பென் டிரைவ் !
கே.ஜி. வகுப்பு படிக்கும்போதே பட்டம் பெற்று விட்டார்கள் சென்னை, மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மழலைகள். இங்கு சிறப்பாகப் படித்து, அடுத்த வகுப்புக்கு புரொமோஷனில் செல்வதைக் கல்லூரியில் பட்டம் பெறுவதைப்போல சுட்டிகளுக்குப் பட்டம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு பட்டம் பெற்றது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ''வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிறு வயதிலேயே மாணவர்கள் மனத்தில் ஆழமாகப் பதியவைப்பதற்காகவே, இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம்'' என்று பள்ளி நிர்வாகிகள் கூறினர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் மற்றும் பாடல்கள் எனப் பார்வையாளர்கள் அசந்துபோகும் அளவுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன.
பலே பட்டதாரிகள்!
பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில், விலை குறைவான, 'பிரெய்லி’ பிரின்டரை, இந்திய வம்சாவளிச் சுட்டி தயாரித்துள்ளார்.
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, சாண்டாகிளாரா பகுதியில், ஏழாம் வகுப்பு படிக்கிறார் சுபம் பானர்ஜி. குழந்தைகள் தாங்களாகவே பொம்மைகளை உருவாக்கி விளையாடும், 'லெகோ’ நிறுவன விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு, 'பிரெய்கோ’ என்னும் பிரெய்லி பிரின்டரை, பானர்ஜி தயாரித்துள்ளார். வெளிச்சந்தையில் இத்தகைய பிரின்டர்களின் விலை, 1.25 லட்சம் ரூபாய். பானர்ஜி தயாரித்துள்ள பிரெய்கோ, 22 ஆயிரம் ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த எடையுள்ள இந்த பிரின்டரின் வடிவமைப்புக்கான மென்பொருள் மற்றும் செயல் விளக்கத்தை, அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளும் எளிதாக இயக்கும் வகையில் உள்ள இந்த பிரின்டரில், ஆங்கில எழுத்துகளில், 'ஏ’ முதல் 'இசட்’ வரையிலான ஒவ்வொரு எழுத்தும், ஏழு வினாடிகளில் பிரின்ட்டாகும். அடுத்த கட்டமாக, 0 முதல் 10 வரையிலான எண்களை, பிரெய்லி முறையில் பிரின்ட் செய்யும் மென்பொருளைத் தயாரிக்க உள்ளதாகச் சொல்கிறார், சுபம் பானர்ஜி.
ஹாட்ஸ் அப் பானர்ஜி!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர், ஆன் கெட்டீஸ் (Anne Geddes). லண்டன் டவர் பாலம் அருகில், 3,400 டெடி பியர் பொம்மைகளை வைத்து, அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இனம்தெரியாத ஒருவித பாக்டீரியா பரவி, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதனால், உயிர் இழப்பு அதிகமாகிக்கொண்டு போவதைத் தடுத்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்தத் திட்டத்துக்கு 'றிக்ஷீஷீtமீநீtவீஸீரீ ளிuக்ஷீ ஜிஷீனீஷீக்ஷீக்ஷீஷீஷ்s’ என்று பெயர் சூட்டினார்.
டெடிகேட் ஐடியா!
தென்கொரியாவில் வசிக்கும் புகைப்பட ஆர்வலர் ஒருவர், புகைப்படக் கேமரா வடிவில் காபி ஷாப் ஒன்றைக் கட்டியுள்ளார். விமானப் படை ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்த இவருக்கு, நீண்ட காலமாக கேமரா வடிவில் கட்டடம் கட்ட வேண்டும் என்று ஆசை.

இரண்டு அடுக்குகள்கொண்ட இந்த கேமரா காபி ஷாப், சியோல் நகரவாசிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இந்தக் கட்டடத்தில், பல்வேறு விதமான கேமரா மாதிரிகளையும், புகைப்படங்களையும் கண்காட்சியாக வைத்துள்ளார். இந்த கேமரா காபி ஷாப்பில் தேநீர் அருந்த வேண்டும் என்றால், காத்திருக்க வேண்டுமாம்.
வியாபாரம் க்ளிக் ஆகிடுச்சு!