Published:Updated:

மழைக்கு மரியாதை... மரங்கள் நடுவோம்... மகசூலைப் பெறுவோம்!

மரங்கள்ஜி. பழனிச்சாமி, படங்கள்: தி. விஜய்

மழைக்கு மரியாதை... மரங்கள் நடுவோம்... மகசூலைப் பெறுவோம்!

மரங்கள்ஜி. பழனிச்சாமி, படங்கள்: தி. விஜய்

Published:Updated:

'றட்சி... வறட்சி...’ என கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக புலம்பித்  தீர்த்துக் கொண்டிருந்த தமிழக விவசாயிகள், தற்போது, 'மகிழ்ச்சி, மகிழ்ச்சி’ என்று துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்... சமீபத்தில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் மழையில்! தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என அனைத்தையும் தொடர்ந்து பறிகொடுத்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து... திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் எல்லாம் வறண்டு... 50 வருடங்களாக பலன் தந்து கொண்டிருந்த தென்னை மரங்கள் வெட்டப்பட்டு, செங்கல் சூளைகளுக்கு விறகாயின. மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து கருகியதால் ஆடு, மாடுகளைக் குறைந்த விலைக்கு விற்றுத்தள்ளினர். இந்த ஆண்டும் மழை இல்லை என்றால்... அதோகதிதான் என்று பயந்து கிடந்த நிலையில்தான் தற்போதைய மழை, மகிழ்ச்சிக்கடலில் மிதக்க வைத்துள்ளது.

மழைக்கு மரியாதை... மரங்கள் நடுவோம்... மகசூலைப் பெறுவோம்!

 இதைத் தொடர்ந்து விவசாய வேலைகளில் தீவிரமாகிவிட்டனர் விவசாயிகள். இந்நிலையில், இந்த மழைக்காலத்துக்கே உரித்தான மர சாகுபடியில் ஈடுபட நினைக்கும் விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை இங்கு சொல்கிறார், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனவியல் ஆராய்ச்சிக் கல்லூரியின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர். பார்த்திபன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வருமானம் தரக்கூடிய வணிக மரங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வமுடன் உள்ளார்கள். இதில் பலவகை மரங்கள் உள்ளன. சவுக்கு, தைலம், மலைவேம்பு, மூங்கில், சூபாபுல் போன்ற காகிதக்கூழ் மரங்களை நடவுசெய்தால், குறுகிய காலத்தில் பணம் பார்க்கலாம். நடவு செய்த 3 முதல் 5 வருடங்களில் பலன் கொடுக்கும். காகித தயாரிப்பில் மூலப்பொருளாக இந்த மரங்கள் விளங்குவதால், ஒப்பந்தமுறை சாகுபடியில் நடவு செய்தால் விற்பனையில் பிரச்னை இருக்காது.

மழைக்கு மரியாதை... மரங்கள் நடுவோம்... மகசூலைப் பெறுவோம்!

பீநாரி, வில்வாகை, வெல்லமட்டி, கல்யாண முருங்கை போன்ற மரங்களை நடவு செய்த 5 முதல் 10 ஆண்டுகளில் வெட்டி விற்பனை செய்யலாம். இவ்வகை மரங்களுக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தேவை அதிகம் உள்ளதால் விற்பனையில் சிரமம் இல்லை.

மலைவேம்பு, தைலம், சில்வர் ஓக், பீநாரி, மதகிரி வேம்பு போன்றவை ஒட்டுப்பலகை மரங்கள் (பிளைவுட்) தயாரிப்புக்கு உகந்ததாக இருப்பதால் நடவு செய்த 6 முதல் 10 ஆண்டுகளில் வெட்டி விற்பனை செய்யலாம். பிளைவுட் கம்பெனிகளில் ஒப்பந்தம் போட்டும் வளர்க்கலாம்.

தேக்கு, வேங்கை, வாகை, பூவரசு, ஈட்டி, குமிழ் போன்ற தடி மரங்களை நடவு செய்த 10 முதல் 20 ஆண்டுகளில் வெட்டி விற்பனை செய்யலாம். இவை, பலவிதமான கட்டுமான பயன்பாட்டுக்கு விரும்பி வாங்கப்படும் மரங்கள் என்பதால் எப்போதும் கிராக்கி அதிகம்.

மழைக்கு மரியாதை... மரங்கள் நடுவோம்... மகசூலைப் பெறுவோம்!

சந்தனம், செஞ்சந்தனம் போன்றவை அதிக விலை கிடைக்கக்கூடிய மரங்கள். இதற்கு வயது வரம்பு கிடையாது. 20 வருடங்களுக்கும் மேல் வெட்டி விற்கலாம். வயது கூடக்கூட இவற்றுக்கு அதிக விலை கிடைக்கும்.

புங்கன், இலுப்பை, காட்டாமணக்கு போன்ற உயிரி எரிபொருள் மரங்களை நடவு செய்த 5 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும். இவற்றின் காய்களில் கிடைக்கும் எண்ணெயை இயந்திர எரிபொருளில் கலந்து பயன்படுத்தலாம். அனைத்து வகையான வேல மரங்கள், அனைத்து வகையான தைல மரங்களை 2 முதல் 5 ஆண்டுகளில் வெட்டி விற்பனை செய்யலாம்' என்ற பார்த்திபன்,

'இந்த ஆண்டு புதுவகை மரங்கள் சிலவற்றையும் அறிமுகம் செய்துள்ளோம். பாப்புலர், சந்தனவேம்பு, நெல்லரை ஆகியவை அனைத்து பயன்பாட்டுக்கும் ஏற்ற பன்முகத்தன்மை கொண்ட மரங்கள். வருமானம் தருவதுடன், மண்அரிப்பைத் தடுத்தல், மழைநீர் நிலைநிறுத்தம், நுண்ணுயிரிப் பெருக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவற்றுக்கும் உறுதுணை புரிபவை. எனவே, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான மரக்கன்றுகள் குறித்த விவரங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு வனத்துறை அலுவலகங்களில் கேட்டோ... எங்கள் கல்லூரியை அணுகியோ தெரிந்து கொண்டு நடவு செய்யலாம்' என்றார்.

மண்ணுக்கேற்ற மரங்கள்!

கோயம்புத்தூர் மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் சங்கத் தலைவர் தேவராஜன், மரங்கள் தொடர்பாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மழைக்கு மரியாதை... மரங்கள் நடுவோம்... மகசூலைப் பெறுவோம்!

''மரங்களை நடுவது முக்கியமல்ல. சில மண்வகைகளில் சில மரங்கள் சரியாக வளராது. எனவே எந்த மண்ணுக்கு எந்த மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து நடவு செய்ய வெண்டும். உதாரணமாக, கரிசல் மண்ணில் புளி, புங்கன், நாவல், நெல்லி, சவுக்கு, வேம்பு, வாகை ஆகிய மரங்கள் சிறப்பாக வளரும். தேக்கு, மூங்கில், வேம்பு, கருவேல், சவுண்டல், புளி ஆகியவை வண்டல் மண்ணிலும்; குடைவேல், வேம்பு, புளி, பூவரசன், வாகை ஆகியவை களர் மண்ணிலும் வளரும். உவர் மண் நிலங்களில் சவுக்கு, இலவு, புளி, வேம்பு மரங்களும்; அமில நிலத்தில் குமிழ், சிலவர் ஓக் வகை மரங்களும்; சதுப்பு நிலத்தில் பெரு மருது, நீர் மருது, நாவல், இலுப்பை, புங்கன் ஆகியவையும் நன்கு வளரும்.

வேம்பு, புங்கன், புளி, வெள்வேல் ஆகியவை சுண்ணாம்புப் படிவ மண்ணிலும்; வாகை, புளி, புங்கன், சூபாபுல், நெல்லி, கருவேல், மருது ஆகியவை களிமண் நிலத்திலும்; செஞ்சந்தனம், ஆயிலை, குடைவேல், பனை, வேம்பு ஆகியவை வறண்ட மண்ணிலும் நன்றாக வளரும். அமில நிலங்கள் தவிர மற்ற அனைத்து மண்வகைகளிலும் வேம்பு சிறப்பாக வளரும்.

மரக்கன்றுகளை நடவு செய்யும் முன்பு 1 கன மீட்டர் அளவுக்கு குழி எடுத்து... மேல் மண்ணுடன் சம அளவு மட்கிய உரம் கலந்து நிரப்பி, தண்ணீர் விட்டு சுண்டிய பின்பு, நடவு செய்யவேண்டும். மழை இல்லாத காலங்களில் மாதம் இருமுறை கன்றுகளுக்கு தண்ணீர் பாசனம் அவசியம்' என்று மிகமுக்கியமான நுட்பங்களைச் சொன்னார் தேவராஜன்!

 தொடர்புக்கு,

 டாக்டர் பார்த்திபன், தலைவர் மற்றும் பேராசிரியர் வனவியல்துறை,

தமிழ்நாடு வன மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்

தொலைபேசி: 04254  222010

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism