சைபர்சிம்மன் படங்கள் : ப.சரவணகுமார்

உங்களில் பலருக்கு, படம் வரைவதில் ஆர்வமும் திறமையும் இருக்கலாம். விடுமுறையில், உங்கள் ஓவியத் திறமையை வளர்த்துக்கொள்ளலாமே... காகிதமும் கலர் பென்சிலும் இல்லாமலே ஓவியம் வரையலாம். இணையத்தில் எத்தனையோ விஷயங்களைச் செய்ய முடியும்போது, இது முடியாதா? ஓவியம் வரைய உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன. அவற்றில் சில...
ஸ்கெட்ச்டாய்(http://sketchtoy.com) இணையதளம் மிகவும் எளிமையானது. இதில், நீங்கள் வரைவதற்கான ஆன்லைன் கேன்வாஸ் இருக்கும். முகப்புப் பக்கத்தில் நடு நாயகமாக இருக்கும் இந்த இணையப் பக்கத்தில், நீங்கள் வரையத் தொடங்கலாம். எதைக்கொண்டு வரைவது? உங்கள் மவுஸ்தான் தூரிகை, பென்சில் எல்லாம். மவுசை இந்தப் பக்கத்தின் மீது வைத்து, மனதில் உள்ள சித்திரத்தை வரையலாம்.

கொஞ்சம் மேலே பார்த்தால், சின்னச் சின்ன கட்டங்கள் இருக்கும். அவைதான் வரைவதற்கான ஆயுதங்கள். சைஸ் எனக் குறிப்பிடப்பட்ட கட்டத்தை கிளிக் செய்தால், உங்கள் தூரிகையின் அளவைப் பெரிதாகவோ, சின்னதாகவோ ஆக்கலாம். இதன்மூலம், ஓவியத்துக்கான கோட்டின் அளவைத் தீர்மானிக்கலாம். அதன் அருகே உள்ள கட்டத்தை கிளிக் செய்தால், ஓவியத்தில் உள்ள கோடுகளை அசையச் செய்யலாம். அதன் அருகே உள்ள கட்டத்தை கிளிக் செய்தால், வண்ண வண்ண வட்டங்கள் வரும். அவற்றில் தேவையான வண்ணத்தைத் தேர்வு செய்து, வண்ணம் தீட்டலாம்.

நீங்கள் நினைத்தபடி ஓவியம் வரவில்லையா? கவலையே வேண்டாம். வரைந்த கோட்டை அழிக்கும் வசதியும் இருக்கிறது. இதற்காகவே, அண்டூ (Undo) கட்டம் உள்ளது. அதன் அருகே, இணைய ரப்பர் வசதி உள்ளது. ஓவியத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அழித்துவிட்டுச் சரிசெய்யலாம். ஓவியம் வரைந்தவுடன், அதைச் சேமித்துவைக்கலாம். பிறகு, புதிய கட்டத்தை கிளிக் செய்து, புதிய ஓவியத்தை வரையலாம்.

நீங்கள் வரைந்து மகிழ்வதற்கான 'இணையப் பலகை’ என்று ஸ்கெட்ச்டாய் தளத்தைச் சொல்லலாம். உங்கள் ஓவியத்தை நண்பர்களுக்கு இ-மெயில் மூலமாகவோ, ட்விட்டர் மூலமாகவோ அனுப்பலாம். ஃபேஸ்புக் மூலமும் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் நண்பர்கள், நீங்கள் வரைந்த ஓவியத்தைப் பார்த்து ரசிப்பதோடு, நீங்கள் வரைந்த விதத்தையும் பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது, நீங்கள் வரைந்த விதம், ஆக்ஷன் ரீப்ளே போல ஒவ்வொரு அசைவாகத் தோன்றும். சூப்பர்தானே?
