ்லா, விவேகானந்தர் என ஒவ்வொன்றும் அற்புதமான புத்தகங்கள்.

''வெண்ணிலா எப்பவுமே நண்பர்களுக்காகப் பல விஷயங்களை விட்டுக்கொடுப்பா. ரப்பர், பென்சில்னு  எது இல்லைன்னாலும் கொடுத்து ஹெல்ப் பண்ணுவா. அன்றைக்கு எங்களையும் புத்தகங்கள் எடுத்துக்கச் சொன்னபோது, எங்க சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இதுக்காகவே அவள்கிட்டே மறுபடியும் போட்டியில் தோற்கலாம்'' என்று சொல்லி, வெண்ணிலாவை நட்புடன் அணைத்துக்கொள்கிறார்கள் நண்பர்கள்.  

பள்ளியில் நடக்கும் போட்டிகளிலும் நட்சத்திரமாக ஜொலிக்கிறார் வெண்ணிலா. ''குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியம், கதைப் போட்டி என எதையும் விடமாட்டாள். மெஹந்தியும் கோலங்களும் நன்றாகப் போடுவாள். அன்பும் புத்திசாலித்தனமும் நிறைந்தவள் வெண்ணிலா'' என்கிறார், வகுப்பு ஆசிரியை சாந்தி.

மிகவும் பிடித்த பாடம், கணிதம். அதில், எப்போதும் நூற்றுக்கு 100 வாங்கும் வெண்ணிலாவின் லட்சியம், டாக்டர் ஆவது.

''நிறையப் பேர், காசு கொடுத்து வைத்தியம் பார்த்துக்க முடியாமக் கஷ்டப்படுறாங்க. டாக்டருக்குப் படிச்சா, அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாமே...'' என்று ஈரம் மிக்க வார்த்தைகளை உதிர்த்துச் சிரிக்கிறாள், அந்தக் குட்டி நிலா!