Published:Updated:

தண்ணீர்... தண்ணீர்...:

வந்தது மழை... தொடர்கிறது பிழை!நீர் மேலாண்மைஆர். குமரேசன்படங்கள்: எல். ராஜேந்திரன், ரமேஷ் கந்தசாமி, வீ. சக்தி அருணகிரி, வீ. சிவக்குமார்.

தண்ணீர்... தண்ணீர்...:

வந்தது மழை... தொடர்கிறது பிழை!நீர் மேலாண்மைஆர். குமரேசன்படங்கள்: எல். ராஜேந்திரன், ரமேஷ் கந்தசாமி, வீ. சக்தி அருணகிரி, வீ. சிவக்குமார்.

Published:Updated:

''மூணு வருஷமா மழையில்லாம, வெள்ளாமை ஒண்ணும் வௌங்கல. இப்படியே போனா, குடிக்கக்கூட தண்ணியில்லாம சாக வேண்டியதுதான்'' என கடந்த மாதம் வரை இயற்கையின் மீது எரிந்து விழுந்து கொண்டிருந்தது பெரும்பான்மை தமிழகம். இந்நிலையில், பதினைந்து நாட்களுக்கும் மேலாக ஆங்காங்கே பெய்து தீர்த்த மழையை எப்படி கொண்டாடி இருக்க வேண்டும்? 'வாராது வந்த மாமழை போற்றுவோம்’ என்று ஆனந்தக் கூத்தாடியிருக்க வேண்டாமோ!

தண்ணீர்... தண்ணீர்...:

 நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அய்யோ மழை வந்திடுச்சு'', ''ஒரு தூத்த (தூறல்) விழுந்தாலே போதும்... ரோட்ல மக்க மனுஷங்க நடமாட முடியல. ஒரே வெள்ளக்காடாயிருது. பாழாப் போன மழை ஒண்ணு பேயாம கெடுக்குது. இல்லைனா பேஞ்சு கெடுக்குது'' எனப் பொதுமக்களும்; 'கண்மாய் உடைஞ்சு போச்சு, வாய்க்கால் தூர்ந்து போச்சு. பெஞ்ச மழைத் தண்ணியெல்லாம் வீணா வெளிய போயிருச்சே'' என விவசாயிகளும் புலம்புவதுதான் தமிழகம் முழுக்க அதிகமாக ஒலிக்கிறது.

மழையைப் போற்றுவதற்கு பதிலாக, தூற்றுவதுதான் நிதர்சனமாக இருக்கிறது. உண்மையில் தூற்றப்பட வேண்டியவர்கள்... மழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைச் சரியாகச் செய்யாத அரசாங்கப் பிரதிநிதிகளும்... அவர்களைத் தட்டிக் கேட்காமல் பதுங்கியே கிடக்கும் நாமும்தான்!

தண்ணீர்... தண்ணீர்...:

மாதம் மும்மாரி பொழிந்த காலத்திலேயே, வெள்ளம் ஏற்படாமல் சிறிய குட்டைகள், குளங்கள், கண் மாய்கள், ஏரிகள், வரத்து வாய்க்கால்கள், கலிங்குகள், மதகுகள் என பாசனத்தை முறைப்படுத்தினர், நமது முன்னோர். வற்றாத ஜீவநதிகள் எதுவும் இல்லாத இந்த மாநிலத்தில், மழையைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பங்களை ஆண்டாண்டு காலமாக நாம் பயன்படுத்தி வந்தது/வருவது... இன்றைக்கும் உலக நாடுகளை வியப்போடுதான் பார்க்க வைக்கின்றது. பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள், நீர் மேலாண்மை வல்லுநர்கள் இங்கே வந்து பார்த்து வியந்து குறிப்பெடுத்துக் கொண்டு போகிறார்கள். ஆனால், 'உள்ளூர் மாடு விலை போகாது’ என்பதற்கு ஏற்ப, உலகத்திலேயே சிறந்த நமது பாசன முறைகளைச் சரிவர பராமரிக்காமல் போனதன் கெடுபலனைத்தான் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம். கடும்வறட்சி, வெள்ளம் இவை இரண்டுக்கும் காரணம், நீராதாரங்களைப் பராமரிக்காததுதான்.

விவாகரத்து வாங்கிக் கொண்ட கரைகள்!

சென்ற மாதம் வரை வறட்சி நிவாரணம் கேட்டுக்கொண்டிருந்த விவசாயிகள், இப்போது வெள்ள நிவாரணம் கேட்கிறார்கள். அரசின் கையாலாகாதத்தனத்தை அல்லவா இது காட்டுகிறது. மழைநீர்ச் சேகரிப்பு குறித்த விழிப்பு உணர்வுக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசு, மழைநீரைச் சேமிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.  ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்கிற பெயரில் விவசாயத்துக்கு வேட்டு வைத்தது, முந்தைய காங்கிரஸ் அரசு. அத்திட்டப் பணியாளர்களுக்கு, குளங்கள், ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தும் பணி கொடுக்கப் பட்டது. ஆனால், அதை சரியாகச் செய்யாமல் கணக்கு மட்டும் காட்டியதன் விளைவு... ஒரு மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், குளங்களிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டன, கரைகள். பொறுப்பற்ற பொதுப்பணித்துறையும், கையூட்டுக்குக் கையெழுத்துப் போடும் சில அதிகாரிகளாலும் இந்த மழைக்காலத்தில் நாம் இழந்த தண்ணீர் 100 டி.எம்.-சியையும் தாண்டும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இது இப்படியென்றால்... முறையான வாய்க்கால் வரத்து இல்லாததால் உள்மாவட்டங்களில் இன்னமும் அநேக குளங்கள், கண்மாய்கள் நீர்வரத்து இன்றி வறண்டு கிடப்பது இன்னொரு சோகம்!

தண்ணீர்... தண்ணீர்...:

இருபோகத்தை இழந்த 200 ஏக்கர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிரம்பாமல் கிடந்தது ஊத்துமலை பெரியகுளம். தற்போதைய மழைக்கு இந்தக் குளம் நிறைந்தது. இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், 'கரை பலவீனமாக இருப்பதால் எந்த நேரத்திலும் உடையும் அபாயம் இருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுங்கள்’ என பகுதி விவசாயிகள் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. வேறு வழியில்லாமல் விவசாயிகளே மணல் மூட்டைகளை வைத்து அடைப்பை சரிசெய்ய முயற்சித்தும் பலனில்லாமல் கரை உடைந்து மழைநீர் வீணாக வெளியேறிவிட்டது. கிட்டத்தட்ட 200 ஏக்கரில் இரண்டு போக விவசாயத்தை இழந்துள்ளனர், இப்பகுதி விவசாயிகள்.

பரிதாப தாமிரபரணி!

''தாமிரபரணி தண்ணியை நம்பி திருநெல் வேலியில 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் பாசனம் நடக்குது. திருநெல்வெலியில் 53 பாசனக் குளங்கள் இருக்கு. பருவமழை பெஞ்சப்ப தாமிரபரணியில இருந்து தினமும் 10 ஆயிரம் கன அடி வீதம் தொடர்ந்து 10 நாள் தண்ணி வீணா வெளியே போயிட்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் இப்படி மழைத்தண்ணி வீணாபோறதைத் தடுக்குற மாதிரி, நதி நீர் இணைப்புக் கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்தி இருந்தா, தண்ணியைத் திருப்பி விட்டிருக்கலாம். ஆனா, அரசு அதை செயல்படுத்தாமல் புறக்கணிக்குது. இப்ப வீணா

தண்ணீர்... தண்ணீர்...:

கடலுக்குத் தாரை வார்த்த தண்ணியை முறையா சேமிச்சிருந்தா... பிசான சாகுபடியில 46 ஆயிரம் ஏக்கர், முன்கார் சாகுபடியில 20 ஆயிரம் ஏக்கர்னு சாகுபடி நடந்திருக்கும். தண்ணியை முறையா சேமிக்கும் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லாத வரைக்கும், இந்த சாபக்கேடு தொடரும்'' என்கிறார், தாமிரபரணி பாசன உரிமை பாதுகாப்புப் பேரவைத் தலைவர் வியனரசு வேதனையுடன்.

வீணாக ஓடிய 25 டி.எம்.சி!

பவானி மற்றும் காவிரி கிளை நதிகளில் தடுப்புக் கால்வாய்கள் கட்டாததால், வழக்கம்போல இந்தப் பருவமழையிலும் 25 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. இதைப்பற்றி பேசும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனசபைத் தலைவர் சுபி தளபதி, ''பவானி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். என்ற எங்களது நீண்டநாள் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாததால், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதுபோலவே நொய்யல், அமராவதி ஆறுகளில் இருந்து, வெளியேறும் உபரிநீரும் காவிரியில் கலக்கும் நிலையில்... மேட்டூர் அணை திறக்கப்படாமலேயே கல்லணைக்கு 30 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் வருவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்கிறார்.

அரசின் அலட்சியம்தான் காரணம்!

தண்ணீர்... தண்ணீர்...:

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருக்கும் வரதமாநதி அணை நிரம்பியதால், நெய்காரப்பட்டி அருகே உள்ள செங்குளம், அம்மாபட்டியான் குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வந்தது. இந்தக் குளங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. 'வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் கொண்டு மீட்டோம்’ என மார்தட்டிக் கொள்ளும் மாநில அரசு, குளங்களின் கரைகளில் கவனம் செலுத்தி இருந்தால், இந்த அவலம் நேர்ந்தே இருக்காது என்பதை மறந்து விட்டது.

இங்கே இடம்பெற்றிருப்பதெல்லாம் ஒரு சோறு பதமே! டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் பொதுப்பணித் துறையினரின் மெத்தனப் போக்கால் இந்த ஆண்டு பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட மழைநீர்க் கதைகள் ஏராளம்... ஏராளம்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism