Published:Updated:

காய்கறி வளர்ப்பு...

கற்றுக்கொடுக்கிறது, கான்வென்ட் பள்ளி!ஆர்வம்த.ஜெயகுமார்

பிரீமியம் ஸ்டோரி

மிழகத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பலவும் சின்னச்சின்ன தோட்டங்கள் அமைப்பது, மரங்கள் வளர்ப்பது, இயற்கை முறை விவசாயத்தைக் கையாள்வது என விவசாயம் சார்ந்த பணிகளைத் தற்போது முன்னெடுத்து வருகின்றன. பசுமை விகடன் இதழில் அவ்வப்போது வரும் கட்டுரைகளே இதற்குச் சாட்சி. இதுபோன்ற பணிகள்தான் மாணவர்களின் மனதில் நீண்ட காலத்துக்கான விதையை விதைக்கிறது. இத்தகைய விதைப்பில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், கேம்பிரிட்ஜ் பள்ளிக்கூடம். விவசாயத்தை ஒரு பாடமாகவே போதிக்கும் பணியைச் செய்து வருகிறது இந்தப் பள்ளிக்கூடம்.

காய்கறி வளர்ப்பு...

பள்ளிக்குள் நுழைந்ததும் புங்கன் மரங்களின் சில்லென்ற காற்று நம்மை வரவேற்க, மாணவர்கள் மரத்தடியிலும் வகுப்பறையிலும் படித் துக் கொண்டிருந்தார்கள். வரவேற்றுப் பேசிய பள்ளியின் தாளாளர் சனத்குமார், ''பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா, குடும்பத்தோடு நகரத்துல எங்கப்பா குடியேறினதால, விவசாயத்த பக்கத்துல இருந்து செய்ய முடியல. நகரத்துல வளந்தாலும் விவசாயத்த பத்தியும், நாட்டுக்கு அதோட தேவை பத்தியும் நல்லாவே தெரியும். வளர்ற தலைமுறைகளுக்கு விவசாயம்னா என்னானுகூட தெரியாத அளவுக்கு வேகமா போயிட்டிருக்கோம். வீடுகள்லயும் அதற்கான சூழல் குறைஞ்சுட்டு வருது. அவங்களுக்கு விவசாயத்த பத்தி தெரிஞ்சிகிறதுக்கு சரியான இடம் பள்ளிக்கூடம்தான். அத நாம நடத்தற பள்ளியிலிருந்தே தொடங்கலாம்னு வந்த யோசனைதான் இந்த விவசாய முயற்சி.

காய்கறி வளர்ப்பு...

இந்தப் பள்ளியை 10 வருஷத்துக்கு முன்பு தொடங்கினேன். நடைபாதை, பள்ளியின் சுற்றுச்சுவரை சுத்தியிருக்கிற இடங்கள்ல 100 புங்கன், 40 கசகசா, 15 தென்னங்கன்றுகள் நட்டு வெச்சோம். இப்போ அந்த மரங்களெல்லாம் வளந்து நிழல் கொடுத்துட்டு இருக்கு. போன வருஷம்தான் விவசாயத்துக்குனு 25 சென்ட் நிலத்த ஒதுக்கி பயிர் செய்ய ஆரம்பிச்சோம். அதிலேயும் இயற்கை விவசாய முறையிலதான் பயிர் செஞ்சுட்டு வர்றோம்.

16-க்கு 16 சதுர அடியில 19 சதுரப் பாத்திகள அமைச்சிருக்கோம். இதுல சில பாத்திகள் பெரியது, சிறியதுமாக கலந்து இருக்குது. ஒவ்வொரு பாத்தியையும், ஒவ்வொரு கழனியாதான் பாக்குறோம். பாத்திகள சுத்தி நடக்கறதுக்காக 2 அடி இடைவெளியில நடை பாதையும், மாணவர்கள் அங்கேயே அமர்ந்து விவசாயப் பாடத்தைக் கற்கும் வசதிக்காக சிமென்ட் தரையையும் அமைச்சிருக்கோம்.

காய்கறி வளர்ப்பு...

புடலை, பாகல், தக்காளி, வெண்டை, மிளகாய்னு பலவகை காய்கறிகளயும் விளைய வைக்கிறோம். இதோட கொத்தமல்லி, வாழை, மக்காச்சோளம், கீரைனு பயிர் செய்றோம். தொழுவுரமும், பஞ்சகவ்யாவும்தான் பயிர்களுக்கான ஊட்டங்கள். இங்க விளை விக்கப்படுற காய்கறிகள், தானியங்கள், கீரைகளையெல்லாம் மாணவர்களே வாங் கிட்டுப் போவாங்க. அதுல வர்ற தொகையை விவசாயப் பணிகளுக்குனு ஒதுக்கிடுவோம்' என்றார்.

விவசாய அனுபவத்தைப் பற்றி ஆர்வம் பொங்க பேசிய மாணவி வைஷ்ணவி, 'காய்கறிகள பயிர் செய்யும்போது, நிலத்த உழவு ஓட்டிட்டு விதைகள போடுறாங்களா, செடியை வைக்கிறாங்களானு தெரியாது. இப்போ நாங்களே நேரடியா விவசாயம் செய்றதால தக்காளி, கத்திரிக்கு நாத்தைத் தயார் செஞ்சு நடவு போடணும். வெண்டைக்கு விதையை விதைக்கணும்னு தெரிஞ்சுக்கிட்டேன். எல்லோரும் சேந்து வேலை செய்றதால விளையாட்டு வகுப்பை விட, விவசாய கிளாஸ் ரொம்ப சந்தோஷமா இருக்கு' என்கிறார்.

காய்கறி வளர்ப்பு...

மாணவன் கதிரேஸ்வரன், 'இயற்கை உரங்கள பத்தி இங்கதான் பாக்குறேன். பாக்கறது மட்டுமில்லாம அத எப்படி தயார் பண்றதுனும் கத்துக்கிட்டேன். இலைதழைகள் வெச்சு தொழுவுரம் தயாரிக் கிறது; சாணம், மாட்டுச்சிறுநீர், நெய், பால், தயிர், வெல்லம், பழங்கள வெச்சு பஞ்ச கவ்யா தயாரிக்கிறது எல்லாத்தையும் கத்துக் கிட்டேன். 1 லிட்டர் பஞ்சகவ்யாவை, 100 லிட்டர் தண்ணியில கலந்து தெளிச்சு வந்தா, பயிர்களுக்கு மைக்ரோ நியூட்ரிஷியன் சத்துக் கள் கிடைக்குது. செடிகளும் நல்லா வளர்றத பாத்திருக்கேன்.

இந்த இயற்கை உரத்த பத்தி அப்பாகிட்ட சொல்லி, எங்க வயல்ல ரசாயன உரம் போடறத நிறுத்தச் சொல்லப் போறேன்' என்று பாடத்தை வீட்டுக்கும் சேர்த்தே சொல்கிறார்.

நிறைவாக பேசிய சனத்குமார், ''சி.பி.எஸ்.இ கல்வித்திட்டத்துல 'தொடர் மதிப்பீட்டு முறை’யின்கீழ் ஓவியம், நடனம், பாட்டுனு செயல்பாட்டு பயிற்சி முறைகளும் இருக்கு. இதுல விவசாயத்தையும் கட்டாயப் பாட மாக்கணும். விவசாய நாடான இந்தியாவுல இது அவசியம்' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

தொடர்புக்கு,

சனத்குமார், செல்போன்: 9443207061

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு