Published:Updated:

பசுமை பிட்ஸ்

பசுமை பிட்ஸ்

பசுமை பிட்ஸ்

''மதிய உணவுத் திட்டத்தில் கேழ்வரகு''

எம்.எஸ்.சுவாமிநாதன் கோரிக்கை..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏழைகள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுதானியங்கள், இன்று பணக்காரர்கள் மத்தியிலும் உலா வர ஆரம்பித்து விட்டன. கேழ்வரகில் செய்யப்பட்ட மேற்கத்திய உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, நவம்பர் 21-ம் தேதி சென்னை, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

பசுமை பிட்ஸ்

அப்போது பேசிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், 'சிறுதானியங்கள் 10 ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்டவை. நம் நாட்டின் மலைப் பகுதிகளில் முதலில் பயிர் செய்யப்பட்டவை சிறுதானியங்கள்தான். இதன் தேவையை உணர்ந்து உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பொது விநியோகத் திட்டத்தில் கேழ்வரகு, தினை, சாமை, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கேழ்வரகில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் சொல்கின்றன. சாகுபடி முறையிலும் 15% வரையில் செலவைக் குறைக்கக்கூடியது. அனைத்து தட்பவெப்பநிலையிலும் வளரக்கூடியது. இப்போது இந்திய அளவில் அதிகமாகப் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மதிய உணவுத் திட்டத்தில்கூட பள்ளி மாணவர்களுக்கு கேழ்வரகைச் சேர்த்து வழங்கலாம்' என்று ஆலோசனை வழங்கினார்.

- த.ஜெயகுமார்

''பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதில்... இந்தியாவுக்கு 3வது இடம்..!''

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பாக, மண்புழு விஞ்ஞானியும், உயிரி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களின் நாற்பது ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பணியைச் சிறப்பிக்கும் வகையில், பாராட்டு விழா நடந்தது. நவம்பர் 24-ம் தேதி சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பசுமை பிட்ஸ்

விழாவில், ஏற்புரை நிகழ்த்திய டாக்டர் சுல்தான் இஸ்மாயில், ''மண்வாசனை வர மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள்தான் காரணம். ஆனால் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மண்ணையும் கொன்று, நம்மை நாமே அழித்து வருகிறோம். உலகளவில் அதிகளவு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்த மண்ணில் டிராக்டர்களால் உழுது மண்புழுக்களையும், மண் ஜீவராசிகளையும் கொன்று வருகிறோம். இளநீர், இயற்கை உணவுகளை மறந்து... குளிர்பானங்கள், துரித உணவுகளை விரும்பி சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். துணி துவைக்கும் நீரை மறுசுழற்சி செய்து தாவரங்களுக்குப் பயன்படுத்துதல், தொட்டிகளில் மண்புழு வளர்த்து உரமாக்குதல், சாணக் குப்பைகளை இயற்கை உரமாக்குதல், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த பெரிய பெரிய பயிற்சிகள் தேவையில்லை. முயற்சிகள் மட்டும் இருந்தால் போதும்'' என்று எளிமையாகப் பதியம்போட்டார்.

- கு. முத்துராஜா, படம்: பா. அருண்

போலி பூச்சிக்கொல்லிகளைக் கண்டறிவது எப்படி?

பூச்சிக்கொல்லிகளே தவறு... இதில் போலி பூச்சிக்கொல்லிகள்? ஆம், பூச்சிக்கொல்லிகள் ஒரு பக்கம் படுத்தி எடுக்க, போலி பூச்சிக் கொல்லிகளும் தங்கள் பங்குக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன.

பசுமை பிட்ஸ்

இயற்கைப் பூச்சிவிரட்டிகள் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தப் பட்டு வரும்சூழலிலும், ரசாயனப் பூச்சிக்கொல்லிப் பயன்பாடு குறைந்தபாடில்லை. இவற்றை வாங்கும்போது, போலிகளை வாங்கி விவசாயிகள் ஏமாறுவதும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், போலிகளைக் கண்டறிவதற்காக ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளது... 'டுபான்ட் ஸொல்யூஷன்ஸ்’ நிறுவனம்.

இதைப் பற்றி பேசிய இந்நிறுவனத்தின் தெற்காசியப் பயிர்பாதுகாப்புப் பிரிவு மேலாளர் ராம் முடோல்கர், ''இந்தியாவின் பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டில் 40%க்கும் அதிகமாக போலி பூச்சிக்கொல்லிகள் உபயோகத்தில் உள்ளன. இந்தப் போலி பூச்சிக்கொல்லிகள், பிரபலமான கம்பனிகளின் பெயரைப் பயன்படுத்தி சந்தையில் வலம் வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, எஸ்.எம்.எஸ். மூலமான ஒரு வசதியை ஏற்படுத்தியுள்ளோம். எங்கள் நிறுவன பூச்சிக்கொல்லிகளை வாங்கும்பட்சத்தில், அதில் உள்ள குறியீட்டு எண்களை, 092117-00500 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், அந்தப் பூச்சிக்கொல்லி உண்மையா... போலியா? என்று உடனடியாக உங்களுக்கு செல்போன் மூலமாகவே தெரிந்துவிடும்'' என்றார்.

பேசாமல் இயற்கைக்கு மாறிவிட்டால்... இந்தத் தொல்லையே இருக்காதே!

- பசுமைக்குழு