Published:Updated:

யூரியா தட்டுப்பாடு...

பயிர்களைக் காப்பாற்றும் இயற்கை வழிகள்! பிரச்னைகு. ராமகிருஷ்ணன், படங்கள்: க. சதீஸ்குமார்

யூரியா தட்டுப்பாடு...

பயிர்களைக் காப்பாற்றும் இயற்கை வழிகள்! பிரச்னைகு. ராமகிருஷ்ணன், படங்கள்: க. சதீஸ்குமார்

Published:Updated:

மிழ்நாடு முழுவதும் யூரியா தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதால், தாளடி, சம்பா நெற்பயிர்கள் தழைச்சத்து இல்லாமல் நோஞ்சான்களாகக் காட்சி அளிக்கின்றன. இதனால், விவசாயிகள் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளார்கள். 'பயிரை ஆரோக்கியமாக வளர்த்து காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ?’ என்ற மனஉளைச்சல் அவர்களை வாட்டி வதைக்கிறது.

இதுபற்றி நம்மிடம் கவலையோடு பேசிய திருவாரூர் மாவட்டம், புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவேல், ''நான் நாலு ஏக்கர்ல நெல் நடவு பண்ணியிருக்கேன். அடியுரமா ஏக்கருக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி, ஒரு மூட்டை யூரியா போடுறது வழக்கம். இந்த முறை யூரியா கிடைக்காததால, டி.ஏ.பி மட்டும்தான் போட்டேன். மேலுரமா 15ம் நாள் அரை மூட்டை யூரியா போடணும். ஆனா, அதுக்கும் வழியில்லாம போயிடுச்சு. கடைகடையா அலைஞ்சிப் பார்த்துட்டேன். எங்கயுமே யூரியா கிடைக்கல. இதே நிலைமை நீடிச்சா, என்னோட நாலு ஏக்கர் நெல் லுப் பயிருமே காலியாகிடும்'' என்றார் சோகத்துடன்.

யூரியா தட்டுப்பாடு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவையாறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுகுமாறன், ''தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள்லயுமே கூட யூரியா கிடைக்கல. முதல்வரா இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்குல சிக்கி சிறைக்குப் போயி, பதவி இழந்ததுல இருந்தே தமிழக வேளாண் துறையும், கூட்டுறவுத் துறையும் செயலற்றுக் கிடக்குது. இதனாலதான், யூரியா தட்டுப்பாடு தலைவிரிச்சாடுது.  இதை கள்ளச்சந்தை வியாபாரிங்க பயன் படுத்திக்கிட்டாங்க. வழக்கமா 50 கிலோ யூரியாவோட உண்மையான விலை 272 ரூபாய்தான். இப்ப 350 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யுற கொடுமை நடக்குது'' என்று நொந்துகொண்டார்.

''தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாளடி, சம்பா சாகுபடிக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் டன் யூரியா தேவை. சீனாவுல இருந்து இறக்குமதி செய்றதுல ஏற்பட்ட தாமதம் ஒருபுறமிருக்க, உள்நாட்டு உற்பத்தியும் தடைபட்டு கிடக்குது.  

யூரியா தயாரிக்க தேவையான நாஃப்தாவை, மத்திய பெட்ரோலிய அமைச்சகம்தான், சலுகை விலையில உரத் தொழிற்சாலைங்களுக்கு வழங் கிட்டிருந்துச்சி. ஆனா, மத்தியில ஆட்சிக்கு வந்திருக்குற பா.ஜ.க அரசு அதை நிறுத்திடுச்சு. இதனால, தமிழகத்தில உள்ள மெட்ராஸ் உரத் தொழிற்சாலை, ஸ்பிக் உரத் தொழிற் சாலை, கர்நாடகாவில இருக்குற மங்களூர் உரத் தொழிற்சாலைனு எல்லாத்துலயும் யூரியா உற்பத்திய நிறுத்திட்டாங்க. பிரதமர் நரேந்திர மோடி அரசின் தவறான நடவடிக்கையால, இன்னும் சில மாதங்கள்ல இந்தியா முழுவதுமே உரத் தட்டுப்பாடு தாண்டவமாடப் போகுது'' என்று எச்சரிக்கிறார், தமிழ்நாடு தோட்டக்கலைப் பயிர்கள் விவசாயிகள் சங்கத் தலைவர் புலியூர் நாகராஜன்.

யூரியா தட்டுப்பாடு...

'தற்போது நடவு செய்யப்பட்டுள்ள தாளடி, சம்பா நெற்பயிர்களுக்கு உரிய நேரத்தில் தழைச்சத்து (யூரியா) கிடைக்கவில்லை என்றால், குறைபாடுள்ள குழந்தைகளாகத்தான் அவை வளரும். அதுவும் மழையில் சிக்கிய இளம்பயிர்கள், உயிர் இழக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது?’ என்பதுதான் விவசாயிகளின் பெரும் கவலை.

இயற்கையில் இருக்கிறது... எளிய தீர்வு!

''இந்தப் பிரச்சனைக்கு இயற்கை விவசாயத்தில் எளிமையான தீர்வு இருக்கிறது'' என்கிறார், இயற்கை விவசாயத்தில் ஆழ்ந்த அனுபவ முள்ளவரான தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன்.

''ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 லிட்டர் மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து மூடிவைத்து, நொதிக்கவிட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில், நன்கு கனிந்த 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை ஒன்றாகக் கலந்து நொதிக்கவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, இந்த இரண்டு கலவைகளையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் தலா ஒரு கிலோ ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் (இந்த உயிர் உரங்களின் விலை மிகவும் குறைவு. அருகில் உள்ளா வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்) ஆகியவற்றையும் கலந்து, ஒரு நாள் இரவு நொதிக்கவிட வேண்டும்.

இந்தக் கரைசல், தோசை மாவு பதத்துக்கு மாறி இருக்கும். இதோடு இரண்டு கிலோ கடலைப் பிண்ணாக்கு கலந்து சில மணிநேரம் வைத்திருந்தால், ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, புட்டுப் பதத்துக்கு மாறிவிடும். இதை, ஒரு ஏக்கர் நெல் வயலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரத் தொடங்கி விடும்.

யூரியா தட்டுப்பாடு...

இந்த இடுபொருளை, 'மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல்’ என அழைக்கிறோம்.

இதற்குப் பதிலாக, இன்னும் எளிய முறையில் அக்கம்பக்கத்தில் கிடைக்கக்கூடிய இலைதழைகளைக் கொண்டேகூட இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப் பாகவும் ஊட்டச்சத்து கொடுக்கலாம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.

இதைத் தயாரிக்க, தலா 5 கிலோ வேம்பு, புங்கன், நொச்சி, நெய்வேலி கட்டாமணக்கு, ஆடாதொடை இலைகளை ஒன்றாகக் கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு, ஆறவைத்து வடிகட்டி மூன்று லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் கலக்கவேண்டும். இக்கரைசலில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்குத் தெளிக்கலாம்.

இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் யூரியாவைக் காட்டிலும், தழைச்சத்தும் இதர சத்துக்களும் அதிகமாகவே கொடுக்கக்கூடிய, செலவு குறைந்த, இயற்கையான நுட்பங்களே. இதை எனது அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்'' என்று சொன்னார் பாஸ்கரன்.

தொடர்புக்கு,

தேனாம்படுகை பாஸ்கரன்,
செல்போன்: 9442871049
மயில்வாகனன், செல்போன்: 9884904437

யூரியா தட்டுப்பாடு...

பசுமையை மீட்டுக் கொடுக்கும் மீன் அமிலம்!

திருவாரூர் மாவட்டம், வீரமங்கலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மயில்வாகனன்... யூரியாவுக்கு மாற்றாக சில யோசனைகளை நம்மிடம் பகிர்ந்தார்.

''அரை லிட்டர் புங்கன் எண்ணெய், 100 கிராம் அரப்புத்தூள் அல்லது சீயக்காய்த்தூள், 100 கிராம் வசம்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து 10 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதோடு 80 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்குத் தெளித்தால்... அடுத்த சில நாட்களில் பயிர் பச்சை பிடித்து செழிப்பாக வளரும்'' என்றவர்,

''மீன் அமினோ அமிலம் கொடுத்தும் பயிரை உயிர்ப்பிடிக்கச் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் தலா ஒரு கிலோ மீன்கழிவு, வெல்லம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூடி வைக்க வேண்டும். 10 நாட்கள் கழித்து, இதனை வடிகட்டினால், சுமார் கால் லிட்டர் மீன் அமினோ அமிலம் கிடைக்கும். இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் நெல்லுக்குத் தெளிக்கலாம். கரைசல் எடுத்த பிறகு எஞ்சியிருக்கும் கசடுகளில் இருந்து 10 நாட்கள் கழித்து மீண்டும் கால் லிட்டர் மீன் அமினோ அமிலக் கரைசல் கிடைக்கும். இந்தக் கரைசல் தயாரிக்க வழக்கமாக 20 நாள் தேவைப்படும். ஆனால் அவசர தேவைக்கு இப்படியும் தயாரிக்கலாம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism