Published:Updated:

பால் விலையும்... பாப்கார்ன் விலையும்!

பிரச்னை தூரன் நம்பிபடங்கள்: வீ. நாகமணி, சொ. பாலசுப்ரமணியன், கு. கார்முகில்வண்ணன், தி. குமரகுருபரன்

பால் விலையும்... பாப்கார்ன் விலையும்!

பிரச்னை தூரன் நம்பிபடங்கள்: வீ. நாகமணி, சொ. பாலசுப்ரமணியன், கு. கார்முகில்வண்ணன், தி. குமரகுருபரன்

Published:Updated:

 'விவசாயிகளுக்கு எதிராக சிந்திப்பதையே முழுநேரப் பணியாக வைத்துள் ளார்களோ இந்த அரசியல்வியாதிகள்’ என்றே எண்ணத் தோன்றுகிறது. 'பால் விலை கட்டுப் படியாகவில்லை... உயர்த்திக் கொடுங்கள்!’ எனக் கத்திக்கத்தியே காலம் கழித்துக் கொண்டிருந்த பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு, தற்போதுதான் சிறிதளவு கருணை காட்டியிருக்கிறது தமிழக அரசு. இதுவும், பால் உற்பத்தியாளர்கள் மீதான பேரன்பினாலோ... பெருங்கருணையினாலோ இல்லை. சமீபத்தில் ஆவின் நிறுவனத்தில் நடந்த இமாலய ஊழலை மறைக்கத்தான் நடந்தேறியிருக்கிறது, இந்த விலையேற்றம். 'இதுவும்கூட விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை இல்லை’ என்பதே எதார்த்தம். ஆனால், இதற்கே அத்தனை அரசியல்வியாதிகளுக்கும் ஆக்ரோஷம் பொத்துக்கொண்டு வந்து விட்டது. 'ஆர்ப்பாட்டம்... போர்ப்பாட்டம்’ எனக் களத்தில் குதித்து, காது கிழிய கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஐயா, அரசியல் பெருமக்களே... உங்கள் கூப்பாடு யாரை எதிர்த்து?

'குற்றவாளி’ என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் புகைப்படத்தை, தலைமைச் செயலகம் தொடங்கி, அத்தனை அரசு அலுவலகங்களிலும் இன்னமும் வைத்திருக்கிறார்களே... இதை எதிர்த்துப் பேசக்கூட முடியாமல், வாயை மூடிக்கொண்டு கிடக்கும் நீங்கள், அப்பாவி விவசாயிகளுக்கு எதிராக வாள் உயர்த்துகிறீர்களே... இதுதான் உங்களின் வீரமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பால் விலையும்... பாப்கார்ன் விலையும்!

'பால் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப் படுகிறார்கள்’ என்பதுதானே உங்கள் குற்றச்சாட்டு. கனவான்களே... மக்களின் வாங்கும் சக்தி எந்த அளவுக்கு வீங்கியிருக்கிறது தெரியுமா உங்களுக்கு? 150 ரூபாய் என்ன... 250 ரூபாய் கொடுத்தும்கூட சினிமா பார்க்கத் தயாராகவே இருக்கிறார்கள் பலரும். மூன்று ரூபாய் பெருமானமுள்ள மக்காச்சோளத்தை, மூன்று சொட்டு எண்ணெய் விட்டு, வறுத்து 150 ரூபாய்க்கு 'பாப்கார்ன்’ என்று திரையரங்குகளில் விற்கிறார்கள். அதையும் வாங்கி வயிற்றுக்குள் திணிக்கும் அளவுக்கு வசதியிருக்கிறது பலரிடமும். ஒரு லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்க்கு விற்கிறது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே நேரம் இல்லை ஜனங்களுக்கு!

டாஸ்மாக் கடையில், உடலைக் கெடுக்கும் 180 மில்லி விஷத்துக்கு 20 ரூபாய் விலை ஏற்றியிருக்கிறது தமிழக அரசு. ஆனால், இதைப்பற்றி கவலைப்படாமல் அரசு கஜானாவை நிரப்புவதில்தானே முனைப்பாக இருக்கிறார்கள் தமிழ்க்'குடி’மக்கள். ஒருவேளை இதை எதிர்த்து நீங்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் பாடியிருந்தால், உங்களுக் கெல்லாம் இந்தக் 'குடிமகன்’கள் சிலையேகூட வைத்திருப்பார்கள்!

பால் விலையும்... பாப்கார்ன் விலையும்!

ஒரு ஏழை விவசாயி, ஒரு பால் மாடு வைத்திருந்தால் அதற்கு 10 கட்டு பசுந்தீவனம் 100 ரூபாய்; தவிடு, பிண்ணாக்கு, பருத்திக்கொட்டை என 150 ரூபாய்; மேய்ச்சல் கூலி 300 எனக் கணக்குப் போட்டால் தினமும் 550 ரூபாய் செலவாகிறது. மாடு தினமும் 20 லிட்டர் பால் கொடுப்பதாக வைத்துக்கொண்டாலும், 500 ரூபாய்தானே கிடைக்கிறது. இதில், 'விவசாயிக்கு என்ன லாபம் கிடைத்துவிட்டது?’ என ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்.

அரசியல்வாதிகளே... உங்களைப் போல, மாடி வீட்டில் வசிக்கும் கோமான்கள் அல்ல விவசாயிகள். அவர்களுக்கு மாதம் மாதம் கிடைக்கிற ஒரே வரவு... பால் காசு மட்டும்தான். அதை வைத்துக் கொண்டுதான், நீங்களும் உங்கள் பினாமிகளும் கொள்ளையடிப்பதற்காக நடத்தும் கல்வி நிறுவனங்களில் அழுது... பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டும். பெரும்பாலான விவசாயக்குடி பெண்களுக்கு காலையில் எழுந்து பள்ளிக்குப் போகும் பிள்ளைகளை கவனிப்பதும், பசுமாட்டை கவனிப்பதும் மட்டுமேதான் தொழிலாகவே உள்ளது. உலகத்தையே அந்த அளவில் சுருக்கிக் கொண்டுதான் உங்களுக்கு பால் ஊற்றுகிறார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு நீங்கள் ஒன்று சேர்ந்து 'பால்’ ஊற்ற நினைப்பது என்ன நியாயம்?

அரசியல் கட்சித் தலைவர்களே, உங்களுக்கு தலா பத்து ஏக்கர் நிலமும், 10 எருமை மாடுகளும் கொடுக்கிறோம். அவற்றை மேய்த்து பால் கறந்து விற்று, குடும்பம் நடத்திக் காட்டுங்கள். பிறகு, மீசையை முறுக்கிக்கொண்டு ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் என வீதிக்கு வரலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism