பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பலருள் காஞ்சிபுரத்து இளைஞரும் ஒருவர். இவர், நிறைய படிப்பவர்; கவிதைகள் எழுதுபவர்; உற்சாகமான மனநிலையிலேயே எப்போதும் இருப்பவர். ‘சினிமாவுக்குப் பாடல் எழுதப்போகிறேன்' என பாலுமகேந்திராவிடம் சொன்னதும், அவருக்குக் கொஞ்சம் வருத்தம். ஆனாலும் வாழ்த்தி அனுப்பினார். மில்லினியம் ஆண்டின் இறுதியில் திரையிசைக்குள் புகுந்தார் அந்தக் கவிஞர். அந்த இளைஞரின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என, அப்போது எவரும் பெரிதாக நம்பவில்லை. ஆனால், அவரின் வளர்ச்சியை எல்லோரும் அண்ணாந்து பார்த்தோம். எல்லாத் தொலைக்காட்சியிலும் பண்பலையிலும் அவரின் பாடல்கள்தான். சீமானால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழுக்கே பெருமை சேர்த்த அந்த இளைஞர்தான் நா.முத்துக்குமார். இவரின் வரிகள், பலருக்கு வாழ்க்கை கொடுத்தன... பலரைக் கண்ணீர் உகுக்கவைத்தன... நம்பிக்கை விதைகள் தெளித்தன.
கண்ணீர் துடைக்கப் பட்டாம்பூச்சி விற்பவன்
காஞ்சிபுரத்தின் கன்னிகாபுரம் கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்தவர். கருவில் இருக்கும்போதே கதை சொன்ன தாயை தன் மூன்றரை வயதில் இழந்தார். வீட்டுப்பாடம் செய்யாத நேரத்தில் தாயின் மரணச் செய்தியால் இவரைப் பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிச்செல்ல, அதை சந்தோஷமாக எடுத்துக்கொண்ட பால்யம் மாறாத பருவம் அது. பின்னாளில் இவர் மீட்டிய ஆனந்த யாழுக்கு நரம்பெடுத்துத் தந்தது அவரின் தந்தையின் கைகள். தனி ஒருவனாக மகனை வளர்த்திட்ட அவரே, இவருக்கு புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தையும் தூண்டினார். வாங்கும் சம்பளம் போதாமல் கடன் வாங்கி புத்தகங்கள் வாங்குவாராம் இவரின் தந்தை. அவர்கள் வசித்த அந்தச் சின்ன வீட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் இருந்தனவாம்.
``என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!"
- கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்
அப்பா புண்ணியத்தில் வீட்டுக்கு ‘கணையாழி’ தொடங்கி ‘தாமரை’ வரை பல சிறு பத்திரிகைகளும், ‘அம்புலிமாமா’, ‘கோகுலம்’, ‘காமிக்ஸ்’ புத்தகங்களும் வருமாம். புத்தகங்களின் உலகுக்குள் மெள்ள நுழைந்தவருக்கு, தாயின் வாசனை மறந்து புத்தக வாசனையே துணையானது. வீட்டின் முகடு வழியே பார்த்தால் வானம் தெரியும் அளவுக்கு ஆங்காங்கே ஓட்டைகள். இவர் ஒருமுறை தன் தந்தையிடம் தயங்கித் தயங்கி, ‘ஃப்ரெண்ட்ஸ் வர்றதா சொல்றாங்கப்பா... இந்த வீட்டுக்கு எப்படிக் கூட்டிட்டு வர்றது?' என வருந்தியிருக்கிறார். அதற்கு, ‘உன் ஃப்ரெண்ட்ஸைக் கூட்டிட்டு வர்றதா இருந்தா நைட்ல கூட்டிட்டு வா. இப்படி வீட்டுக்குள்ள படுத்துக்கிட்டே நட்சத்திரங்களை அவங்களால பார்க்க முடியுமா?’ எனச் சொல்லியிருக்கிறார் தந்தை நாகராஜன்.
நினைவுச்சுழலில் நீந்தித் தவித்தவன்
சிறு வயதிலேயே அருவி, ஆக்காட்டிக் குருவி, ஆரஞ்சு மேகம் என்றெல்லாம் கவிதை எழுதத் தொடங்கிவிட்டார். அவற்றையெல்லாம் திலகவதி ஆசிரியை படித்துக்காட்டி அளவுக்கு மீறி உற்சாகப்படுத்துவாராம். வாழ்வியலில் அழகியல் தேடியவர், அப்போது கண்ட, கேட்ட எல்லாவற்றையும் இப்போதும் நினைவுக் குறிப்புகளில் ஏற்றிவைத்திருக்கிறார். மாட்டுவண்டியில் பள்ளிக்கூடம் போனபோது, சேகரண்ணன்தான் டிரைவர். வழக்கமாக, பசி தாங்க முடியாமல் பிள்ளைகளின் டிபன் பாக்ஸ்களில் பாதியைப் பங்குபோட்டுக்கொள்பவர், அன்றொரு நாள் இவரின் மீன் வறுவலை முழுவதுமாகச் சாப்பிட்டுவிடுகிறார். தன் ஆயா சைவம் என்பதால், மீனையே வருடத்துக்கு ஒருமுறை சாப்பிடுபவர் எச்சில் ஊறக் காத்திருக்கையில், சேகரண்ணன் சாப்பிட்டதைப் பொறுக்க முடியாத கோபத்தில் ஆசிரியரிடம் போட்டுக்கொடுத்துவிடுகிறார். பத்து வருடங்கள் கழித்து யதேச்சையாக திரையரங்கில் சேகரண்ணனைப் பார்த்து மன்னிப்புக் கேட்க, அவர் இவரிடம் மன்னிப்புக் கேட்டு, இன்டர்வெல்லில் கோன் ஐஸ் வாங்கித் தருகிறார். ‘அந்தக் கோன் ஐஸில் மீன் குழம்பு வாசம் அடித்தது...' என ‘வேடிக்கை பார்ப்பவன்' தொடரில் எழுதியிருப்பார் முத்தண்ணன். இப்படி அசைபோடவும், வாசிப்பவர்களின் மனதை அலைக்கழிக்கவும் முத்தண்ணனின் ஃபிலிம் ரோலில் ஏகப்பட்ட மான்டேஜ் காட்சிகள் கிடக்கின்றன.
"மாடி வீட்டு முட்டாள்
மழை வரும்போது
குடையை ஏன்
திருப்பிப் போட்டிருக்கிறான்?"
என்று டிஷ் ஆன்டனாக்களைப் பற்றி நகைச்சுவையாகக் கவிதை எழுதிய அதே நேரத்தில்,
"ஒவ்வோர் அடகுக்கடை கம்மல்களிலும்
உலர்ந்துகொண்டிருக்கிறது
ப்ரியமில்லாமல் கழட்டிக்கொடுத்த
ஒரு பெண்ணின் கண்ணீர்த் துளி"
என்று வாழ்வியலையும் பெரும்பான்மைச் சமூகத்தின் வலியையும் பதிவுசெய்தார் முத்தண்ணன். அவரின் பேனாவில் வார்த்தைகள் ஊற்றெடுத்தன; கவிதைகள் பிரவாகமெடுத்தன. புகைவண்டியை ராட்சச உலோகப் பாம்பாக, வாழ்க்கையை ஒரு கொலாஜ் ஓவியமாக உருவகப்படுத்திப்பார்த்தார் முத்தண்ணன். வாழ்வும் காட்சியும் அவரின் கண்களுக்கு வருவதற்குள் தானாகவே ஒருமுறை உருமாறிக்கொண்டன.
காஞ்சிபுரத்தில் இளங்கலை இயற்பியல் படித்தவர், கவிதையின் மீதும் தமிழின் மீதும்கொண்ட பேரார்வத்தினால் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்தார். அதில் பல்கலைக்கழக முதல் மாணவராக வந்தவர், பிஹெச்.டி ஆராய்ச்சிக்காக ‘தமிழ்த் திரைப்படப் பாடல்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்யத் தொடங்கினார். பேசும்படம் காலம் தொடங்கி 2000-ம் ஆண்டு வரையிலான பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். ஊர் ஊராகச் சென்று பழைய பாடல் புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். தமிழின் முதல் பாடலாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி கவிஞர் பழநிபாரதி வரை எழுதிய பாடல்களின் புத்தகங்கள் மூட்டை மூட்டையாக அவரின் அறையில் குவிந்தன. குடும்பம், இயற்கை, தத்துவம், காதல்... எனப் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்ட பாடல்கள் ஒரு மழைக்காலப் பேராறாக இவரைக் கைநீட்டி அழைத்தன. இவரும் அதனுள்ளே குதித்து மூழ்கிப்போனார்.
படிப்பு முடிந்ததும் சில பத்திரிகைகளில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். அப்போதே சினிமாவில் உதவி இயக்குநராக வாய்ப்பு தேடி, கடைசியில் சிறுவயதில் பார்த்து வியந்த பாலுமகேந்திராவிடமே சென்று சேர்ந்தார். இவரின் ‘தூர்' கவிதையை எழுத்தாளர் சுஜாதா ‘கணையாழி' நிகழ்வில் வாசித்ததால் கவிஞர்கள் வட்டத்தில் இவர் முகம் நன்கு பரிச்சயமானது. அன்பைப் பொழிந்து ஒரு கோழிக்குஞ்சைப்போல அண்ணன்களின் பாசத்துக்குப் பாத்தியமாயிருந்தார். இவரைப் பற்றிப் பேச அறிவுமதி, சுகா, வெற்றி மாறன், ராம், சீமான், பாலா என அனைவரிடத்திலும் ஆயிரமாயிரம் கதைகள் இருக்கின்றன.
வருடம் 2000
சீமானின் ‘வீரநடை’ படத்தில் இடம்பெற்ற இவரின் முதல் பாடல் ‘முத்துமுத்தாய்ப் பூத்திருக்கும் முல்லைப் பூவைப் புடிச்சிருக்கு...’ என்று அவருடைய பெயருடனே தொடங்கும். அந்தப் பாடலில் பல உவமை, உருவகங்களைக் கையாண்டார். இன்று வரை தமிழ்த் திரைப் பாடல்களில் அதிக உவமை, உருவகங்கள்கொண்ட பாடல் அதுதான் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பாட்டின் ஒவ்வொரு வரியையும் பாடிப் பரவசப்பட்டார் சீமான். அந்தப் படம் வெளிவருவதற்குள் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு பாடல் எழுதவைத்தார் இசையமைப்பாளர் தேவா.
வருடம் 2003
‘வள்ளுவரின் குரலாய் ரெண்டு வரி இருக்கும் உதட்டைப் புடிச்சிருக்கு...' எனப் பெண்ணின் உதட்டை வள்ளுவரின் ஈரடிக் குறளுக்கு ஒப்புமைப்படுத்தினார். ‘சாமி' படத்தின் `புடிச்சிருக்கு...' பாடல் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது; பாடலாசிரியரையும் எல்லோருக்கும் பிடித்துப்போனது.
‘கல்லறை மேலே பூக்கும் பூக்கள்... கூந்தலைப் போய்தான் சேராதே...', ‘நெஞ்சுக்குள் நுழைந்தாய்... மூச்சினில் கலந்தாய்... என் முகவரி மாற்றிவிட்டாய்...' - ‘காதல் கொண்டேன்' படத்தின் பாடலில் ஒவ்வொரு வரியும் ஒரு தனிக்கவிதை. இப்படி கவிதைகளால் ஆன பல பாடல்களையும் எழுதியிருக்கிறார் முத்தண்ணன்.
வருடம் 2004
‘7ஜி ரெயின்போ காலனி' படத்தின் ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை...' பாடல் காதலர்களின் எவர்க்ரீன் விருப்பம். ஒருதலைக் காதலின் துயரத்தை, காதல் கைகூடாத ஆற்றாமையை, நினைவில் கிடந்து அனத்தும் காதலின் நினைவுகளைப் பாடலாக இயற்றியிருப்பார். அந்தப் படம் இன்றளவும் பேசப்படுவதற்கு இந்தப் பாடலின் வரிகளும் வலிகளும்கூடக் காரணம்தான். காதலில் பிரிந்தவர்களுக்குக் களிம்பு தடவியது இந்தப் பாடல்.
‘‘அவருடைய வரிகள் என்னோட கரியர்ல பெரிய மாற்றத்தைக் கொடுக்கும்னு கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை. ‘7ஜி ரெயின்போ காலனி' ரிக்கார்டிங்குக்காக அவரை முதல்முறையா ஃப்ளைட்ல மும்பைக்குக் கூட்டிப்போனேன். அட்டகாசமான வரிகள். நிறைய விஷயங்கள் நினைச்சுப்பார்க்காம நடந்தது மாதிரியே அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மைவிட்டும் போயிட்டார்."
- யுவன் ஷங்கர் ராஜா
வருடம் 2005
‘ஷார்ட் டைம் மெமரி லாஸ்' எனும் தற்காலிக நினைவிழப்புக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஹீரோவின் ஃப்ளாஷ்பேக் டைரியைப் புரட்டும் காட்சி. ஹீரோவின் மகிழ்ச்சியான கடந்தகாலத்தை வண்ணமயமாகக் காட்டவேண்டும். அதற்குக் காட்சி கொடுக்கும் மகிழ்ச்சியை இந்த இசையும் வரிகளும் அள்ளித் தெளிக்கும்.‘சுட்டும் விழிச் சுடரே... சுட்டும் விழிச் சுடரே... என் உலகம் உன்னைச் சுற்றுதே..!' இந்தப் பாடலைப் பாடாத காதலர்கள் இல்லை, உச்சரிக்காத ரசிகர்கள் இல்லை. ‘உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்...' எனும் வரி அதற்குப் பிறகு அனைத்து காதலர்களின் விருப்பமொழி ஆனதும், ‘கொஞ்சும்போது மழை அழகு; கண்ணாலே கோவப்பட்டால் வெயில் அழகு..!' காதலர்களின் தேசிய கீதம் ஆனதும் யாவரும் அறிந்ததே.
வருடம் 2006
‘வெயில்' படத்தில் கிராமத்து சப்ஜெக்ட்டின் கொண்டாட்டமான பாடல் ‘வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி... வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே...'. ஜி.வி.பிரகாஷின் இசைக்குப் பாடல் எழுதியது முத்தண்ணன். இதுதான் ஜி.வி.பிரகாஷுக்கு அறிமுகப் படம். கிராமத்திலிருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள், பல்வேறு சூழ்நிலைகளால் பால்யத்தைப் பறிகொடுத்தவர்கள் என சகலரையும் கொசுவத்தி சுற்றி ஃப்ளாஷ்பேக் போகவைத்தது. கிராமத்தின் வெயில், மழை, திருவிழா, டூரிங் டாக்கீஸ், கருவேலங்காடு, குட்டை, புழுதி என வரிகளுக்கு ஏற்றபடி காட்சியமைக்கப்பட்டுப் படமாக்கப்பட்டது. சிறுவர்களுக்குக் கொண்டாட்டத்தையும், பெரியவர்களுக்கு நினைவுக் குறிப்புகளையும் இழைத்துக் கொடுத்த அந்தப் பாடலும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.
வருடம் 2007
ராமின் ‘கற்றது தமிழ்'. காதலி இருக்கும் இடமே வெளிச்சம் என திக்கு தெரியாமல் காதலின் பொருட்டு ஆனந்தியைத் தேடுகிறான் பிரபாகர். ‘பறவையே எங்கு இருக்கிறாய்...' அந்தப் பாடலைக் கேட்கும்போதே பலருக்கு தன் பள்ளி, கல்லூரிக்கால ஆட்டோகிராஃப் புத்தகங்களை மீட்டெடுத்து மீள் வாசிக்கத் தோன்றுகிறது. முதல் காதலன் / காதலியின் நிழல் கண்களில் விரிகிறது. பெருமூச்சு விட்டு அழத் தோன்றுகிறது. பசுமையான மலரும் நினைவுகள் பிரபாகர் தேடித்திரிந்த பாலைவனம்போலாகிறது. கேட்கிற அனைவரையும் அடர் வனத்திலிருந்து மெள்ள மெள்ள மீட்டுக் கொண்டுபோய் வனாந்திரத்தில் தள்ளும் வரிகள் முத்தண்ணனுடையது!
வருடம் 2011
‘எங்கேயும் எப்போதும்' படத்தில் ஒரு சூழல்... சென்னைக்கு இன்டர்வியூவுக்காக வந்த பெண், அங்கே எதிர்பாராமல் தனக்கு அறிமுகமான ஒருவன் மீது மையல்கொள்கிறாள். அவளின் கண்முன்னே, அவன் செய்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் அப்படியே அவளுக்கு நினைவிருக்கிறது. ஆனால், அவனின் பெயர் அறியும் சந்தர்ப்பம் மட்டும் கிட்டவில்லை. அதற்கு முன்பு ஒரே ஒரு படத்துக்கு இசையமைத்திருந்த சத்யா, இந்தப் பாடலுக்கு இசையமைக்கிறார். வரிகள் முத்தண்ணனின் பேனாவிலிருந்து பிறக்கின்றன. பாடல் தமிழ் பேசும் பகுதியெங்கும் சூப்பர் ஹிட். பெயர் தெரியாமல் ஒரு சந்திப்பில் நாம் காதல் கொள்கிற / நேசம் கொள்கிற அத்தனை பேரையும் அடுத்த நொடி கண் முன் கொண்டுவந்து தானாகப் பாடவைக்கின்றன வரிகள். ‘உன் பேரே தெரியாது... உன்னைக் கூப்பிட முடியாது... நான் உனக்கோர் பெயர் வைப்பேன்... உனக்கே தெரியாது...'
வருடம் 2013
மகள்களைப் பெற்ற தகப்பன்களின் தாலாட்டுப் பாடல் இது. மகள்களுக்கும் அப்பாக்களுமான கவிதையைப்போலான ஓர் உணர்வை / உறவைத் தாளில் வடித்து இசையால் வருடவைத்தார். ஒவ்வொரு மகளுக்கும் கதாநாயகனாகத் தெரியும் அப்பாக்கள் இந்தப் பாடலில் சூப்பர் ஸ்டாரானார்கள். மகள்களை ஹாஸ்டலில் விட்டுவிட்டுப் பிரிவில் வாடும் தகப்பன்களின் காலர் ட்யூனானது இந்தப் பாடல். ‘உன் முகம் பார்த்தால் தோணுதடி... அந்த வானத்து நிலவு சின்னதடி..' என வரிகளில் வானத்தை அளந்த கவிஞன் முத்தண்ணன்.
‘ஆனந்த யாழை மீட்டுகிறாயடி... நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்...' ‘கற்றது தமிழ்'க்காக விருதுக் குழுவுக்கு அனுப்பாமல் கைதவறிப்போன தேசிய விருது இந்தப் படத்துக்காகக் கிடைத்தது.
வருடம் 2014
‘எது அழகு..?' என்கிற கேள்வி எழும் எல்லோருக்கும் இந்தப் பாடலைப் பரிந்துரை செய்யலாம். ‘நன்மைக்குச் சொல்கிற பொய்யும் அழகு... பார்வையில் படுகிற எல்லாம் அழகு..! என்கிற தொனியில் முத்தண்ணன் எழுதிய பாடலை எட்டு வயதுக் குழந்தை பாட, ஜி.வி.பிரகாஷின் இசைக்குத் தாளம் கொடுத்தது முத்தண்ணனின் `அன்பின் விழியில் எல்லாம் அழகே..!'
வானம் தாண்டி வசப்படுத்தும் கவிஞன்!
பத்து பாடல்களைப் பட்டியலிட்டு, இவை சிறந்தவை எனக் கணக்கிட முடியாதவை முத்தண்ணனின் பாடல்கள். ஒவ்வொன்றும் ஒருவிதம் அத்தனையும் தனிரகம். ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு வரியும் யாரோ ஒருவரால் கனெக்ட் செய்து மகிழக்கூடியதாகவோ நினைவுபடுத்திக்கொள்ளக்கூடியதாகவோ இருக்கும்.
டெக்னாலஜி யுகத்தின் நவீன வார்த்தைகளைப் பயன்படுத்தி, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்துக்காக ‘ஹே ஃபேஸ்புக் லாகின் பண்ணு... என் டைம்லைன் எல்லாம் பாரு...' என ஆன்லைன் பாடல் எழுதினார். ‘ஹார்ட்டிலே பேட்டரி...' என ‘எல்லாம் நன்மைக்கே' எனும் நம்பிக்கை விதை தூவினார். ‘முதல் மழை எனை நனைத்ததே...' எனக் காதலுக்கு டைட்டில் சாங் பாடினார். ‘வேணாம் மச்சான் வேணாம்... இந்தப் பொண்ணுங்க காதலு...' என சூப் சாங் பாடினார். ஆங்கிலம் கலந்தாலும் அதிலும் தமிழைப் பிழிந்தார்.
‘ஒரு பாதி கதவு நீயடி...' எனப் பல காதலர்களைச் சேர்த்துவைத்தார். காதலோடு கைகோத்து ஒரு மலையுச்சியின் பாறைப் பிளவுகளூடே பயணிக்கும் சில்லிடலைக் கொடுக்கும் இன்னும் பல பாடல்களையும் எழுத்தில் வடித்தார். ‘ஒரு குரல் கேட்குது பெண்ணே... உயிர்விடும் முன்னே...' எனக் காதலின் ரீங்காரத்தை உயிர் நரம்பில் பாய்ச்சினார். ‘ ‘சற்று முன்பு பார்த்த...' என்றெழுதி எப்போதோ பிரிந்த காதல்களைச் சேர்த்துவைத்தார். தொலையவிருந்த காதல்களுக்கு நெருக்கம் கூட்டினார். காதலின் தொலைவை அணுக்கமாக்கினார். காதலை மட்டுமா எழுதினார்..? ‘அணிலாடும் முன்றில்' என உரைநடையில் உறவுகளின் கவிதைகளை அறுவடை செய்தார். உறவை, உணர்வை, தாலாட்டை, தாயின் மார்புச்சூட்டை, ஒரு கைகோத்தலை, கட்டியணைப்பை, உள்ளக் குமுறலை, அரவணைப்பின் நிழலை, சோகத்தை, நம்பிக்கையை, தன்மானத்தை... அவர் தொடாமல் விட்டுப்போன சொற்கள் தமிழில் மிஞ்சிப்போனால் இன்னும் எத்தனையிருக்கும்?
வருடம் 2017
முத்தண்ணன் கடைசியாகப் பாடல் எழுதியது ராமின் இயக்கத்தில், ‘தரமணி' படத்துக்காக. இந்தப் படம் மூலம் தனக்கு தேசிய விருது கிடைக்கும் என நம்பிக்கையோடு பேசியிருந்தார் முத்தண்ணன். பாடல்கள் அத்தனையும் நம் ப்ளே லிஸ்ட்டில் ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், பாராட்டு பெற்றாலும் பரவசப்படாமல் கண் சிமிட்டும் அந்தக் கவிஞன் இப்போது இல்லை. காலம்தான் எவ்வளவு குரூரமானது.
‘‘நா.முத்துக்குமார், ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழ்ச் சமூகத்தைத் தன் பாடல்களால் ஆக்கிரமித்தவன். அவனுடைய ‘ஆனந்த யாழ்' மீட்டப்படாத வீடில்லை. அவனுடைய காதல் வரிகளைப் பயன்படுத்தாத காதலர்கள் மிகக்குறைவு. சொல்லப்போனால், தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப அட்டையில் பதியப்படாத உறுப்பினன் அவன். அவனைப் பற்றி அவனுடைய வரிகளில் சொல்லவேண்டுமென்றால், அவன் பேரன்பின் ஆதி ஊற்று. முத்து இருப்பான்... அவனுடைய பாடல்கள் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நொடியிலும் அவன் வாழ்ந்துகொண்டிருப்பான்."
- இயக்குநர் ராம்.
புகைப்படச் சிரிப்பில் நம்பிக்கை இழந்தவன்
பாடல் எழுத வருவதற்கு முன்பு பள்ளி, கல்லூரிக் காலங்களில் பல தொழில்களையும் முயன்று பார்த்திருக்கிறார். அவர் தந்தையின் அறிவுறுத்தலின் பேரில், சென்னையின் சிறுதொழில் பயிலரங்குக்குச் சென்று வந்து மிட்டாய்க்கடை வைத்தார். உருகியது. ஊதுவத்தி செய்து விற்றார். புகைந்தது. 10-ம் வகுப்பு படிக்கையில், தூர்தர்ஷனில் கேமராக் கவிஞர் பாலுமகேந்திராவின் நேர்காணல் ஒன்றைப் பார்த்தபோது, புகைப்படக் கலையின் மீதான ஆர்வம் மீண்டும் வளர்ந்து எழுந்தது.
‘‘எனக்கு ஒரு கேமரா வேணும். நான் போட்டோகிராஃபர் ஆகப்போறேன்'' என்று வீட்டில் நச்சரிக்கத் தொடங்க, யாஷிகா ஆட்டோமேட்டிக் கேமரா ஒன்றை வாங்கிக் கொடுத்தார் தந்தை. ஆறடிக்குள் மட்டும்தான் அது காலத்தைக் காட்சிப்படுத்தும். ஜூம் வசதியும் கிடையாது. அப்போதுதான் தொழில்நுட்பத்தின் முதல் படிக்கட்டில் இருந்தவர் அதைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை. பின்னாளில் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றப்போகிறோம் என்பதை அறியாமலேயே, ஒரு கிராமத்து பாலுமகேந்திராவாகத் தன்னை நினைத்துக்கொண்டு சுற்றித் திரிந்திருக்கிறார்.
ஒருநாள் காலையில் அவசரமாக வந்த ஒருவர், ‘முத்தண்ணே... ஒரு படம் எடுக்கணும்ணே...' எனக் கூட்டிப்போயிருக்கிறார். சைக்கிளில் ஏறி, பக்கத்து ஊரின் ஓர் ஓலைக்குடிசைக்கு அருகில் நிறுத்த அங்கே, பறை சத்தங்களின் மத்தியில் ஐந்து வயது சிறுவனின் சடலம். ‘‘அய்யா, வாய்யா போட்டோ புடிச்சா ஆயுசு குறையும்னு எம் பேரனை போட்டோ புடிக்காமயே விட்டுட்டோம். பேர் தெரியாத காய்ச்சல் வந்து செத்துப்புட்டான். உயிரோட்டமா இருக்கணும்னுதான் இன்னும் கண்ணைக்கூட மூடல. எங்க குலக்கொழுந்து, ஒரே வாரிசு, எப்பவும் எங்க ஞாபகத்துல இருக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்துக் குடு ராசா'' - என அந்தப் பாட்டி கேட்க, கடைசியாக முத்தண்ணனின் கேமரா கண்களைத் திறந்து மூடியது. கண் மூடப்படாத அந்தக் குழந்தையின் கண்களில், அதிர்ச்சியையும் உலகின் மீதான அவநம்பிக்கையையும் கடவுளையும் ஒருசேரச் சந்தித்தார். முத்தண்ணன் அன்றிலிருந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும்போதெல்லாம் அந்தப் பையனின் முகம் வந்து போகுமாம். துக்கமும் புன்னகையும் கலந்த அந்தச் சோக புன்னகைக் கவிஞனின் முகம் இப்படித்தான் வந்தது.
‘அந்த மாபெரும் வெற்றிடத்தில்
முன்னும் இல்லை, பின்னும் இல்லை
பறவையின் பாதை
கிழக்கையும் மேற்கையும்
அழித்துவிடுகிறது.’
- ஜென் தத்துவம்.
பயணத்தின் பாதியில் இறங்கியவன்
ஆனந்த விகடனில் ‘வேடிக்கை பார்ப்பவன்' தொடர் எழுதுகையில் ஒரு எபிசோடில் இப்படியாகக் காட்சிகளை வைத்திருப்பார். ஒரு ரயில் வண்டியில் ஏறி முந்தைய காலத்துக்குப் போய் சிறுவயது நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு வருவார். கடந்த காலத்தின் இன்பமும் துன்பமும் ஒருசேர அழுத்த நிகழ்காலத்துக்குத் திரும்பி வருவார். நிகழ்காலப் பெட்டிக்கு வந்ததும், எதிர்காலப் பெட்டிக்குப் போக, ‘வண்டியை எதிர் பக்கம் திருப்பச் சொல்றேன்' எனச் சொல்லும் கடவுளிடம், `வேண்டாம். நாளைக்கு என்ன நடக்கப்போகுதுனு தெரிஞ்சுக்கிட்டா, வாழ்க்கையில சுவாரஸ்யம் இருக்காது. வண்டியை நிறுத்தச் சொல்லுங்க. நான் இறங்கிக்கிறேன்!' என்பார். அதோடு அந்த ரயிலில் இருந்து இரண்டு தேசிய விருதுகளையும், இரு டாக்டர் பட்டங்களையும் பெற்ற முத்தண்ணன் இறங்கிவிட்டார். காட்சிப்படி, வாழ்க்கை எனும் ரயிலில் இருந்தும்தான்!
தினம்தோறும் அவர் பேர் சொல்லி ஒரு பாடலாவது கேட்கிறோம். அதன் ஒவ்வொரு எழுத்திலும் அன்புகெழுமிய முத்தண்ணன் வாழ்ந்துகொண்டிருப்பார். கடைசித் துளி இசை இந்த உலகில் உயிர்த்திருக்கும் வரை!