Published:Updated:

மண்புழு மண்ணாரு

கடலை எண்ணெயும் ‘நல்ல’ எண்ணெய்தான்!மாத்தி யோசிஓவியம்: ஹரன்

பிரீமியம் ஸ்டோரி

டலையைப் பத்தின நெகிழ்வான விஷயங்களைப் பேசியிருந்தேன். கடலை சாகுபடி சம்பந்தமான விஷயங்களும் கொஞ்சம் கைவசம் இருக்கு. அதையெல்லாமும் இந்தத் தடவை பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன்.

கார்த்திகைப் பட்டத்து நிலக்கடலைய விதைக்கிற நேரம் இது. நிலக்கடலை சாகுபடி செய்ய செம்மண், மணல் சாரியான மண்தான் சரியானது. களிமண் கலந்த மண்ணுல விளைச்சல் குறைவாதான் இருக்கும். பொல பொலனு மண்ணு இருந்தாதான், மடமடனு மண்ணுக்குள்ள கடலை இறங்கும். அதனால கெட்டியான மண்பாங்கு உள்ள நிலமா இருந்தா, ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் (இது இயற்கை உரம்தான்) போடலாம். இதனால மண்ணு பொலபொலப்பாகும். 15 நாளைக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம், இல்லைனா... அமுதக்கரைசலை தண்ணியில கலந்துவிடலாம்.

மண்புழு மண்ணாரு

நிலக்கடலை சாகுபடி செய்யும்போது, முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு. விதைச்ச 45-ம் நாள், மண் அணைச்சு விடணும். செடியை சுத்தி மண் அணைக்கும் போதுதான், நிறைய காய் பிடிக்கும். இதைச் செய்யாம விட்டா... மகசூல் அளவு பாதிக்கும்.

'கடலை எண்ணெயில செய்த பலகாரம் சாப்பிட்டா, மந்திரிச்சுவிட்ட மாதிரி மயக்கமா இருக்கு’னு சிலர் சொல்லுவாங்க. இதுக்குக் காரணம், நிலக்கடலையை உடைக்கும்போது சரியான முறையில தரம் பிரிக்காததுதான். நல்ல கடலையோடு, பூஞ்சணம் புடிச்ச பொக்குக் கடலைகளையும் சில புண்ணியவானுங்க கலந்துவிட்டு, செக்கில எண்ணெய் எடுப்பாங்க. இந்த பொக்குக் கடலைதான் மயக்கத்துக்குக் காரணம்!

காட்டுப் பயணம், மலையேற்றம்னு போற வங்க பையில நிலக்கடலை கட்டாயம் இருக்கும். வறுத்த நிலக்கடலையை நல்ல பசி நேரத்துல சாப்பிட்டா, அடுத்து ரெண்டு மணி நேரத்துக்கு சாப்பாடு தேவைப்படாது. கண்டகண்ட நொறுக்குத்தீனி சாப்பிடறதைவிட, கடலை சாப்பிடறது ஆயிரம் மடங்கு நல்லது. ஆனா, அளவா சாப்பிடணும்கிறத மறந்துடக்கூடாது.

'கடலை எண்ணெயைத் தொடர்ந்து சாப்பிட்டா, நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும், படிக்கிற பசங்களுக்கு ஞாபகசக்தி கூடும், புற்றுநோயை அழிக்கக்கூடிய தன்மைகூட நிலக்கடலைக்கு உண்டு’னு ஆதரவு கொடிபிடிக்குது மருத்துவ விஞ்ஞானம்.

நிலக்கடலைய சாகுபடி செஞ்சா, காய்ப்புடிக்கிற வரையிலும் வயல்ல எலித்தொல்லை இருக்காது. அதுக்குப் பின்னாடி, எலிங்க கூட்டம், கூட்டமா வரும். இதுக்குக் காரணம், நிலக்கடலையில 'போலிக் ஆசிட்’ அதிகமா இருக்கு. இது இனப் பெருக்கத்தைத் தூண்டிவிடும். அதனாலதான், எலிக் குடும்பம் வேகமா பெருகுது. புதுசா கல் யாணமான, ஜோடிங்க தினமும் நிலக்கடலை சாப்பிட்டா... அந்த வீட்டுல குழந்தைக் குரல் சீக்கிரமே கேட்கும்.

உலக அளவுல சீனாவுக்கு அடுத்தபடியா நம்ம நாடுதான் நிலக்கடலையை அதிகமா உற்பத்தி செய்யுது. இந்த ரெண்டு நாடுகளும்தான் மக்கள் தொகை பெருக்கத்துல முன்னணியில இருக்கு. மத்த நாடுகள ஒப்பிடும்போது, இந்த நாடுகள்ல இதயநோய் பாதிப்பு ரொம்பக் குறைவு. ஆக, குழந்தைப்பேறு மருந்தும், இதயக்கோளாறு மருந்தும் இந்த நாடுகள்ல குறைவாதான் விற்பனையாகுது. இதுக்கு மூலக்காரணம், நிலக்கடலையை இந்த ரெண்டு நாட்டு மக்களும் தின்னு தீர்க்கிறதுதான்.

கண்ட மருந்துகளையும் கண்டுபிடிச்சு அதை விற்பனை செய்யறதுக்காக 'கடலையைத் தின்னா ரத்தக் கொதிப்பு வரும்... கடலை எண்ணெய் பலகாரம் சாப்பிட்டா கொழுப்பு கூடும்’னு குடு குடுப்பைக்காரன் மாதிரி குறிசொல்லி, பீதியைக் கிளப்பிட்டே இருக்காங்க. கடலை சாப்பிடறதைக் கைவிட்டா... மருந்து கம்பெனிங்க கல்லா கட்டும். அதுக்காக... கடலை மேல புகார் வாசிக்கிறாங்க.

இப்படித்தான், 'தேங்காய் எண்ணெயில கொழுப்பு அதிகம், ரத்தக் குழாயில அடைப்பை உருவாக்கும்’னு ஒரு புரளியைக் கிளப்பி தேங்காய் எண்ணெயை சாப்பிடாம பார்த்துக்கிட்டாங்க. ஆனா, கேரளாவுல தேங்காய் எண்ணெய் இல்லாத பலகாரத்தைப் பார்க்கவே முடியாது. தமிழ்நாட்டுக்காரங்களவிட, அந்த மாநிலத்துக்காரங்க திடமாதான் இருக்கிறாங்க.

'கடலை எண்ணெய் சரியில்ல... தேங்காய் எண்ணெய் நல்லதில்ல’னு பிரசாரம் பண்ணி, கெமிக்கல் கலந்த சத்து செத்துப்போன, 'ரீஃபைண்ட்’ எண்ணெயை வாங்கி தின்னுட்டு, சீக்கிரம் சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு வாங்கனு மறைமுகமா கூப்பிடறாங்க. இந்த வியாபார தில்லுமுல்லு தெரியாம.... நம்ம தோட்டத்துல விளைஞ்ச சத்தான நிலக்கடலை, தேங்காயை வித்துப்புட்டு... ரசாயனம் கலந்த 'ரீஃபைண்ட்’ எண்ணெயை சாப்பிட்டுட்டு, ஆஸ்பத்திரிக்கு அலையுற நிலைமைதான் இப்ப உருவாகியிருக்கு!

மனுஷனுக்கு உற்சாகமான உணவா இருக்கிற கடலை, மாட்டுக்கு சத்தான கடலைப் பிண்ணாக் காவும் இருக்கு. கூடவே இந்த கடலைக் கொடி, மண்ணுக்கு வளமான உரமாகுது. அன்னிய நாட்டுல இருந்து வந்து குதிச்சாலும்... நிலக்கடலை அருமையான பயிர்தாங்கிறத எல்லாரும் உணரணும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு