Published:Updated:

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 15

அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங்...போராட்டம்கு. ராமகிருஷ்ணன், ஓவியம்: செந்தில், படம்: கே. குணசீலன்

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 15

அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங்...போராட்டம்கு. ராமகிருஷ்ணன், ஓவியம்: செந்தில், படம்: கே. குணசீலன்

Published:Updated:

''மனசுக்கு ரொம்ப துக்கமா இருந்துச்சு. புள்ளிமான் கதையைச் சொல்லி, இவ்வளவு கொடூரமாவா, மீத்தேன் திட்டத்தோட பாதிப்புகளை விவரிக்கணும். நினைச்சுப் பார்க்கவே நெஞ்செல்லாம் பதறுது. 'மீத்தேன் எமன்’ங்கற வார்த்தையையும், 'இங்கவுள்ள கிராமங்கள் எல்லாம் அழிஞ்சிப் போகும்’னு சொல்றதையும் எங்களால் ஜீரணிக்கவே முடியலை'

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 15

 கடந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு, இப்படி என்னிடம் வருத்தத்தோடு பேசினார், தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் ஒருவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த உலகம் இருக்கும் வரை, நம்முடைய காவிரி டெல்டா கிராமங்கள் செழிப்போடு நிலைத்திருக்க வேண்டும் என்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். ஆனால், அந்த ஆசை மட்டுமே நம்முடைய கிராமங்களை வாழ வைத்து விடாது. மீத்தேன் திட்டத்தால் நிகழப்போகும் ஆபத்துகளைத் தெரிந்துகொண்டு், மக்கள் விழிப்போடு இருந்தால்தான், காவிரி டெல்டா கிராமங்களின் எதிர்காலம் உயிர்ப்போடு இருக்கும். இதற்காகத்தான் மிகவும் வெளிப்படையாக எழுத வேண்டியுள்ளது. பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடிய, எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதிலும், நான் கவனமாகவே இருக்கிறேன். ஆனால், தற்போதைய நடைமுறை எதார்த்தம் நெஞ்சைச் சுடுகிறுதே!

படத்தை தெளிவாக பார்க்க க்ளிக் செய்யவும்

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 15

மீத்தேன் திட்டத்தால் நிகழப்போகும் ஆபத்துகள் மிகக் கொடூரமானவை. மீத்தேன் வாயு எடுக்கப்படும் நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம் 'ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங்’ என்ற வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள். 'அய்யய்யோ’ என அலறித்துடிப்பார்கள். பல ஆயிரம் அடி ஆழத்துக்கு நிலத்தைத் தோண்டி, செங்குத்தாவும் பக்கவாட்டுப் பகுதிகளிலும் உலோகக்குழாய்கள் அமைக்கப்படும். நிலக்கரிப் பாறைகளை உடைத்து, அதன் இடுக்குகளில் உள்ள மீத்தேன் வாயுவை வெளியில் கொண்டு வர... ஒவ்வொரு கிணற்றின் உள்ளேயும், பல லட்சம் டன் எடை கொண்ட வீரியம்மிக்க ரசாயனக்கரைசல், அதிக அழுத்தத்தில் பீய்ச்சி அடிக்கப்படும். இதுதான் ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங். 'ஒரு கிணற்றுக்கு ஒரு முறை ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங் செய்வதற்கான கரைசல் தயாரிக்க, 5 கோடியே 66 லட்சத்து 33 ஆயிரத்து 693 லிட்டர் தண்ணீரும், 144 டன் மணலும், 80 டன் முதல் 300 டன் வரை ரசாயனப்பொருட்களும் தேவைப்படும்’ என்கிறது, அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை. இதுபோல், ஆண்டுக்கு 3 முதல் 4 முறை ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங் கரைசல் தயார் செய்து, நிலக்கரிப் பாறைகளை உடைத்து, மீத்தேனை வெளியில் கொண்டு வருவார்கள். இதுபோல் 2,000 கிணறுகள், கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

மீத்தேன் எடுக்கும் முயற்சிக்குத் தேவையான மணல் மற்றும் தண்ணீரின் அளவு நம்மை மிரள வைக்கிறது. இதையெல்லாம் எங்கிருந்து கொண்டு வருவார்கள்? டெல்டா பகுதியில் இருக்கும் காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, திருமலைராஜன் உள்ளிட்ட ஆறுகள் அனைத்தும் சூறையாடப்படும். ஆனால், இது மட்டும் போதாது. மேலே சொல்லப் பட்டுள்ள மணல் மற்றும் தண்ணீரின் அளவை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். தமிழகத்தில் பாயும் வைகை, முல்லைபெரியாறு, தாமிரபரணி உள்ளிட்ட அனைத்து ஆறுகளையும் பல அடி ஆழத்துக்குத் தோண்டி மணல் எடுப்பார்கள். ஆறுகளில் ஓடக்கூடிய தண்ணீரையும் முழுமையாகக் கொள்ளையடித்து கரைசல் தயாரிப்பார்கள். இக்கரைசலில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் அனைத்துமே மிகவும் ஆபத்தானவை.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 15

இந்த வேதிப்பொருட்கள் பற்றி என்னிடம் சில தகவல்களைச் சொன்னார், இதயநோய் சிறப்பு மருத்துவர் பாரதிச்செல்வன். இவர், மீத்தேன் திட்டத்தினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி அதிக கவலை கொள்வதோடு, களத்தில் இறங்கிப் போராடியும் வருகிறார்.

'டொலுவின், பென்சீன், ஈயம், ஈதைல், ஹைட்ரோகுளோரிக் அமிலம், பார்மால்டிஹைட், யுரேனியம், ரேடியம், மெத்தனால்... என அறுநூறுக்குக்கும் மேற்பட்ட ரசாயனங்கள்தான் பயன் படுத்தப்படுகின்றன. உள்ளே செலுத்தப்பட்டு கழிவாக வெளிவரும் இந்த ரசாயனங்களை, இந்தப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில்தான் கொட்டுவார்கள். இது, எவ்வளவு பெரிய அக்கிரமம் தெரியுமா? இவற்றில் பெரும் பாலான ரசாயனங்கள், புற்றுநோயை உருவாக்கக்கூடியவை. பல நாடுகளில் இது தன்னுடைய கோரமுகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது' என்று பதைபதைத்தார், பாரதிச்செல்வன்.

காணாமல் போன கிராமம்!

காவிரி டெல்டா மாவட்டங் களில் மீத்தேன் மற்றும் நிலக்கரி எடுக்கப்பட்டால், இங்கு நூற்றுக்கணக்கான அனல்மின் நிலையங்கள் படையெடுக்கும். இதனால், ஏராளமான கிராமங்கள் காணாமல் போகும். இதற்கு கண்முன் சாட்சியாகத் திகழ்கிறது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாழ ஒக்கூர் கிராமம்.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 15

''இந்த கிராமத்துல 100 குடும்பங்கள் இருந்துச்சு. 210 ஏக்கர்ல விவசாயம் நடந்துச்சு. இந்த ஒட்டுமொத்த கிராமத்தையுமே தொழிலதிபர் ஒருவர் விலைக்கு வாங்கிட்டார். இதுல அனல்மின் நிலையம் அமைக்கறதுக்கான வேலைகள் மும்முரமா நடந்துக்கிட்டு இருக்கு. இந்த கிராமத்துல இருந்த குளம், வாய்க்கால் எல்லாத்தையுமே மண்ணைப் போட்டு நிரவிட்டாங்க. இதனால், மற்ற கிராமங்களுக்கு வரக்கூடிய தண்ணீர் வரத்தும் நின்னுபோச்சு. இந்த கிராமத்துல வசிச்ச விவசாயிகள் எல்லாம், அனல்மின் நிலையத்துல கட்டுமான பணிகளுக்கு கூலித் தொழிலாளியா வேலை பார்க்குறாங்க'' என்கிறார்கள், பக்கத்து கிராமங்களில் வசிக்கும் மக்கள்.

'அனல்மின் நிலையத்தால், எங்க ஊரோட நிலத்தடி நீர் உப்பா மாறிடுச்சு. திருவாரூர் மாவட்டம், கோவில்களப்பாலில் உள்ள ஓ.என்.ஜி.சி மூலமாக கிடைக்கக்கூடிய எரிவாயு மூலமா, தஞ்சாவூர் மாவட்டம், திருமக்கோட்டையில் தனியாருக்குச் சொந்தமான அனல்மின் நிலையம் இருக்கு. இந்த அனல்மின் நிலையத்துக்காக, தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்ததால, நிலத்தடி நீர், உப்பாகிடுச்சு. இதனால், குடிநீருக்கே பெரிய தட்டுப்பாடு ஆகிடுச்சு. விவசாயத்துக்கும் இந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியலை' என்று சொல்லும் இக்கிராம மக்கள் 'அனல்மின் நிலையத்தை இங்கிருந்து அகற்ற வேண்டும்’ என எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism