Published:Updated:

மழைக்கால பயிர் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை...

பல்கலைக்கழகம் சொல்லும் பயனுள்ள யோசனைகள்!முன் அறிவிப்பு பசுமைக் குழு

மழைக்கால பயிர் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை...

பல்கலைக்கழகம் சொல்லும் பயனுள்ள யோசனைகள்!முன் அறிவிப்பு பசுமைக் குழு

Published:Updated:

விதைப்பு, நடவு என விவசாயப் பணிகளில் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில்... 'வடகிழக்குப் பருவமழை எவ்வாறு இருக்கும்... என்ன வகையான பூச்சி, நோய் தாக்குதல் இருக்கும்?’ என தெரிந்துகொண்டு செய்தால், உழைப்பின் முழுப்பலன்களையும் அறுவடை செய்ய முடியும். இதற்காகவே இது தொடர்பான முன்னறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் காலநிலை ஆராய்ச்சி மையம். இந்த மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் பன்னீர்செல்வம் சொன்ன விஷயங்கள் இங்கே...

மழைக்கால பயிர் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை...

 'வடகிழக்குப் பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் துவங்கி, டிசம்பர் மாதம் வரை நீடிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் மானாவாரி மற்றும் இறவை யில் பலவகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு செய்துள்ளோம். ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலையையும், தென்மண்டல காற்றழுத்தக் குறியீட்டையும் உபயோகித்து, ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து பெறப்பட்ட 'மழை மனிதன்’ எனும் கணினிக் கட்டமைப்பு மூலமாக தகவல்கள் பெறப்பட்டன. கடந்த காலங்களில் பொழிந்த மழையின் புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்தோம். இவற்றின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவிகிதம் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணித்துள்ளோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தொடர்மழையால் நெற் பயிர்களில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், தேவையான வடிகால் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நெல் பயிர் பாதித்த பகுதிகளில் மறுநடவு செய்யும் விவசாயிகள், குறைந்த நாட்கள் வயது கொண்ட (105 நாட்கள்) ரகங்களை விதைக்கலாம்.

மழைக்கால பயிர் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை...

விழுப்புரம் மாவட்டத்தில், பயிரிடப்பட்டு் எட்டு மாதங்களுக்கு மேல் உள்ள நடுப்பட்ட கரும்புக்கு விட்டம் கட்ட வேண்டும்.

5 மாதங்களுக்குமேல் உள்ள வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். மக்காச்சோளப் பயிருக்கு போதிய வடிகால் வசதிகள் செய்ய வேண்டும். விவசாயிகள் மழைக்காலங்களில் பெறப்படும் மழைநீரைப் பண்ணைக் குட்டைகளில் சேகரிக்கவும். மேலும், மானாவாரி நிலங்களில் கட்டசால் உழவு செய்து மண் ஈரத்தை மேம்படுத்தலாம். வாய்க்கால், கண்மாய்களிலும் உள்ள களைகளை வேருடன் பறித்து, சுத்தம் செய்து தண்ணீர் செல்லும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

கோயம்புத்தூர், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் பயிரில் தண்ணீர் தேங்குவதால் கிழங்கு அழுகல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வானம் மேகமூட்டமாகக் காணப்படுவதால் நுண்ணூட்டச் சத்துகள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த பயிரில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன் தகுந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். தென்னை மரங்களுக்குத் தேவையான வடிகால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், நுண்ணூட்டச் சத்துகளை வேர் மூலம் கொடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், இந்த மழையைப் பயன்படுத்தி மானாவாரி நிலங்களில் குறுகிய கால நெல் மற்றும் மிளகாய் பயிர்களை விதைக்கலாம். மழைக்காலங்களில் அடியுரம் மற்றும் மேலுரங்களைக் கொடுக்கும் போது உரங்களை தண்ணீர் அடித்துச் செல்வதால் வீணாகிவிடுகிறது. ஆகையால், மழைக்காலங்களில் இலைவழி உரம் கொடுப்பதே சிறந்தது.'

பூச்சி நோய்கள் உஷார் உஷார்!

வடகிழக்குப் பருவமழையை நம்பி பயிர் செய்துள்ள நெல், நிலக்கடலை, கரும்பு, பருத்தி, பயறு வகைப்பயிர்கள், சோளம் மற்றும் மக்காச்சோளத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் பூச்சி, நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி விளக்குகிறார்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பயிர் பாதுகாப்பு மையத்தின் விஞ்ஞானிகள்!

நெல்!

தற்பொழுது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களில் மழை காரணமாக புகையான், வெண்முதுகுப் பூச்சி, இலைச்சுருட்டுப்புழு, கொம்புப்புழு, கருநாவாய்ப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் காணப்படும். புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த... நிலத்தில் இருக்கும் தண்ணீரைச் சுத்தமாக வடித்துவிட்டு, 8 அடி இடைவெளிக்கு ஓர் அடி அகலம் என்கிற அளவில் பயிரை ஒதுக்கிவிட வேண்டும். மற்ற பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த...

5 சதவிகித வேப்பங்கொட்டைக் கரைசல் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் வேப்பங் கொட்டைத்தூள் என்கிற விகிதத்தில் 12 மணி நேரம் துணியில் கட்டி ஊற வைக்க வேண்டும்) அல்லது 2 சதவிகித வேப்பெண்ணெய் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்கிற விகிதத்தில்) கரைசல் கலந்து தெளிக்கலாம்.

நெற்பயிரில் இலைக்கருகல் நோய் மற்றும் குலைநோய் தாக்குதல் இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த ஆரம்ப நிலையிலேயே ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சூடோமோனஸ் ஃபுளோரோசன்ஸ் கலந்து தெளிக்க வேண்டும்.

சோளம்!

மானாவாரியாகப் பயிரிடப்பட்டுள்ள சோளம் மற்றும் மக்காச்சோளப் பயிர்களில் சோளக்குருத்து ஈ, தண்டுத் துளைப்பான் மற்றும் காய்த் துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதலும், அடிசாம்பல் நோய் தாக்குதலும் பரவலாக காணப்படுகிறது. இத்தாக்குதலை 5 சதவிகித வேப்பங்கொட்டைச்சாறு தெளித்துக் கட்டுப்படுத்தலாம். அல்லது 50 கிராம் கருவாட்டுத்தூளை தண்ணீர் தெளித்து, ஒரு பாலித்தீன் பையில் கட்டி, குண்டூசிகளால் துளையிட்டு ஒரு டப்பாவில் வைத்து மூடி நான்கு இடங்களில் தொங்கவிட்டால் இந்த வாசனைக்குக் கவரப்பட்டு வரும் பூச்சிகள் இறந்து விடும். பூஞ்சணக் கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் நோய்களைக் கட்டுப் படுத்தலாம்.

நிலக்கடலை!

நிலக்கடலையில், சிவப்புக் கம்பளிப்புழுத் தாக்குதல், வேர் அழுகல் நோய் மற்று டிக்கா இலைப்புள்ளி நோய் தாக்குதல் ஆகியவை காணப்படும். வரப்பு ஓரங்களில் ஓர் அடி அகல, ஆழத்தில் குழி எடுத்து அடுத்த நிலங்களுக்கு புழு செல்வதைத் தடுக்க வேண்டும். மாலையில் ஒரு மணி நேரம், காலையில் ஒரு  மணி நேரம் விளக்குப்பொறி வைத்து, தாய் அந்துப் பூச்சிகளை அழித்தால் புழுக்கள் வராது. அதிகமான நேரம் விளக்குப்பொறி வைத்தால் அதிக அளவில் நன்மை செய்யும் பூச்சிகள் கவரப்பட்டு இறந்துவிடும். நோய்களைக் கட்டுப்படுத்த 250 கிலோ தொழுவுரத்தில் இரண்டரை கிலோ சூடோமேனஸ் ஃப்ளோரோசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியைக் கலந்து தூவ வேண்டும்.

மழைக்கால பயிர் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை...

பயறு வகைப் பயிர்கள்!

பயறு வகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோயை உண்டாக்கும் அசுவிணி,வெள்ளை ஈ, நீலவண்ணத்துப் பூச்சி ஆகியவை தாக்கக்கூடும். அதோடு, சாம்பல் நோய், வேர் அழுகல் நோய் ஆகியவையும் வரலாம். விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப் பூச்சி களைக் கவர்ந்து அழிப்பதுடன், 5 சதவிகித வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்கலாம். குறிப்பாக, அசுவிணி மற்றும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 40 கிராம் மீன் சோப்புடன், ஒரு மில்லி காதி சோப் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.

பருத்தி!

80 முதல் 90 நாட்கள் வயது கொண்ட மானாவாரி பருத்திச் செடிகளில் புகையிலைப் புழு மற்றும் புரூடினியா புழுவின் தாக்குதலும், இலைக்கருகல் நோய், வேர் அழுகல் நோய், காய் அழுகல் நோய் ஆகியவற்றின் தாக்குதலும் காணப்படும். பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த... விதைக்கும்போதே பொறிப்பயிராக ஆமணக்கு விதைக்க வேண்டும். ஆமணக்குச் செடிகளை பூச்சிகள் தாக்குவதைத் தெரிந்துகொண்டு, தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும். விளக்குப்பொறி அமைத்து, தாய் அந்துப் பூச்சிகளை அழிக்கலாம். மேலும், பருத்தி இனக்கவர்ச்சிப் பொறியை 10 மீட்டர் இடைவெளியில் ஐந்து இடங்களில் வைத்து ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். நோய்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ் ஃப்ளோரோசன்ஸ் அல்லது டிரைக்கோ டெர்மா விரிடி இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து செடிகள் முழுவதும் நனைவது போல தெளிக்க வேண்டும்.

கரும்பு!

கரும்புப் பயிரில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 4 முதல் 5 மாதங்களில் சாய்ந்த கரும்புகளில் இடைக்கணுப் புழுவின் தாக்குதல் தென்பட வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த... 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை 1 சி.சி என்ற அளவில் முட்டை ஒட்டுண்ணிகளைக் கட்டிவிட வேண்டும்.

மழை எப்படி இருக்கும்?

மழைக்கால பயிர் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism