Published:Updated:

ஒரே நாளில், 34 லட்சம் மரக்கன்றுகள்...

கனவை நனவாக்கிய மாவட்ட ஆட்சியர்! சாதனைவீ.மாணிக்கவாசகம், படங்கள்: கே.குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி

ஞ்சாவூர் மாவட்டத்தில் காடு என்பது 5.75% மட்டுமே. இதனால் இந்தப் பகுதியில் ஆண்டுதோறும் மழையளவு குறைந்து காணப்படுகிறது. காவிரியாற்றில் வரும் தண்ணீர் மட்டுமே முக்கிய நீராதாரம் என்கிற நிலையில், ஆற்றிலும் நீர்வரத்துக் குறைவதால் எதிர்காலம் என்னாகுமே என்கிற பயம்... மாவட்ட மக்களை வெகு காலமாகவே வாட்டி வருகிறது.

ஒரே நாளில், 34 லட்சம் மரக்கன்றுகள்...

இந்த விவரங்களையெல்லாம் அறிந்த மாவட்ட ஆட்சியர் சுப்பையன், மரம் வளர்ப்பு மூலமாக பசுமைச் சூழலை ஏற்படுத்த நினைத்தார். இதன் விளைவு... 'பசுமைத் தஞ்சை’ என்கிற திட்டம் தற்போது வேகமெடுத்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பே இந்தத் திட்டத்துக்கான பணிகளைத் துவக்கிய ஆட்சியர், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து எந்தெந்த ஊர்களில் எவ்வளவு பொது இடம் இருக்கிறது; அங்கு எவ்வளவு கன்றுகள் நடலாம்; என்னென்ன மரங்கள் இன்று காணாமல் போயிருக்கின்றன; அவற்றின் விதைகள் எங்கு கிடைக்கும்; எங்கெங்கு நர்சரி அமைக்கலாம் என்பவற்றையெல்லாம் ஆராய்ந்திருக்கிறார். தகவல்களைத் திரட்டிய கையோடு, 48 இடங்களில் நர்சரிகள் அமைத்து, பராமரிக்க வைத்தவர், நவம்பர் 30 அன்று மருங்குளம் அருகில் உள்ள பொல்லாங்கரை என்ற ஊராட்சியில் திட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். அன்றைய தினமே அனைத்து ஊர்களிலும் மொத்தம் 34 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து சாதனை படைத்திருக்கிறது தஞ்சை மாவட்டம்!

இது எப்படி சாத்தியமாயிற்று?

மாவட்ட ஆட்சியர் சுப்பையனிடம் கேட்டபோது, உற்சாகம் பொங்கப் பேசியவர், ''இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் மரங்களின் அளவு குறைவு. நான் போகும் இடங்களிலெல்லாம் மரங்கள் இல்லாமல் நிலம் காலியாக இருப்பதைப் பார்த்தேன். இதற்கு என்ன தீர்வு என்பதை யோசித்தேன். அரசுத் தரப்பில் ஒவ்வொரு துறையும் குறிப்பிட்ட அளவு மரக்கன்றுகளை நட்டு வருகின்றன. ஆனால், போதிய பராமரிப்பின்றி கடைசியில் என்ன ஆனது என்பதே தெரியாமல் போகிறது. அதனால், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து இப்பணியை மேற்கொண் டோம். இதன் மூலமாக இந்த மரக்கன்றுகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தானாகவே ஒவ்வொருவருக்கும் வந்துவிடும்.

ஒரே நாளில், 34 லட்சம் மரக்கன்றுகள்...

இதற்கான கன்றுகளை வளர்க்க, கிராமப் பஞ்சாயத்துகளில் நர்சரிகள் அமைத்தோம். அந்தந்த ஊர் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தோம். மிகவும் அருகிவிட்ட இலுப்பை, நீர்மருது, விளா, புங்கன், நாவல் போன்ற மரங்களை உருவாக்கத் தேவையான விதை களைத் தேடிப்பிடித்து கன்றுகளை உற்பத்தி செய்தோம். வியாபார ரீதியாக அதிகம் பயிரிடப்படும் தேக்கு, குமிழ் கன்றுகளையும் உற்பத்தி செய்தோம். இந்தக் கன்றுகளை வளர்ப்பதற்காக மட்காத குப்பைகளாகக் கிடக்கும் பிளாஸ்டிக் பால் கவர், தண்ணீர் பாக்கெட் கவர் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொண்டோம்.

இந்த முயற்சி மக்களிடம் விழிப்பு உணர்வையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதனால்தான் இந்தப் பணிகளின்போது பொதுமக்களும் ஈடுபாட்டுடன் எங்களுடன் இணைந்தார்கள். அனைத்துத் துறையினரும் ஆர்வத்தோடு பணியாற்றினார்கள்.

முன்பு மத்திய பிரதேச மாநிலத்தில் 17 லட்சம் கன்றுகள் நட்டதுதான் சாதனையாக இருந்தது. இன்று ஒரே நாளில் 34 லட்சத்து 34 ஆயிரத்து 229 மரக்கன்றுகளை நடவு செய்து அந்த சாதனையை மிஞ்சியிருக்கிறோம்.  ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி என 740 இடங்களில் மரக்கன்றுகள் திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் பேர் இத்திட்டத்தில் பங்கெடுத்தார்கள்.  இதை கின்னஸ் சாதனைக்கு முறையாக விண்ணப்பிக்கவும் தயாராகி வருகிறோம்'' என்று சொன்னவர்,

''இதைச் சாதனைக்காக செய்யவில்லை... எதிர்கால சந்ததிகளுக்காகவே செய்திருக் கிறோம். என்றாலும், இதைச் சாதனையாகப் பதிவு செய்யும்போது, மற்ற இடங்களிலும் விழிப்பு உணர்வு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை'' என்றார் நம்பிக்கை பொங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு