Published:Updated:

“தலைவர் நம்மாழ்வார்!”

வரலாறுஓவியம்: ஹரன்

பிரீமியம் ஸ்டோரி

'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்’ என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி இதழ்தோறும் பேசுகிறார்கள்.

 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள்

“தலைவர் நம்மாழ்வார்!”

யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...’ என்று முண்டாசு கவிஞன் பாடி வைத்தபடி, எட்டுத் திக்கும் பயணம் செய்து, தமிழ்நாட்டு உழவர்களின் பெருமைகளையும், இயற்கை விவசாயத்தின் அருமைகளையும் ஓயாமல் பேசினார் நம்மாழ்வார். அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அவரின் காலடித்தடங்கள், இன்று பலருக்கும் வழிகாட்டியாக உள்ளன.

இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில், டி.டி.எஸ் (Deccan Development Society) எனும் தொண்டு நிறுவனம் உள்ளது. இந்த அமைப்பின் உதவியோடு சுற்றுவட்டார கிராமங்களில் கம்பு, கேழ்வரகு என சிறுதானியங்களை விளைவித்து, இந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். ஐ.நா சபை வரை சென்று சுந்தர தெலுங்கில் சிறுதானியங்களின் பெருமைகளை, இந்த பெண் விவசாயிகள் சொல்லி வருகிறார்கள். இவர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கிறார் நம்மாழ்வார் என்பதுதான் சிறப்பு.

“தலைவர் நம்மாழ்வார்!”

தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பி.வி. சதீஷ், கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர். பத்திரிகையாளராக இருந்தவர், ஒருகட்டத்தில் அதை உதறிவிட்டு, விவசாயிகளுக்காக வாழ்ந்து வருகிறார். நம்மாழ்வார் பற்றி சதீஷ் சொல்வதைக் கேட்போம்.

''ஆங்கிலத்தில் 'லீடர்’ என்ற சொல்லுக்கு தமிழில் 'தலைவர்’ என்று பொருள் என்பீர்கள். ஆனால், லீடருக்கும் தலைவருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இதுதான் திராவிட மொழியான தமிழ் மொழியின் சிறப்பு. தலைவர் என்ற சொல்லுக்கு தலைமை தாங்குவது மட்டுமல்ல, நல்ல தொண்டனாகவும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். நம் காலத்தில் நல்ல தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை செயல் மூலம் காட்டிச் சென்று விட்டார் தலைவர் நம்மாழ்வார். எங்கள் நட்பு இருபது ஆண்டுகளுக்கும் மேலானது. இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு விவசாயி பற்றியும், தலைவருக்குத் தெரியும். நாங்கள் நடத்தும் பயிற்சி, கருத்தரங்கு என்று எதுவாக இருந்தாலும் தலைவர் கட்டாயம் பேசுவார். எங்கு சந்தித்தாலும், டி.டி.எஸ் வளர்ச்சி பற்றி அக்கறையாக விசாரிப்பார். நாங்கள் செய்துவரும் சிறுதானிய பரவல் வேலைகளைப் பற்றி, டி.டி.எஸ் பற்றி யெல்லாம் தெலுங்கானாவுக்கு வெளியில், ஓங்கி ஒலித்த குரல் தலைவருடையது.

“தலைவர் நம்மாழ்வார்!”

பல ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம் இது. டெல்லியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத் தில் நடைபெற்ற உயிர்ச்சூழல் குறித்த கருத்தரங்குக்கு தலைவரும் வந்திருந்தார். அப்போது, 'சதீஷ், கிராமத்தில் இருந்து மக்கள் நகரத்தை நோக்கி செல்வது அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கும் சக்தி, சிறுதானியங்களுக்கு மட்டுமே உள்ளது. வறட்சியிலும், விளைச்சல் கொடுக்கும் சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயி நஷ்டப்படமாட்டான். எனவே, இதற்காக ஏதாவது செய்ய வேண்டுமே’ என்று சொன்னார். ஊர் வந்து சேர்ந்த பிறகு, தலைவர் சொன்ன விஷயங்களை செயல்படுத்தத் தொடங்கினோம். நாடு தழுவிய அளவில் சிறுதானிய வளர்ச்சிக்காக 'மில்லட் நெட் ஒர்க் ஆஃப் இந்தியா’ (Millet Network of India-MINI)  அமைப்பைத் தொடங்கினோம். இதைத் தொடங்குவதற்கான விதையை தலைவர்தான் என்னுள் விதைத்தார். அவர், தலைமையில்தான் 2008-ம் ஆண்டு ஐதராபாத்தில் இந்த அமைப்பு தொடங்கப் பட்டது. நிறைய பேருக்குத் தெரியாத விஷயம், இந்த அமைப்பின் இணை நிறுவனர் தலைவர்தான். இதை எந்த இடத்திலும், தலைவர் சொல்லிக் கொண்டதில்லை. இதுதான், நம் தலைவரின் தனிக் குணம்.

“தலைவர் நம்மாழ்வார்!”

மத்திய அரசு பொதுவிநியோகத் திட்டத்தில், சிறுதானியங்களைச் சேர்த்ததும், நாடு முழுக்க சிறுதானிய உணவுகள் மீண்டும் புத்துயிர் பெற வைத்ததும் இந்த அமைப்பின் அரும்பணி. இந்த அமைப்பில் தமிழ்நாடு உட்பட நாடு முழுக்க எங்களுடன் பல மாநில விவசாயிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆப்பிரிக்கா கண்டத்திலும்கூட இந்த அமைப் பின் மூலம் சிறுதானியங்கள் சிலிர்த்தெழுந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம், சிறுதானியங்கள் போன்றவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில், தலைவருடன் 'பசுமை விகடன்’ இதழும் கைகோத்திருந்தை நான் அறிவேன். 'வானம் பார்த்த பூமி, வாழ வைத்த சாமி’ என்ற தலைப்பில் எங்களின் சிறுதானியப் பணிகளை பசுமை விகடன் தொடராக வெளியிட்டு, புத்தகமாகவும் கொண்டு வந்துள்ளது. அந்தப் புத்தகத்தில், 'உணவு உத்தரவாதத்துக்கு இந்தியா வில் தெரியும் ஒரே உதாரணம், இந்த சிறுதானிய கிராமங்கள்தான்’ என்று எங்கள் பணிக்கு தலைவர் பாராட்டு மடல் எழுதியுள்ளதை அறிந்தபோது, நெகிழ்ந்துப் போனேன்.

தலைவர் நம்முடன் இல்லை என்பதை மனது ஏற்க மறுக்கிறது. ஆம், மண்ணில் விதைக் கப்பட்ட அவர், இயற்கையாகவே மாறிவிட்டார். 'அடிக்காட்டிலே, நடு மாட்டிலே, நுனி வீட்டிலே’ என்ற தலைவரின் தாரக மந்திரச் சொல்லை, நான் திக்கி, திக்கி தமிழ் மொழியில் சொல்வதைக் கேட்டு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்.'

'இயற்கையின் தோழன்’

கேரள மாநிலத்தில் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல்... பணிகளைச் செய்து வரும் தணல் அமைப்பைச் சேர்ந்த, உஷா நம்மாழ்வார் பற்றி அனுபவங்களை விவரிக்கிறார்...

“தலைவர் நம்மாழ்வார்!”

''அய்யா, இப்படித்தான் அவரை அழைப்போம். முதல் முறையாக 2004ம் ஆண்டு, பனி கொட்டும் டிசம்பர் மாதத்தில் அய்யாவைச் சந்தித்தேன். எங்கள் அமைப்பு பாரம்பரிய நெல்லைப் பாதுகாக்க, ஏற்பாடு செய்திருந்த முதல் கருத்தரங்கில் பங்கேற்கத்தான் அய்யா வந்திருந்தார். இந்தியா முழுவதும், பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து நெல் விவசாயிகள் வந்திருந்தனர். பாரம்பரிய நெல்களின் பெருமைகளை அய்யா... அடுக்கிச் சொல்லும்போது, அதற்காக இன்னும் வேகமாக வேலை செய்ய வேண்டும் என்ற வேகம் எல்லோருக்கும் ஏற்பட்டது.

கேரளாவில் நாங்கள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சிகளில் அய்யாவின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். தமிழ் மொழியில் மட்டுமல்ல... எளிமையான ஆங்கிலத்திலும் அய்யா, அருமையாகப் பேசுவார். தமிழ்நாட்டில் மறைந்து போன நிலையில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தத்தில் அய்யாவுக்கு தனியிடம் உண்டு. ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடைபெறும் நெல் திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்துவதற்கான விதையும், அய்யாவால்தான் விதைக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் விவசாயிகள் மட்டுமல்ல... மாநிலத்தின் முன்னாள் வேளாண் துறை அமைச்சரும் அய்யாவிடம் இயற்கை விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொண்டுள்ளார். இனம், மொழி, தேசம் கடந்து இயங்கியவர் அய்யா. 'உலகில் எங்கேனும் நடக்கும் அநீதிக்கு எதிராக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே!’ என்று சே குவேரா சொல்லியிருக்கிறார். அந்த வகையில், 'உலகில் எங்கேனும் இயற்கைக்கு ஆதரவாக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே!’ என்ற கொள்கையில் வாழ்ந்துச் சென்றுள்ளார் நமது அய்யா.'

- பேசுவார்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு