வி.எஸ்.சரவணன் படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

''கதை படிக்கிறது உங்களுக்குப் பிடிக்கும்தானே... படிக்கப் படிக்க ஆவலை அதிகரிக்கும் கதைதான் 'மகிழ்ச்சியான இளவரசன்’.
ஒரு நாடே கொண்டாடிய இளவரசனுக்கு, துன்பம் என்றால் என்னவென்றே தெரியாது. அவன் இறந்த பிறகு, மிகப் பெரிய சிலை வைக்கிறார்கள். பெரிய சிலையான அவன், அந்த நாட்டில் நடக்கும் துன்பங்களை அப்போதுதான் பார்க்கத் தொடங்குகிறான். வருத்தப்பட்டுக் கண்ணீர்விடுகிறான். இந்த நிலையில், அந்தச் சிலையின் மேல் ஒரு குருவி அமர்கிறது. அந்தக் குருவியின் உதவியோடு, துன்பப்படுபவர்களுக்கு சிலை இளவரசன் எப்படி உதவுகிறான் என்பதே கதை.

அழகான கற்பனை. அற்புதமான நடையில் உங்களைச் சுண்டி இழுப்பான், இந்த மகிழ்ச்சியான இளவரசன். இது தவிர, 'இராப்பாடியும் ரோஜாப் பூவும்’, 'சுயநல அரக்கன்’, 'நல்ல நண்பன்’, 'புனிதமான ராக்கெட்’ போன்ற கதைகளும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.
ஆஸ்கார் வைல்டு எழுதிய இந்தக் கதைகளை, எளிதில் ஈர்க்கும்படியாக அழகாக மொழிபெயர்த்திருக்கிறார், யூமா வாசுகி. கதைகளை நேசிக்கும் நண்பர்கள், தவறவிடக் கூடாத புத்தகம்.
உலக அளவில், சினிமாவில் முக்கியமானவர்கள் சிலரை அறிமுகம் செய்கிறது, 'ஒளிநிழல் ஆளுமைகள்’.
பார்த்தவுடன் நமக்கு சிரிப்பை வரவைப்பது மிக்கி மவுஸ். இந்த மிக்கி மவுஸின் பெயரை விமானம், போர்க் கப்பல்களுக்குக்கூட வைத்திருந்தார்கள். பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தனது 20-வது வயதில் 'ஆலிஸின் அற்புத உலகம்’ என்ற படத்தை எடுத்தார் வால்ட் டிஸ்னி.

சார்லி சாப்ளின், பல தடைகளைத் தாண்டி வெற்றி நடை போட்ட கதை. 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தை எடுத்த மஜித் மஜிதி, ஈரான் இயக்குநர் மொசான் மெக்மல்பப், நம்நாட்டுத் திரை மேதைகளான சத்யஜித் ரே, நடிகவேள் எம்.ஆர்.ராதா பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
படித்தவுடன், இதில் குறிப்பிட்டிருக்கும் திரைப்படங்களைத் தேடும் வகையில் சுவையோடு எழுதியிருக்கிறார், தேவிகாபுரம் சிவா.
''ஆந்தை மாதிரி முழிச்சிட்டிருக்கான் பாரு'' என்று தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருப்பவர்களைச் சொல்வார்கள்.
பகலில் ஓய்வு எடுத்துவிட்டு, இரவில் உணவு தேடும் பறவைகளுக்குப் பெயர்தான், இரவாடிகள். ஆங்கிலத்தில், நாக்டர்னல் (Nocturnal) என்பார்கள். உங்களுக்குத் தெரிந்த இரவாடிகள் எத்தனை? ஆந்தையைத் தவிர வேறு ஏதும் தோன்றவில்லைதானே... உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதமாக, 'தமிழகத்தின் இரவாடிகள்’ புத்தகத்துக்குள் நுழைந்தால், 30-க்கும் மேற்பட்ட இரவாடிகளைச் சந்திக்கலாம்.

வண்ணப் புகைப்படங்களுடன் இதில் இருக்கும் ஒவ்வொரு தகவலும் சுவையானது. சிறந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞரான ஏ.சண்முகானந்தம் தொகுத்து, பயனுள்ள செய்திகளால் இந்தப் புத்தகத்தைச் சிறப்பாக்கி இருக்கிறார். பார்த்த எவரும் உடனே வாங்கும் வகையில் அழகாக வெளியிட்டிருக்கிறது, தடாகம் பதிப்பகம்.
இந்திய விஞ்ஞானிகள் பற்றி மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், 'அக்னிச் சுடர்கள்’ இருக்கிறது. இதில், ஜே.பி.எஸ்.ஹல்தானி மற்றும் லாரி பேக்கர் ஆகிய இருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களும் இந்தியாவில் குடியேறியவர்களே.

சர்.சி.வி. ராமன், நோபல் பரிசு பெறுவதற்குக் காரணமான உபகரணங்களை வாங்குவதற்காக, அவர் செலவிட்டது, 200 ரூபாய் மட்டும்தானாம். இதுபோல, நமக்கு நன்கு தெரிந்த விஞ்ஞானிகளைப் பற்றித் தெரியாத பல சுவையான செய்திகள் இதில் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள், 1808-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள். 139 ஆண்டுகளில் இந்தியாவில் சுடர்விட்ட விஞ்ஞானிகள் பற்றிய ஆவணமாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
39 விஞ்ஞானிகள் பற்றிய செய்திகளை, அரவிந் குப்தா மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார். படிப்பதற்குச் சுவையாகவும் எளிமையாகவும் மொழியாக்கம் செய்திருக்கிறார், சிறுவர் எழுத்தாளர் விழியன். ஒவ்வொரு வீட்டு நூலகத்திலும் தவறாமல் இடம்பிடிக்க வேண்டி புத்தகம்.