மூலிகை வனம்!

னிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்து களான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத் திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

மழைக்காலம் வந்து விட்டாலே போதும்... காய்ச்சல், தலைவலி என மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது. சமீப ஆண்டுகளாக சிக்குன் குன்யா, பன்றிக்காய்ச்சல், டெங்கு என விதவிதமான பெயர்களில் காய்ச்சி எடுக்கிறது, காய்ச்சல். இத்தனை மருத்துவ வசதிகள் இருக்கும் நவீன யுகத்தில்கூட காய்ச்சலைக் கண்டு நடுநடுங்கி நிற்கிறோம். ஆனால், எந்த வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் இந்த கொடும் சுரங்களை (காய்ச்சலை) எப்படி விரட்டினார்கள் முன்னோர்? என்ற கேள்விக்கான பதிலாக நிற்கின்றன, மூலிகைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூலிகை வனம்!

'டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம்தான் சரியான மருந்து’ என ஆங்கில மருத்துவர்களும், அரசாங்கமும் சேர்ந்தே அறிவித்து இருப்பதில் இருந்து, நம் முன்னோரின் அறிவு நுட்பத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த மழைக்காலத்தில் ஏற்படும் சுரங் களை விரட்டுவதில் முதன்மையானது, விஷ்ணுகிராந்தி என்ற மூலிகை. நடைபாதை, வயல், வரப்பு உள்பட ஈரப்பதமுள்ள இடங்களில் கொடியாகப் படர்ந்து கிடக்கும் சின்னஞ்சிறிய செடியான விஷ்ணு கிராந்திக்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் மலையளவு! விஷ்ணுகிராந்தியில் வெள்ளைப்பூ மற்றும் ஊதாப்பூ என்ற இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும் இரண்டின் மருத்துவக் குணங் களும் ஒன்றுதான்.

'திறந்திட்ட விஷ்ணு கரந்த தனைக்கொணர்ந்து

செப்பமாய் மண்டலந்தான் பாலிலரைத்துண்ணு

மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்

மாசற்ற எலும்புக்குள் சுரம்தான் போகும்

கறந்திட்ட தேகமது கருத்து மின்னும்

கண்ணொளிதான் யோசனை தூரந்தான் காணும்

பிறந்திட்ட சுவாசமெல்லாம் இறுகி ஏறும்

ஏற்றமாம் சுழிமுனையும் திறந்து போமே....’ என்கிறார், சித்தர் போகர்.

விஷ்ணுகிராந்தியை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுப்பாலில் அரைத்து உண்டால், மறந்துபோன நினைவுகள் திரும்பும். அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் கொடுமையான சுரம் போகும். இளைத்த தேகம் தேறும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கண்பார்வை சீராகும். சுவாசம் சீராகும் என்பதுதான் இந்தப் பாடலின் சுருக்கமான பொருள்.

காய்ச்சல் காணாமல் போகும்!

அந்தக் காலத்தில் கொடும் காய்ச்சலைக் குணப்படுத்த விஷ்ணுகிராந்தி செடிகளையே அதிகம் பயன்படுத்தினார்கள் என்கின்றன, சித்த மருத்துவ நூல்கள். மனிதனைத் தாக்கும் காய்ச்சல் 64 வகையானவை எனக் குறிப்பிடும் சித்தர்கள் 'வாதம், பித்தம், கபம் (சளி) என்ற மூன்று நாடிகள்தான் காய்ச்சலுக்கு அடிப்படையானவை’ என்கிறார்கள். குறிப் பாக, விஷக்காய்ச்சல் என ஓலைச்சுவடி களில் குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது உலவும் பன்றிக்காய்ச்சலுக்கு விஷ்ணுகிராந்தி இலையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். விஷ்ணுகிராந்தி, நிலவேம்பு, பற்பாடகம், சீந்தில் கொடி, ஆடாதொடை ஆகிய மூலிகைகளை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, மிளகு, கிராம்புத்தூள் கலந்து வயிறு காலியாக இருக்கும்போது, மூன்றுவேளை குடித்தால், 5 நாட்களில் காய்ச்சல் சரியாகும். பெரியவர்கள் 150 மில்லியும், குழந்தைகள் 75 மில்லியும் குடிக்கலாம். 'பக்கவிளைவு எதுவும் கிடையாது’ என்கிறது, சித்தமருத்துவம்.

மூலிகை வனம்!

விஷக்காய்ச்சலை விரட்டும் விஷ்ணுகிராந்தி கஷாயம்!

கபவாதசுரம் என்ற வகையைச் சேர்ந்த டெங்கு காய்ச்சலுக்கு, ஆரம்ப நிலையில் நிலவேம்புக் கசாயம் சிறந்தது. டெங்கு காய்ச்சலுக்கான வைரஸை அழிக்கும் தன்மை நிலவேம்புக்கு உண்டு. அதேநேரம் டெங்கு முழுமையாக தாக்கும்போது, விஷ்ணுகிராந்தி கஷாயத்தைப் பரிந்துரைக்கிறார்கள், சித்தமருத்துவர்கள். இந்தக் கஷாயத்தை வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ளலாம். விஷ்ணுகிராந்தி வேர்6, கீழாநெல்லி வேர்6, ஆடாதொடை இலை8 ஆகிய மூலிகைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை தலா 6 கிராம், காய்ந்த முந்திரி 15 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. இந்தப்பொடியை ஏற்கெனவே நறுக்கி வைத்துள்ள மூலிகைகளுடன் சேர்த்து, 4 லிட்டர் தண்ணீர் கலந்து 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, இதை ஒரு லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை பெரியவர்களுக்கு 100 மில்லி, சிறியவர்களுக்கு 50 அல்லது 25 மில்லி, குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். தினமும் மூன்றுவேளை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால், டெங்கு மட்டுமல்ல, விடாத காய்ச்சலும் விலகி ஓடும் என்கிறார்கள், தென்னிந்திய சித்தமருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்.

- வலம் வருவோம்...

தளர்ந்த தசைகள் முறுக்கேறும்!

மூலிகை வனம்!

விஷ்ணுகிராந்தியைப் போலவே பவளமல்லி கஷாயத் தையும் காய்ச்சலுக்குப் பயன் படுத்துகிறார்கள். இதுபற்றிப் பேசிய காரைக்குடியைச் சேர்ந்த சித்த மருத்துவர் சொக்கலிங்கம், ''பவளமல்லி என்ற பாரிஜாதச் செடியில் சொரசொரப்பான இலைகளை 100 கிராம் அளவு பறித்து, புதுச்சட்டியில் (மண்சட்டி) வதக்கி, அரை லிட்டர் நீர்விட்டு 100 மில்லியாகச் சுண்டும்வரை காய்ச்சினால்... ரத்த சிவப்பான கஷாயம் கிடைக்கும். இதை, காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஒருவேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுத்து வந்தால், சுரம் போவதுடன், ரத்தம் விருத்தியாகும். உடல் உறுப்புகள் பலம் பெறும். அளவு கூடினாலும் பயமில்லை. பத்தியம் தேவையில்லை. விஷ்ணுகிராந்தி இலையை கீரையைப் போல தினமும் உணவில் சேர்த்து வந்தால், தளர்ந்த தசைகள் முறுக்கேறும். உடல் பளப்பளப்பு அடையும். ராஜ உறுப்புகள் பலமடையும். இதயநோய்கள் வராது'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism