சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ம் தேதி தொடங்கி, 22ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவில், திருநர் சமூகத்துக்கும் ஒரு தனி விற்பனையகம் ஒதுக்க வேண்டும் என்று குயர் (Queer) மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தியா முழுவதும் உள்ள திருநர் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் நூறு புத்தகங்களை சென்னை புத்தகத் திருவிழாவில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

திருநர் சமூகத்தின் ஆர்வலரும் எழுத்தாளருமான கிரேஸ் பானு, ”எங்கள் திருநர் சமூகத்திலிருந்து இந்தியா முழுக்க பல எழுத்தாளர்கள் இருக்கிறோம். ஆனால் எங்கள் புத்தகங்களை வெளியிட ஒவ்வொரு அச்சகமாக ஏறி இறங்க வேண்டியிருந்தது. அதனால், திருநர் சமூகத்து மக்கள் எந்தத் தயக்கமும் இன்றி, அவர்கள் எழுத்துத் திறமையை வெளியில் கொண்டு வர ’Queer Publishing House’ எனும் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஆண்டு, புத்தகத் திருவிழாவிற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து, பபாசியை அணுகி எங்களுக்கும் புத்தகக் கண்காட்சியில் ஒரு இடம் வேண்டும் என்பதை முன்வைத்தோம். ஆனால் எங்களுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. எங்கள் கேள்விகள் எல்லாம் அலட்சியமாகவே அணுகப்பட்டன.
நாங்கள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்திற்குப் பின், 24ம் தேதி மாலை எங்கள் வீட்டுக்கு விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டது. ஆனால் அதில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 24ம் தேதிதான் என்று இருந்தது. இதைப் பார்த்தும் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி. பொறுப்பாளர்களுக்கு இதைக் குறித்து தெரிவிக்க முயன்றும் முடியவில்லை.
அதனால் இப்போது சமூகவலைத்தளத்தில் எங்களுடைய பிரச்னையை விரிவாக விளக்கி, பபாசி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அவர்களிடமிருந்து சாதகமான பதில் வந்துள்ளது. அடுத்து இந்தியா முழுக்க குயர் சமூகத்தில் இருந்து நூறு புத்தகங்களை இங்கே சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டுவர முயல்வோம்” என்கிறார்.
திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த நடிகையும், குயர் பப்ளிகேஷன் ஹவுஸின் உரிமையாளருமான நேஹா,
”ஆரம்பத்தில் பபாசியை அணுகிய போது, உங்களிடம் குறைந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள்தான் இருக்கின்றன. அதனால் அரங்கில் ஒரு பகுதியை மட்டும் ஒதுக்கிகொடுக்கிறோம் என்றார்கள். ஆனால் எங்கள் குயர் சமூகத்தினரின் எழுத்தை முன்னிலைப்படுத்தும் விதமாக ஒரு தனி அரங்கை நாங்கள் கேட்டோம். அதனால் தமிழ்நாட்டைத் தாண்டி, இந்தியா முழுவதும் இருக்கும் திருநர் சமூகத்தினரின் புத்தகங்களை இங்கே கொண்டு வர முடிவு செய்தோம்.
இந்த சென்னை புத்தகக் கண்காட்சி எங்கள் சமூகத்தின் எழுத்தை வெளியில் கொண்டு வரவும், இன்னும் பல குயர் எழுத்தாளர்களை உருவாக்கவும் ஒரு நல்ல மேடை. புத்தகத் திருவிழாவில் நாங்கள் எழுதிய புத்தகங்களை மக்கள் பார்க்கும் போது, அவர்களுக்கு எங்கள் மீதான கண்ணோட்டமும் மாறும். சமூகத்தில் பல ஒடுக்குமுறைகளைச் சந்திக்கும் திருநர் சமூகத்திற்கு இது மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்.
இந்தப் புத்தக திருவிழாவில் திருநம்பி அருண், திருநங்கை அஜிதா போன்றோருடன், பல குயர் மக்களின் கவிதைகள், கதைகள் வரவுள்ளன. எங்கள் சமூகத்தில் பல கலைஞர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எழுத்தை எங்கே வெளியிடுவதை யாரை அணுகுவது என்று புரியாமல் தயக்கத்தில் இருக்கின்றனர்.

இங்கு திருநர் சமூகத்தையே பலர் அங்கீகரிக்காதபோது, எங்கள் திறமைகளை எப்படி அங்கீகரிப்பார்கள். அதனால் எங்கள் சமூகத்தினருக்கு எல்லா படிநிலைகளிலும் ஒரு பாதுகாப்பான இடம் வேண்டும். பொதுவெளியில் எங்களுக்கான ஒரு இடத்தைத்தான் நாங்கள் கேட்கிறோம்.
எங்கள் குயர் பதிப்பகத்தில், பல மொழி புத்தகங்களை மொழிபெயர்த்து கொண்டு வந்து, எங்கள் பால்புதுமையினரின் வரலாற்றை, வெவ்வேறு சமூகங்களில் அவர்கள் சந்தித்தப் போராட்டங்களை எல்லாம் ஆவணப்படுத்த விரும்புகிறோம்.
இத்தனை வருடங்களாக இந்தச் சமூகம் எங்களுக்கு எந்த அடையாளமும் அங்கீகாரமும் கொடுக்காமல் வஞ்சித்திருக்கிறது. அதனால், பல போராட்டங்களைக் கடந்து ஒவ்வொரு அடியாக முன்னேறி வரும் எங்களை இந்தச் சமூகமும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது” என்கிறார்.
பபாசி செயலாளர் முருகன், ”திருநர் சமூகத்தின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்காக ஒரு தனி அரங்கை ஒதுக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.