Published:Updated:

பள்ளிக்கு வந்த பாம்பு நண்பர்கள் !

இ.கார்த்திகேயன்

'' 'பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்’ என்பார்கள். ஆனால், பாம்புகளைக் கண்டு நடுங்க வேண்டிய அவசியமே இல்லை'' என்கிறார், மதுரை 'நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட்’ நிறுவனர் ரமேஷ்.

பாம்புகள் பற்றிய விழிப்பு உணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த, தூத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கரை எஸ்.ஆர்.எம்.எஸ்.மெட்ரிக் பள்ளியில், ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் ரமேஷ். ஆர்வமும் த்ரில்லும் கலந்த முகங்களுடன் மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர்.

''நாம் தொந்தரவு செய்யாத வரை, பாம்புகள் நம்மை ஒன்றும் செய்யாது. பாம்புகளில் 2,700 வகை உண்டு. இந்தியாவில் உள்ள 260 வகையான பாம்புகளில், 50 இனங்களே விஷம் உள்ளவை. பாம்பு கடித்த இடத்தில், மனிதன் கடித்ததுபோல வரிசையாக பற்களின் தடம் பதிந்திருந்தால், அது விஷக்கடி அல்ல. கடித்த இடத்தில் இரண்டு பற்கள் மட்டும் பதிந்து, வீக்கமும் கடுமையான வலியும் உணரப்பட்டால், அது விஷக்கடி'' என்று எளிமையாகச் சொல்லி வியக்கவைத்தார், ரமேஷ்.

பள்ளிக்கு வந்த பாம்பு நண்பர்கள் !

''ஒருவரை பாம்பு கடித்துவிட்டால், பதட்டப்படக் கூடாது. வேகமாக நடக்கக் கூடாது. பாம்பு கடித்த இடத்தில், ரப்பர் டியூப்பால் லேசான இறுக்கத்துடன் கட்ட வேண்டும். காயம்பட்ட இடத்தை, ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவ வேண்டும். பக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ, மருத்துவ மனைக்கோ அழைத்துச் செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிகிச்சை அளிக்க மாட்டார்கள். எனவே, அரசு மருத்துவமனைக்குச் செல்வதே நல்லது'' என்றார்.

பாம்புகள் பற்றி மேலும் பல தகவல்களைச் சொன்ன பிறகு, பாம்பைக் கைகளில் பிடிக்கச் சொல்லி மாணவர்களைக் கூப்பிட்டார். பலர் பம்மினாலும் சிலர் துணிச்சலோடு முன் வந்து, பாம்பைக் கையில் பிடித்தார்கள். பிறகு, ''இனிமே பாம்பைக் கண்டு பயமே இல்லைப்பா'' என்றபடி மாணவர்கள் மகிழ்ச்சியாக வகுப்புகளுக்குச் சென்றனர்.