Published:Updated:

லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!

கூட்டம்த.ஜெயகுமார்படங்கள்: பா.அருண்

ந்தத் தலைப்பில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே கட்டியாம்பந்தல் கிராமத்தில் இருக்கும் கண்ணன் ராஜகோபாலன் பண்ணையில் நவம்பர் 30 அன்று கருத்தரங்கு நடைபெற்றது. 'பசுமை விகடன்’ மற்றும் இயற்கை வழி வேளாண் மையம் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில்... சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300 விவசாயிகள் பங்கேற்றனர்.

லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!

 நிகழ்ச்சி நடக்கும் நா­ள் வரை மழை இல்லாத அப்பகுதியில், நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் மழை கொட்ட ஆரம்பித்தது இன்ப நிகழ்வு. வாசகர்கள் துணையுடன் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தார்பாலின் பந்தலின் கீழ் பயிற்சி மெள்ள ஆரம்பமானது. மழை குறைந்த பிறகு, பயிற்சி முழுவேகம் எடுத்தது.

வரவேற்புரை நிகழ்த்திய கண்ணன் ராஜகோபாலன், 'நாம் இயற்கையை விட்டுவிட்டு வெகுதூரம் போய்விட்டோம். ஆனால், இயற்கை அப்படியேதான் இருக்கிறது. நீர், நிலம், காற்று, வானம், செடி கொடிகள் இவையெல்லாம்தான் இயற்கை. விவசாயத்தில் நாமெல்லாம் பயிரின் லாபக்கணக்கை மட்டுமே பார்க்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களை சரியாகப் பராமரித்தால் அதுவே பெரிய லாபம்தான்' என்றார்.

மலர் சாகுபடி குறித்து பேசிய திருவள்ளூர் மாவட்டம், பாகல்மேட்டைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 'இயற்கை விவசாய முறையில் விளையுற மலர்கள் ஒரு நாள் முழுக்க தாங்கும். விலையும் கூடுதலா கிடைக்கும். சந்தைக்குக் கொண்டு போனா, வியாபாரிகளே தேடி வந்து வாங்கிக்கிறாங்க. மலர் சாகுபடிக்கு பெரியளவுல நிலம் தேவையில்ல. 30 சென்ட் நிலமிருந்தாகூட போதும். அதுவே ஒரு குடும்பத்துக்குப் போதுமான வருமானத்தைக் கொடுக்கும். மலர் சாகுபடி வருமானத்தை வெச்சுதான் என் பையனை டாக்டருக்கும், பொண்ணை மெட்ரிகுலேஷன் பள்ளியிலயும் படிக்க வெச்சுக்கிட்டிருக்கேன்'' என்றபோது கைத்தட்டலால் அதிர்ந்தது, பண்ணை.

லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!

அடுத்து பேசிய 'சண்டே மார்க்கெட்’ முரளி, 'இயற்கை அங்காடிகள் வைக்கணும்னு நினைக்கிறவங்க, குடியிருப்புப் பகுதிகளா தேர்ந்தெடுத்து கடைய வைங்க. வண்டிகளை நிறுத்தறதுக்கு இடம் ஒதுக்குங்க. மெயின் ரோட்லதான் கடை இருக்கணும்னு அவசியம் இல்லை. முதல் ரெண்டு வருஷங்களுக்கு வியாபாரத்துக்குத் தகுந்த மாதிரி பொருட்கள வாங்கி விற்பனை செய்யுங்க. வியாபார நெளிவு, சுளிவுகள் தெரிஞ்சதுக்கப்புறம் பெரிய அளவுல செய்யுங்க' என்று ஆலோசனைகளைச் சொன்னார்.

காய்கறிகள் சாகுபடி குறித்து பேசிய உத்திரமேரூரைச் சேர்ந்த பரத், 'காய்கறிகள்ல லாபம் வரலனு சொல்றதுக்கு ஒரே காரணம் மத்தவங்க எந்த காய்கறிகள போட்டு லாபம் எடுக்கிறாங்களோ அதையே நாமும் செய்றதுதான். அதேமாதிரி ஒரே இடத்துல கொண்டு போய் விற்பனை செய்றதும் தப்பு. நான் கீரை, வெண்டை, கத்திரி, அவரை, பீர்க்கன், சுரைக்காய்னு காய்கறிகளைப் பயிர் செய்றேன். அதை பல சந்தைகளுக்கு கொண்டு போறேன். எங்கு நல்ல விலை கிடைக்குதோ அங்கே வித்திடுவேன். ஒரு நாளைக்கு செலவெல்லாம் போக 700 ரூபாய் சம்பாதிச்சிட்டு இருக்கேன். என்கூட படிச்சவங்க எல்லாம் மத்த வேலைகள்ல சம்பாதிக்கிறதுக்கு சமமா விவசாயத்திலேயே நான் சம்பாதிச்சிட்டு இருக்கேன். இதை சொல்றவதுக்கு நான் ரொம்பப் பெருமைப்படுறேன்' என்று சொல்லி பெருமிதப் பார்வையை வீசினார்.

லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!

இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி வழங்கிய மதுராந்தகத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சுப்பு, 'இயற்கை விவசாயத்துல முக்கியமானது, நாட்டுமாடுதான். நாட்டுமாட்டின் சிறுநீர் மற்றும் சாணத்தில் 81 % மண்ணை வளமாக்குறதுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கு. ஆனா, நாம யூரியா வாங்குறதுக்காக கடைகடையா ஏறி இறங்கிட்டு இருக்கோம். இப்ப யூரியா கிடைக்கலேனு புலம்பிட்டு இருக்கோம். இதிலிருந்து விவசாயிகள் மீளணும்னா... அவங்க இயற்கை விவசாயத்துக்கு வருவது ஒன்றுதான் தீர்வு'' என்றவர், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகளை செய்முறையோடு விளக்கினார்.

நிறைவாக, இந்தப் பயிற்சியின் வாயிலாக தாங்கள் கற்றதைப் பற்றி விவசாயிகள் சிலர் பேசினார்கள்.

சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மி ரவிக்குமார் பேசும்போது, 'தொலைபேசி தொடர்பகத்தில் பணிபுரியுறேன். இந்தக் கூட்டத்துல பங்கெடுத்தது ரொம்ப சந்தோஷமா இருக்குது. விவசாயத்துல எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது, எப்படி செய்யலாம்கிறதைப் பத்தி ஆழமா தெரிஞ்சுக்க முடிஞ்சது'' என்றார்.

பொன்விளைந்த களத்தூரைச் சேர்ந்த சேஷாத்திரி, 'இங்கே பேசிய அனைவரும் விவசாயிகள். பேச்சாளர்கள் இல்லை. அதனால்தான் விவசாயத்தை பற்றி இவ்வளவு அதிகமான தகவல்களை அனுபவத்தோடு சொல்கிறார்கள். பூச்சிவிரட்டியில் மஞ்சள் தூள் கலக்கக்கூடாது என்று சொன்னார்கள். இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களைக் கற்றுக்கொண்டேன்'' என்றார். பவுஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பிரவந்தி பிரசாத் பேசும் போது, 'இதுபோன்ற கூட்டங்கள்தான் புதுபுது விஷயங்களை தெரிஞ்சுகிறதுக்கு உதவியா இருக்கு. இன்றைக்கு மலர் சாகுபடி குறித்து நிறைய தகவல்களைத் தெரிஞ்சிகிட்டோம்' என்றார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு, மூலிகைத் தேநீரும், மதிய உணவாக சுவையான சிறுதானிய உணவும், வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பல வகையிலும் தன் உதவிக் கரத்தை நீட்டினார், கட்டியாம்பந்தல் அருகில் உள்ள பாப்பாநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி பிள்ளை.

''இயற்கைதான் நிலைக்கும்...''

லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!

எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவனத்திலிருந்து ஓங்கி ஒலிக்கும் குரல்

நிகழ்ச்சியில் அனை வரையும் ஈர்த்த  விஷயம்... சென்னை, தரமணியில் இருக்கும் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறு வனத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி சஞ்சீவ், பேசியதுதான். 'நாம் பயன்படுத்துற நிலங்களுக்கு என்ன சத்து தேவை என்பதைத் தெரிஞ்சு அதற்கேற்ப இடுபொருட்களைக் கொடுக்கணும். படிப்படியா ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதே இயற்கையை நோக்கி செல்லக்கூடிய வழி. கடைசியில் இந்த மண்தான் ஜெயிக்கும். அதாவது, இயற்கைதான் நிலைக்கும்' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

நம்மாழ்வாருக்கு வேம்பு மாலை!

லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!

முன்னோடி விவசாயி, சுப்பு தன்னுடைய பேச்சினூடே, ''நம் எல்லோருக்கும் இயற்கை விவசாய வழிகாட்டியாக நின்ற ஆசான் நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்த தினம் டிசம்பர் 30. அன்றைய தினம் அவருடைய படத்துக்கு வேப்பிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்துங்கள். உங்களிடம் உள்ள பாரம்பரிய விதைகளை, மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்று முழுவதும், இயற்கை விவசாயத்தின் அருமைகளை சந்திப்பவர்களிடம் பேசுங்கள். அதுதான், நம்மாழ் வாருக்கு நாம் செலுத்தும் மரியாதை. இதை எல்லோரும் செய்வீர்களா?' என்று கேட்க...

''நிச்சயம் செய்வோம்' என்று சம்மதக் குரல் கொடுத்தனர் அனைவரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு