Published:Updated:

'மனுஷனையும் வாழவைக்கும் பஞ்சகவ்யா!’

வரலாறு ‘நசியனூர்’ மோகனசுந்தரம், ஓவியம்: ஹரன், படங்கள்: ரேமஷ் கந்தசாமி

'மனுஷனையும் வாழவைக்கும் பஞ்சகவ்யா!’

வரலாறு ‘நசியனூர்’ மோகனசுந்தரம், ஓவியம்: ஹரன், படங்கள்: ரேமஷ் கந்தசாமி

Published:Updated:
'மனுஷனையும் வாழவைக்கும் பஞ்சகவ்யா!’

'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்து விட்டார். அவருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்’ என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி இதழ்தோறும் பேசுகிறார்கள்.

'மனுஷனையும் வாழவைக்கும் பஞ்சகவ்யா!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஓசூரில் டி.வி.எஸ். கல்வி நிறுவனம் நடத்திய கிராமப்புற மாணவர்களுக்கான பாடத்திட்டம் உருவாக்கும் பணியில் நம்மாழ்வார் ஈடுபட்டிருந்தார். இடையில், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, இங்கிருந்து வெளியேறிய நம்மாழ்வார், தனக்கு ஏற்கெனவே அறிமுகமான ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் உள்ள செல்வத்தின் பண்ணைக்கு வந்துவிட்டார். 'அண்ணாச்சி’ என்றே இதுநாள்வரை அழைக்கப்பட்ட நம்மாழ்வாரை, இங்கேதான் 'நம்மாழ்வார் அய்யா...’ என்று அழைக்க ஆரம்பித்தனர். தோற்றத்தில் ஈ.வே.ரா. பெரியார் போலவே தாடியுடன் இருந்தபடியால், கொங்கு மண்டல விவசாயிகள் இப்படி அழைக்க ஆரம்பித்தனர். அவர்களின் விருந்தோம்பலும், இயற்கை விவசாய ஆர்வமும் நம்மாழ்வாரைச் சுற்றிச்சுழன்று ஆர்வத்துடன் பணியாற்ற வைத்தன.

''என்னைப் புதுசா பார்க்குறவங்க... உங்களுக்குச் சொந்த ஊரு ஈரோடு பக்கமானு கேட்பாங்க. 'ஏன் இப்படி கேட்கிறீங்க?’னு சொன்னா... 'எப்பவும், ஈரோடு மாவட்டத்தைச் சுத்திசுத்தி... வந்துகிட்டு இருக்கீங்களே?’னு பதில் சொல்லுவாங்க. இதுவரைக்கும் தொண்டு நிறுவனம், கல்வி நிறுவனம்னு அமைப்புக்குள்ள வேலை செய்ய வேண்டிய நிலை இருந்துச்சு. அங்க சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனா, ஈரோடு பகுதிக்கு வந்த பிறகுதான், எல்லை விரிஞ்சு இருக்கிறதை உணர முடியுது. இந்தப் பகுதி விவசாயிங்க நான் எதைச் சொன்னாலும்... நுணுக்கமா பிடிச்சு செயல்படுத்தறாங்க. ஈரோடு விவசாயிங்க இந்தியாவுல இருக்கிற விவசாயிங்களுக்கு, இயற்கை விவசாயப் பாடம் கத்துக் கொடுக்கிறாங்க''

'மனுஷனையும் வாழவைக்கும் பஞ்சகவ்யா!’

இதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பதிவு செய்து கொண்டே இருப்பார். இதற்குக் காரணம்... இப்பகுதியில் பெருகிய இயற்கை விவசாய ஆர்வம்தான்.

ஈரோடு பகுதியில் தங்கியிருந்தால்... தினமும் ஒரு பண்ணையில் இயற்கை விவசாயப் பயிற்சி நடத்துவது, நம்மாழ்வாரின் வழக்கம். இதன் மூலமாக சாமான்ய விவசாயிகளையெல்லாம் விவசாயக் கண்டுபிடிப்பாளர்களாக மாற்றிக் கொண்டிருந்தார். இப்படி உருவானவர்களில் ஒருவர் 'நசியனூர்’ மோகனசுந்தரம்.

'மனுஷனையும் வாழவைக்கும் பஞ்சகவ்யா!’

''நம்மாழ்வார் அய்யாவைப் பத்தி, நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, நேர்ல பார்க்குற வாய்ப்பு கிடைக்கல. அந்த வாய்ப்புக்கு காத்திருந்தேன். எனக்கு தெரிஞ்ச விஷயத்தை வெச்சு, இயற்கை விவசாயம் செய்துகிட்டு இருந்த நான், இன்னும் தெளிவா கத்துக்கணும்கிற ஆசையில அய்யாவோட சந்திப்புக்காகக் காத்திருந்தேன். ஆனா, அந்த மனுஷன் என்னோட வாழ்க்கையில... இவ்வளவு மாற்றத்தை உண்டு பண்ணுவார்னு சாமி சத்தியமா தெரியாது. 2000ம் வருஷத்துல அறச்சலூர் செல்வம் பண்ணையில நடந்த இயற்கை விவசாயப் பயிற்சியிலதான் அய்யாவை முதன்முதலா பார்த்தேன். குழந்தைப் புள்ளைக்கு விளக்குற மாதிரி, தெளிவா சொல்லிக் கொடுத்தாரு.

இந்தக் காலகட்டத்துலதான், 'கொடுமுடி’ டாக்டர் நடராஜன் பயிர்களுக்கும் 'பஞ்ச கவ்யா’வைத் தெளிக்கலாம்கிறத கண்டுபிடிச்சு பரப்பிக்கிட்டிருந்தாரு. அய்யாவும்கூட, பஞ்சகவ்யா தெளிச்சா இடுப்பொருள் செலவு குறையுது, பயிரும் வேகமா வளருதுனு விவசாயிகள் மத்தியில, பேச ஆரம்பிச்சாங்க. என் தோட்டத்துப் பயிர்களுக்குத் தெளிச்சப்ப... அவ்வளவு அருமையான விளைச் சல். அய்யாகிட்ட சொல்லி, என்னோட பண்ணைக்கு வந்து பார்க்கணும்னு கேட்டேன். சிங்கம் (என்னோட மீசையை வெச்சு, என்னை சிங்கம்னுதான் அய்யா சொல்லுவாரு) கூப்பிட்டு வராம இருக்க முடியுமா?’னு சொன்னவர், மறுநாளே வந்துட்டார். ஒண்ணரை ஏக்கர் நிலத்துல ஆடு, மாடு, கோழினு ஒருங்கிணைந்த பண்ணை வெச்சுருக்கிறத பார்த்துட்டு, மரத்து நிழல்ல உட்கார்ந்து இயற்கையை ரசிக்க ஆரம்பிச்சாரு.

எனக்கு எதையும் ஆராய்ச்சி பண்ணி பார்க்குற பழக்கம் உண்டு. பஞ்சகவ்யாவைப் பயிருக்கு மட்டும்தான் தெளிக்கணுமா? மனுஷனும் குடிச்சா நோய், நொடி அண்டாதேனு தோணுச்சு. அதனால, தோல் வியாதி, தீராத நோயில பாதிக்கப்பட்டவங்களுக்கு பஞ்சகவ்யாவுல அன்னாசிப் பழச்சாறும், ஏலக்காயும் கலந்து இலவசமா கொடுத்தேன். அய்யா வந்தப்ப ரெண்டு, மூணு பேரு பஞ்சகவ்யா வாங்கி குடிச்சுட்டு இருந்தாங்க. அப்போ, இதைக் குடிக்கிறதால, தோல் நோய் குணமான ஆள் ஒருத்தர், எனக்கு நன்றி சொன்னாரு. அதை பார்த்தா அய்யா, 'சிங்கம், பஞ்சகவ்யா மனுஷனுக்கும் வேலை செய்யுது. இன்னும் நிறைய பேருக்கு இதைச் சொல்லணும். எதையும் இலவசமா கொடுத்தா மதிப்பு இருக்காது. குறைஞ்ச விலைக்கு கொடு’னு சொல்லிட்டு தயாரிப்பு முறையை ஆர்வமா கேட்டுக்கிட்டாரு.

சில மாசம் கழிச்சு தொலைபேசியில கூப்பிட்ட அய்யா, 'சிங்கம், என்னதான் ஏலக் காயும், அன்னாசிப் பழமும் கலந்தாலும் அதுல ஒரு விதமான வீச்சம் இருக்குது. அதை சரிபண்ணுய்யா’னு சொன்னாரு. உடனே, சாராயம் காய்ச்சுற மாதிரி பஞ்சகவ்யாவைக் காய்ச்சினேன். அது சுத்தமான தண்ணி மாதிரி, வீச்சம் இல்லாம தெளிவா இருந்துச்சு. முதல்ல அய்யாகிட்ட கொடுக்க நினைச்சேன். அப்போ, நாகப்பட்டினம் மாவட்டம், பாலையூர்ல அய்யா தலைமையில, இயற்கை விவசாயக் கூட்டம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அங்கே போய் அய்யா கையில பஞ்சகவ்யா மருந்தைக் குடுத்தேன். அதோட மகத்துவத்தை அந்தக் கூட்டத்துல விளக்கமா சொன்னாரு.

வழக்கமா எந்தப் பொருள் கொடுத்தாலும், மத்தவங்களுக்குக் கொடுத்துடுவாரு அய்யா. ஆனா, அந்த பஞ்சகவ்யா கேனை பத்திரமா பையில வெச்சுக்கிட்டாரு. அடுத்த முறை ஈரோட்டுல பார்த்தப்ப... 'சிங்கம் அந்த பஞ்சகவ்யாவை நம்மாழ்வாரே குடிச்சிட்டேன். நல்ல மாற்றம் தெரியுது’னு சொன்னாரு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. தொடர்ந்து, அய்யாவுக்கு பஞ்சகவ்யா மருந்தைத் தயாரிச்சிக் கொடுத்தேன். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள்ள 7 லிட்டர் வரைக்கும் குடிச்சு முடிச்ச அய்யா,

'30 வயசுல கண் கண்ணாடி போட்டேன். 65 வயசுல கழட்டி எறியுறேன். இதுக்குக் காரணம், நம்ம சிங்கம் கொடுத்த பஞ்சகவ்யா செய்த வேலைதான்’னு ஒரு கூட்டத்துல சொல்லிட்டு, என்னைக் கட்டி அணைச்சு வாழ்த்து சொன்னாரு.

அய்யாவைப் பார்க்கறதுக்கு முன்ன வரைக்கும் முரடனாதான் இருந்தேன். நாலு பேரு மத்தியில எப்படி பேசணும்னுகூட தெரியாது. பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத என்னை, பல கல்லூரிகள்ல பேச கூப்பிடாறங்க. இதுவரையிலும் 20 விருது வாங்கியிருக்கேன். விமானத்தை சினிமா படத்துல மட்டும்தான் பார்த்திருக்கேன். ஆனா, என்னை அந்த விமானத்துல உட்கார வெச்சு, மலேசிய நாட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனது அய்யாதான்.

'மனுஷனையும் வாழவைக்கும் பஞ்சகவ்யா!’

சின்னதா களையெடுக்கிற கருவியை உருவாக்கினப்ப, இன்னும் எப்படியெல்லாம் மேம்படுத்தலாம்னு யோசனை சொன்னாரு. 'நிலக்கடலைச் செடியில இருந்து, காயைப் பிரிக்க சிறுசா ஒரு இயந்திரம் உருவாக்கிட்டு இருக்கேன். அதை உங்க முன்னிலையிலதான் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்போறேன்’னு சொன்னேன். 'இந்த மாதிரி, சின்னச்சின்னக் கருவிங்கதான் நமக்குத் தேவை. கண்டுபிடிப்பு தொடரட்டும்’னு ஆசீர்வாதம் செய்தாரு. அந்தக் கருவியை இப்போ பயன்பாட்டுக்கு கொண்டு வந்துட்டேன். ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலைச் செடியில இருந்து... எட்டு மணி நேரத்துல காயைப் பிரிச்சு எடுத்துடலாம். 40 ஆள் செய்ய வேண்டிய வேலையை, இந்த சின்னக் கருவி செய்யுது. இதுக்காக பாராட்டு, பரிசுனு கொடுத்துட்டே இருக்காங்க. என்னை மாதிரி சாதாரண விவசாயிகள் பலரையும், இயற்கை விவசாய விஞ்ஞானிகளா மாத்தின குலதெய்வம் எங்க அய்யாதான்.''

வான(க)த்தை நோக்கிக் கைகூப்புகிறார்!

 -  பேசுவார்கள்

 சந்திப்பு: பொன். செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism