Published:Updated:

பக்கத்தில் நிற்கும் எதிரி!

பக்கத்தில் நிற்கும் எதிரி!

பக்கத்தில் நிற்கும் எதிரி!

''இது, ரொம்பச் செலவு பிடிக்கிற விளையாட்டுனு தெரிஞ்சிருந்தும், 'உனக்கு ஆர்வம் இருந்தால், விளையாடு. மற்றதை நான் பார்த்துக்கிறேன்’னு அப்பா சொன்னார். அவர் சந்தோஷப்படுகிற மாதிரி தேசிய அளவில் பதக்கம் வாங்கி இருக்கேன்'' என்கிறார் செஷாந்த் வரதன்.

தேனி, கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் செஷாந்த், ஸ்குவாஷ் விளையாட்டில், தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் தட்டி வந்துள்ளார்.

''எதிரியைப் பக்கத்திலேயே வெச்சுக்கிட்டு ஜெயிக்கிற த்ரில் விளையாட்டுதான் ஸ்குவாஷ். இதில் நம்மோடு மோதும் வீரர், நமக்குப் பக்கத்தில் நிற்பார். சுவரில் நாம் அடிக்கும் பந்து, திரும்பி வரும்போது எதிராளி தடுத்துவிட்டால், அவருக்கு ஸ்கோர். அப்படி நடக்காமல், நாமே லாகவமாக அடிச்சுத் தடுக்கணும்'' என்று ஸ்குவாஷ் விளையாட்டுக்கு முன்னுரை கொடுக்கிறார் செஷாந்த்.

பக்கத்தில் நிற்கும் எதிரி!

5-ம் வகுப்பு படிக்கும்போது, சென்னையில் உள்ள உலக ஸ்குவாஷ் அகாடமியில் சேர்ந்திருக்கிறார் செஷாந்த். ''அங்கே ஆரம்பிச்ச சிறப்புப் பயிற்சி, எனக்கு நல்ல அனுபவமா இருந்துச்சு. 7-ம் வகுப்பு படிக்கும்போது, மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம் பிடிச்சேன். அது எனக்கு பெரிய தன்னம்பிக்கை கொடுத்தது. சமீபத்தில், தமிழ்நாடு அணியின் சார்பாக குழுப் போட்டியில், தேசிய அளவில் 2-ம் இடம். கால் இறுதி, அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்றேன். இறுதிப் போட்டியில் டெல்லி அணியுடன் விளையாடி, வெள்ளிப் பதக்கம் வென்றேன்'' என்கிறார் செஷாந்த்.

விரைவில், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான இண்டியன் ஜூனியர் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

பக்கத்தில் நிற்கும் எதிரி!

''சென்னை ஸ்குவாஷ் அகாடமியில் நான் பயிற்சி எடுத்தபோது, சர்வதேச ஸ்குவாஷ் வீரர்களான தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா, ஹரிதர், ரவிதீக்ஷித், சௌரவ் கோசல் போன்ற பலரை சந்திச்சு இருக்கேன். அவங்க என்னை ஊக்கப்படுத்தி, விளையாட்டு நுணுக்கங்களைச் சொல்லித் தந்திருக்காங்க. ஒலிம்பிக் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம்  ஜெயிக்கிறது என்னோட லட்சியம்!'' என்கிற செஷாந்த் முகத்தில், நம்பிக்கை மின்னல்.