Published:Updated:

கோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்!

அன்னதானத்துக்கு ‘ஆர்கானிக்’ காய்கறிகள்...முயற்சிஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள் என்று காலியான இடங்களில் வீட்டுத்தோட்டம் அமைத்து, தேவையான காய்கறிகளை பலரும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளார்கள். இந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், மொண்டிப்பாளையம் வெங்கடேசப்பெருமாள் கோயில் ஊழியர்கள், அருகிலுள்ள கோயில் இடத்தில் இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்து, கோயில் அன்னதானத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள. தினம்தோறும் அன்னதான பந்தியில்... அவியல், பொரியல், கூட்டு, சாம்பார் என்று கோயில் இடத்தில் விளைந்தவையே மணக்கின்றன!

கோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்!

இதைப் பற்றி தோட்டத்தில் நின்றபடி நம்மிடம் பேசிய கோயில் ஊழியர்களில் ஒருவரான பழனிச்சாமி, ''இது வளமான செம்மண் பூமி. இங்க மொத்தம் 40 சென்ட் நிலத்துல காய்கறி போட்டிருக்கோம். தக்காளி, கத்திரி, வெண்டை, பொரியல்தட்டை, பூசணி, அவரை, கீரை, பாகல்னு பலவிதமான காய்கறிகளை சுழற்சி முறையில பயிர் செய்றோம். அதனால, வருஷம் எல்லாம் காய்கறி இருந்திட்டே இருக்கும். முழுக்க இயற்கை முறையிலதான் பயிர் செய்றோம். காய்கறிகளை அன்னதான திட்டத்துக்கே கொடுக்கிறோம்' என்றவர், காய்கறி சாகுபடி குறித்தும் விளக்கினார்.

கோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்!

'சித்திரை மாசம் கோடை உழவு செய்து மண்ணை பொலபொலப்பாக்கணும். பிறகு, 10 மாட்டுவண்டி தொழுவுரத்தைக் கொட்டி இறைச்சுடுவோம். தொடர்ந்து மறுபடியும் ரெண்டு முறை ஏர் உழவு செஞ்சு பாத்தி பிடிப்போம். தேவையான நாற்றுகளை முதல் போகத்துக்கு மட்டும் நாற்றுப்பண்ணையில் வாங்கி நடவு செய்தோம். மறுபோகத்துக்கு முற்றிய தரமான காயில இருந்து எடுத்து விதைநேர்த்தி செய்து பயன்படுத்துறோம். கோயிலுக்கு சொந்தமான கிணத்துல இருந்துதான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்றோம். நடவு செய்த 15-வது நாள்ல களை எடுத்து, செடிகளுக்கு தலா 500 கிராம் மண்புழு உரத்தை கொடுத்து நீர்ப்பாசனம் செய்கிறோம்.

கோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்!

35-வது நாள்ல ஒரு களை எடுத்து, தலா 500 கிராம் மண்புழு உரத்தைக் கொடுக்கிறோம். பூவெடுக்கும் பருவத்துல சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படும். அதுக்கு துளசிதேங்காய் தண்ணீர் கலவையைத் தெளிச்சு கட்டுப்படுத்துறோம்' என்று சொன்னார் பழனிச்சாமி.

கோயிலின் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி 'அன்னதான திட்டத்துக்காக மாசம் 7,500 ரூபாய்க்கு காய்கறிகளை வெளியில வாங்கி வந்தோம். இப்ப அந்த செலவு மிச்சம். மொத்தம் 105 ஏக்கர் நிலம் இருக்கு. போதுமான தண்ணீர் ஏற்பாடு செய்த பிறகு, மேற்கொண்டு விவசாயத்தை விரிவுபடுத்தப் போறோம். இதன் மூலமா அன்னதானத்துக்குத் தேவை யான உணவுப் பொருட்கள் மொத்தத்தையும் விளைவிக்குற யோசனை இருக்கு'' என்றார் ஆர்வத்துடன்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04296289270.

துளசிதேங்காய் தண்ணீர்!

கோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்!

அரை கிலோ துளசியைப் பறித்து, ஐந்து லிட்டர் தேங்காய் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைக்க வேண்டும். இடையில் தினம் ஒரு முறை கலக்கிவிடுவது நல்லது. நான்காவது நாளில் பாத்திரத்தில் உள்ள துளசி மட்கி, தேங்காய்த் தண்ணீருடன் கலந்து, ஒருவித காரவாசனையுடன் இருக்கும். சுத்தமான துணியில் வடிகட்டி, துணியில் தங்கியிருக்கும் அழுகிய துளசி இலைகளை, துணியோடு சேர்த்து பிழியும் போது வடியும் சாறையும் கலவையில் சேர்க்கலாம். ஐந்து லிட்டர் துளசிதேங்காய் தண்ணீருடன், 5 லிட்டர் சுத்தமான தண்ணீர் கலந்து கைதெளிப்பான் கொண்டு, காலைவேளையில் பூவெடுத்து நிற்கும் செடிகள் மீது தெளிக்கலாம். பூச்சிகள் ஒழிவதுடன், மலர்ந்த பூக்கள் உதிராமல் பிஞ்சுகளாகவும் மாறும்.

காய்ப் பருவத்தில் புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும். பச்சைப்புழு, காய்த் துளைப்பான், பொறிவண்டு போன்ற பூச்சிகள் காய்களைத் துளையிட்டு சேதாரப்படுத்தும். வேம்புக் கரைசலை செடிகளின் மீது தெளித்து இதைக் கட்டுப்படுத்தலாம்.

கோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்!

2 கிலோ வேப்பிலையை 5 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீரில் 4 நாட்கள் ஊறவைத்து, வடிகட்டி 5 லிட்டர் தண்ணீர் கலந்து புகைபோல செடிகள் மீது தெளிக்க, காய்ப் புழுக்கள் காணாமல் போய்விடும்.

10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி வேம்பு மருந்து என்கிற வகையில் கடையில் வாங்கியும் தெளிக்கலாம்.

'காவிரியில் தமிழக உரிமை பாதுகாக்கப்படும்'

உமாபாரதி உறுதி!

இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழக நிர்வாகிகள் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் ஒரு குழுவாக டெல்லி சென்று, விவசாயம் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உமாபாரதி, வேளாண்மைத்துறை அமைச்சர் ராதாமோகன்சிங் ஆகியோரைச் சந்தித்து, 'நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்புகளுக்குத் தீர்வு காண வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்பதையெல்லாம் வலியுறுத்தியுள்ளனர்.

கோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்!

இதுபற்றி நம்மிடம் பேசிய இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின், தமிழகப் பிரிவு செயலாளர் ஆர்.விருத்தகிரி, காவிரி பிரச்னை பற்றி அமைச்சர் உமாபாரதியிடம் எடுத்துச் சொன்னபோது, சட்டத்துக்கும், நீதிக்கும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கும், உச்ச நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதலுக்கும் எதிராகச் செயல்படுகிறது கர்நாடகம். காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம்’ என எங்களிடம் உறுதி அளித்ததுடன், 'இந்தப் பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க உறுதியாகச் செயல்படுவேன்’ என்றும் சொன்னார்.

மத்திய அமைச்சர்களுடன் எங்கள் குழு சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததுடன், உமாபாரதியுடனான சந்திப்பில் எங்களுடன் கலந்துகொண்டு தமிழக நியாயங்களை எடுத்து வைத்தார், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்' என்று சொன்னார்.

- எஸ்.கதிரேசன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு