Published:Updated:

பருவ மழைக்காலம்... ஆடு, மாடுகள் கவனம்..!

ஆலோசனைஜி. பழனிச்சாமி

பருவ மழைக்காலம்... ஆடு, மாடுகள் கவனம்..!

ஆலோசனைஜி. பழனிச்சாமி

Published:Updated:
பருவ மழைக்காலம்...  ஆடு, மாடுகள் கவனம்..!

றட்சி காரணமாக பசுந்தீவன உற்பத்தி பாதிக்கப்பட்டு கறவை மாடுகளை விற்றுக்கொண்டிருந்த விவசாயிகளின் மனதைக் குளிர வைத்துள்ளது, கடந்த சில வாரங்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை. விவசாயிகளின் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும்... மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது கால்நடைகள்தான். அதனால், இந்தக் காலகட்டத்தில் அவற்றைப் பராமரிக்கும் முறைகளைப் பற்றி இங்கே விளக்குகிறார், கோயம்புத்தூர், சரவணம்பட்டியில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர்.கே. சிவக்குமார்,

''கால்நடைகளைத் தாக்கும் அநேக நோய்கள்... கொசுக்கள், ஈக்கள் மற்றும் புழுக்கள் மூலமே பரவுகின்றன. அதனால், மழைக்காலங்களில் மாட்டுக் கொட்டகையைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழுவத்தில் உள்ள சேறு சகதிகளை அப்புறப்படுத்தி மணல் போன்ற புது மண்ணைக் கொட்டிப் பரப்ப வேண்டும். சிமென்ட் தரையாக இருப்பின் வதவதப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழைக்காலங்களில் கழிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, மழையில் நனைந்து ஈரம் சொட்டும் பசுந்தீவனத்தை அப்படியே மாடுகளுக்குப் போடாமல் ஈரம் போக உலர்த்திக் கொடுப்பது நல்லது. மேலும் தவிடு, பிண்ணாக்கு போன்ற அடர்தீவனங்களையும், வைக்கோல், சோளத்தட்டை போன்ற உலர்தீவனங்களையும் அடைமழைக் காலங்களில் கூடுதலாகக் கொடுப்பது, குளிர்நோய்களில் இருந்து மாடுகளைக் காப்பாற்றும்.

கொசுக்களை விரட்ட புகைமூட்டம்!

சேறும் சகதியும் கொண்ட மற்றும் ஈரமான தரையில் படுத்திருக்கும் மாடுகளுக்கு மடிவீக்கம், புண் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல் மாடுகளின் குளம்புகளில் சேற்றுமண் அப்பியிருந்தால் குளம்புப் புண் ஏற்படலாம். எனவே, கல்உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் மடி மற்றும் குளம்புகளைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். பேன், உன்னி, தினாசு போன்ற ஒட்டுண்ணிகள் இருந்தால்... வேப்பெண்ணெயைத் துணியில் நனைத்து மாடுகளின் உடம்பில் தடவிவிட வேண்டும். மாலைநேரங்களில் தொழுவத்தினுள்ளும், அதைச் சுற்றியும் நொச்சி அல்லது வேப்பிலை புகைமூட்டம் போடலாம். மாடுகளுக்கு பல்வேறு நோய்களைக் கொண்டு வரும் கொசுக்களை, இந்தப் புகைமூட்டம் விரட்டி அடிக்கும்.

பருவ மழைக்காலம்...  ஆடு, மாடுகள் கவனம்..!

செம்மறி ஆடுகளைப் பொருத்தவரை மழைக்காலங்களில் துள்ளுமாரி நோய் எனும் தொற்றுநோய் வரும் வாய்ப்பு உண்டு. இந்த நோய் ஏற்படும் ஆடுகள் திடீர் என துள்ளிக்குதித்து இறந்து விடும். இதேபோல நீல நாக்கு நோய் தாக்குதலும் ஏற்படும். இவற்றைத் தடுக்க சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடவேண்டும்'' என்ற சிவக்குமார், கறவை மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிக்க சில ஆலோசனைகளையும் தந்தார்.

ஒரே தீவனத்தைக் கொடுக்கக் கூடாது!

''கறவை மாடு வளர்ப்பில் பால் உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலம் கூடுதல் லாபம் ஈட்ட முடியும். அதனால், விவசாயிகள் தங்கள் நிலத்திலேயே பசுந்தீவனங்களை உற்பத்தி செய்ய வேண்டும். அதிக பால் கொடுக்கிற

6 கறவை மாடுகளுக்கான தீவனத்தைப் பூர்த்தி செய்ய, ஒரு ஏக்கரில் விளையும் பசுந்தீவனம் போதுமானது. புல் வகை, தானிய வகை, பயறு வகை, மர வகை என அனைத்தையும் கலந்து நடவு செய்ய வேண்டும். புல் வகையில் கோ4; தானிய வகையில் கோ.எப்.எஸ்29 என்ற ரக தீவனச் சோளம்; பயறு வகையில் வேலிமசால், குதிரைமசால் போன்றவை; மர வகைகளில், அகத்தி, சவுண்டல், மல்பெரி, கிளரிசீடியா போன்றவற்றையும் பயிரிடலாம். கொட்டிலில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மேய்ச்சல் நிலங்களில் கிடைக்கும் பலவகை புல், பூண்டுகளை மேயும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, கொட்டில் மாடுகளுக்கு ஒரே மாதிரியான தீவனத்தைக் கொடுக்காமல்... மேற்சொன்ன அனைத்து தீவனப்பயிர்களையும் கலந்து கொடுப்பது நல்லது. இதனால் பால் உற்பத்தித்திறன் கூடுவதுடன் விரைவில் சினை பிடிக்கும்.

பருவ மழைக்காலம்...  ஆடு, மாடுகள் கவனம்..!

நறுக்கிக் கொடுத்தால் சேதாரம் குறையும்!

பசுந்தீவனம் கொடுப்பதுடன் உலர் தீவனங்களும் கறவை மாடுகளுக்கு அவசியம். சோளம், மக்காச்சோளம் போன்றவற்றை தங்கள் நிலத்தில் பயிர் செய்து அவை பூக்கும் தருவாயில் அறுவடை செய்து நன்றாக வெயிலில் காய வைத்து... போர் அமைத்து சேமித்து வைத்து கொடுக்கலாம். இதன் மூலம் சரிவிகித தீவனம் மாடுகளுக்குக் கிடைக்கும். தீவனச் செலவும் குறையும். பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை, தீவனம் நறுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்கும்போது, தீவனச் சேதாரம் 30 சதவிகிதம் குறைகிறது. வேலை ஆட்களின் தேவையும், உற்பத்திச் செலவும் கணிசமாகக் குறைகிறது. தானிய வகை, பிண்ணாக்கு, தவிடு போன்ற உலர் தீவனங்களை மட்டும் கொடுக்கும்போது, ஒவ்வொரு மாட்டுக்கும்40 கிராம் தாதுஉப்பும் கொடுக்க வேண்டியது அவசியம்' என்றார், சிவக்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism