Published:Updated:

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

''ஹலோ ஜீபா... இமயமலை உயர்ந்துகொண்டே செல்கிறது என்பது உண்மையா?''

- இ.கருமலைச்சாமி, மைலம்பாடி.

''இமயமலை உருவானதே, ஒரு சுவாரஸ்யமான பூகோள வரலாறு. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப்பகுதி, டெத்திஸ்(Tethys)கடலில் மிதந்துவந்து, ஆசியக் கண்டத்தின் மீது மோதியது. இரு கண்டங்களும் மிக அதிக வேகத்தில் மோதிக்கொண்டதன் விளைவாக, உருவான மலைதான் இமயமலை. இந்த மோதல், மிகவும் வலிமையானதாக இருந்ததால், இன்றும் ஆண்டுக்கு சராசரியாக 5 சென்டிமீட்டர் இந்திய நிலப்பகுதி, ஆசியக் கண்டத்துக்கு அடியில் சென்றுகொண்டிருக்கிறது. இதனால், இமயமலையின் அடிவாரத்தில் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டுவருகிறது. இந்த அழுத்தம் காரணமாகவே, இமயமலைப் பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

மை டியர் ஜீபா...

'இமயமலை வளர்கிறதா?’ என்றால், 'ஆமாம்’ என்றுதான் சொல்ல வேண்டும். இண்டோ - ஆஸ்திரேலிய தட்டானது, திபெத்தியப் பீடபூமிக்குக் கீழே இழுக்கப்படுவதால், அந்தப் பீடபூமி மேல்நோக்கி நகர்கிறது. ஆண்டுக்கு 67 மில்லிமீட்டர் அளவுக்கு இந்தத் தட்டு நகர்கிறது. அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில், அந்தத் தட்டானது ஆசியாவுக்குள் 1,500 மி.மீ. வந்துவிடும். இதனால், இமயமலையும் ஆண்டுக்கு 5 மி.மீ. அளவுக்கு உயர்கிறது என்கின்றனர் பூகோள வல்லுநர்கள்.''

''ஹாய் ஜீபா... சதுரங்கத்தைக் கண்டறிந்தவர் யார்? அதில் உள்ள ஒவ்வொரு காயையும் நகர்த்த, எப்படி... யார் கண்டறிந்தார்?''

- இரா.வெங்கடேஷ் பிரசாத், உடுமலை.

''இப்போதும் புழக்கத்தில் இருக்கும் மிகப் பழைமையான விளையாட்டுகளில் சதுரங்கமும் ஒன்று. கிட்டத்தட்ட 1,500 வருடப் பாரம்பரியம்கொண்டது இந்த விளையாட்டு. கி.மு. 6-ம் நூற்றாண்டில் இந்தியாவில்தான் முதன்முதலில் தோன்றியிருக்கிறது. இங்கிருந்து பெர்ஷிய நாட்டுக்குப் போயிருக்கிறது. அரேபியர்கள், பெர்ஷியாவைப் போரில் கைப்பற்றியபோது, இஸ்லாமியர்களாலும் விளையாடப்பட்டு,  தென் ஐரோப்பா முழுவதும் பரவியது. சதுரங்கத்தின் இப்போதைய வடிவம், 15-ம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம். 19-ம் நூற்றாண்டின் மத்தியில்தான், நவீன செஸ் டோர்னமென்ட் போட்டிகள் தொடங்கப்பட்டன. முதன்முதலில் சர்வதேச செஸ் சாம்பியனுக்கான போட்டி, 1886-ல் ஆரம்பிக்கப்பட்டது.

மை டியர் ஜீபா...

அந்தக் காலத்தில் துணிவு, வீரம், பொறுமை, விடாமுயற்சி, முடிவெடுக்கும் திறன் மற்றும் எச்சரிக்கை உணர்வு போன்ற குணநலன்களை மக்கள் கற்றுக்கொள்ள, போர் ஒன்றுதான் சிறந்த பள்ளி என்று மன்னர்கள் நம்பினார்கள். எனவேதான், போர்க்களத்தை மாதிரியாக வைத்து, சதுரங்க விளையாட்டு வடிவமைக்கப்பட்டது. போரில் பங்கேற்கும் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நான்கு படைகளும் இந்த விளையாட்டில் இருந்ததால்தான், இதை 'சதுர் அங்கம்’ என்ற பொருளில் 'சதுரங்கம்’ என்று சொன்னார்கள். எதிரி நாட்டு மன்னனைப் போரில் வெல்வது போல, சதுரங்கத்திலும் காய்களை நகர்த்தி, எதிராளியின் ராஜாவைத் தோற்கடித்து வெளியேற்ற வேண்டும்.

பகடைக் காய்களை வீசி, அதில் வரும் எண்களை வைத்து, அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் விளையாடியதுபோய், சதுரங்கத்தில் மூளையை உபயோகிக்க வேண்டும் என்பதால், அது ஒரு 'ராஜ விளையாட்டு’ (The Royal game) எனப்படுகிறது.''

''ஹாய் ஜீபா... தமிழ்நாடு அரசு சின்னத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரின் கோபுரம் இடம்பெற்றதற்கான காரணம் என்ன?''

- என்.கார்த்திக், தொட்டபுரம்.

''ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் திருக்கோயில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானது. கலை அம்சம் பொருந்திய இந்தக் கோயில், வைணவர்கள் வணங்கும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. 192 அடி உயர கோபுரம், அகலம் குறுகியிருப்பதால், 11 நிலைகளைக்கொண்ட அதன் உயரம், ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கும்.

மை டியர் ஜீபா...

1947-49-ம் ஆண்டுகளில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தார். அப்போது, தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டார். அப்போதைய மாகாண சபை உறுப்பினராக இருந்த, 'ரசிகமணி டி.கே.சி’ என்று அழைக்கப்பட்ட சிதம்பரநாத முதலியார்தான், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தை முன்மொழிந்தார்.  ஓமந்தூராரை அடுத்து, முதல்வராக வந்த பி.எஸ்.குமாரசுவாமி ராஜா, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன்முதலில் தமிழக அரசின் சின்னமாக அறிவித்தார். தற்போதைய தமிழக அரசுச் சின்னம் 1956-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது. 1968-ல், 'தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது.''

''டியர் ஜீபா... உலகின் அதிவேக புல்லட் ரயில்கள் எங்கு இயக்கப்படுகின்றன?''

- விக்னேஷ் பாலாஜி, மயிலாடுதுறை.

''ஐரோப்பியர்களும் ஆசியர்களும்தான் தற்போது உலகின் அதிவேக ரயில்களை இயக்கிக்கொண்டிருப்பவர்கள். உலகின் அதிவேக புல்லட் ரயில்கள், 'ஷாங்காய் மக்லெவ்’ (Shanghai Maglev)  மற்றும் 'ஹார்மனி சிஆர் ஹெச் 380 ஏ’(Harmony CRH 380A). 'ஷாங்காய் மக்லெவ்’ ரயிலின் அதிகபட்ச வேகம், மணிக்கு 430 கிலோமீட்டர். சராசரியான வேகம், மணிக்கு 251 கிலோமீட்டர். இவை, 2004-ம் ஆண்டு முதல் இயக்கப்படுகிறது. முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்ட அதிவேக காந்தப்புல ரயில்வே பாதையில், ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையம் வரை இது செல்கிறது.''

மை டியர் ஜீபா...

''டியர் ஜீபா, 2025-ல் மக்கள்தொகையில் இந்தியா முதல் இடம் பிடித்துவிடும் என்ற கருத்துக்கணிப்பு உண்மையா?''

       - எஸ்.அரவிந்த் ராம்சுந்தர், புதுக்கோட்டை.

''ஆமாம். 2011 கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியை எட்டிவிட்டது. இது, உலகின் மொத்த மக்கள்தொகையில் 17.5 சதவிகிதம். உலக அளவில், அதிகமான மக்கள்தொகையில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருப்பது சீனா. ஆனால், 2050-ல், சீனாவையும் முந்திவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்போது, நம் நாட்டின் மக்கள்தொகை 160 கோடியை எட்டிவிடுமாம்.''