Published:Updated:

உலக வர்த்தக ஒப்பந்தம்...

சிங், கோடு போட்டார்... மோடி, ரோடே போடுகிறார்..!சாட்டைதூரன் நம்பி

பிரீமியம் ஸ்டோரி

'மேக் இன் இண்டியா... மேக் இன் இண்டியா’ என்று பிரதமர் நரேந்திர மோடி ஓங்கி ஒலிக்கும்போதெல்லாம்... 'இண்டியா ஃபார் சேல்... இண்டியா ஃபார் சேல்’ என்றே திரும்பத் திரும்ப என் காதுகளில் ஒலிக்கிறது. 'இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களால் உலக சந்தைகள் நிரம்பி வழியட்டும்’ என்று ஒரு பக்கம் பேசிக்கொண்டே, புறவாசல் வழியாக தடையற்ற வர்த்தகத்துக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது மோடி அரசு. நாட்டை நாசமாக்குவதில் மன்மோகன் சிங் அரசுக்கு நாங்கள், பெரியப்பா என்கிற நிலைப்பாட்டில் மோடி அரசு இருப்பது, தலையெழுத்து என்பதைவிட வேறென்ன சொல்ல?

உலக வர்த்தக ஒப்பந்தம்...

 பழைய காவல் சரியில்லை என்றுதான் புதுக்காவலை நியமித்தோம். ஆனால், வந்த வேகத்திலேயே புதுக்காவலும் நம்மை காவு வாங்கப் பார்க்கிறது.

''பணிந்தது உலக வர்த்தக அமைப்பு (W.T.O). இந்தியாவுக்கு இமாலய வெற்றி. இந்தியாவில் இருக்கும் 85 கோடி ஏழைகளுக்குச் சோறு போட, வருடம் 62 மில்லியன் டன் உணவு தானியங்களை, வாங்க, இருப்பு வைக்க, விநியோகம் செய்ய இனி இந்தியாவுக்குத் தடை இல்லை என்று உலக வர்த்தக அமைப்பு ஏற்றுக்கொண்டு விட்டது. இதற்கு ஈடாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில்   (TFA - Trade Facilitation Agreement) இந்தியா கையெழுத்திடும்'' என்று ஆனந்த அறிவிப்பு செய்திருக்கிறார் இந்தியாவின் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

95-ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு தொடங்கிய நாளிலிருந்து, தீர்வு காணமுடியாத,  ஒரே கருத்தை எட்ட முடியாத பொருளாக, பெரும் பிரச்னையாக இருந்தது விவசாயம். உற்பத்திப் பொருட்கள், சேவை இதற்கெல்லாம் ஒரு விலை நிர்ணயம் செய்ய முடியும். ஆனால், விவசாயம் அப்படி அல்ல. இந்தியா போன்ற வளரும் ஏழை நாடுகளில், விவசாயம் என்பது வர்த்தகமல்ல, வாழ்க்கை. 70 கோடி விவசாயிகளின் வாழ்வு, விவசாயத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

உலக வர்த்தக ஒப்பந்தம்...

ஆனால், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் விவசாயம் ஒரு தொழில். அதுவும் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளின் தொழில். வளர்ந்த நாடுகளில் விவசாயத்துக்குக் கொட்டிக் கொடுக்கும் நேரடி மானியங்களுக்கு அளவே இல்லை. அதேசமயம், ஏழை நாடுகளில் நேரடி மானியம் என்று எதுவுமே இல்லை. உற்பத்திச் செலவைவிட, மிகவும் குறைவாக ஒரு விலையை நிர்ணயம் செய்து 'குறைந்தபட்ச ஆதார விலை’ என்று மத்திய அரசு கொடுக்கிறது.

ஒரு குவிண்டால் நெல் உற்பத்திச் செலவு 1,500 ரூபாய் என விவசாயப் பல்கலைக் கழகங்கள் கூறுகின்றன. டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் கூற்றுப்படி உற்பத்திச் செல வோடு 50% லாபத்தைக் கூட்டி விலை நிர்ணயம் செய்தால், 2 ஆயிரத்து 250 ரூபாய் கொடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள விலையோ ஆயிரத்து 350 ரூபாய் மட்டுமே. இதில் மானியம் எங்கே இருக்கிறது. சொல்லப் போனால் விவசாயிகள்தான் அரசுக்கு மானியம் கொடுக்கின்றனர்.

'வளர்ந்த நாடுகளின் மானியங்களுக்கும், ஏழை நாடுகளின் பற்றாக்குறைக்குமான இடைவெளியை நீக்கிய பிறகு, விவசாயத்தை உலக வர்த்தகத்தில் சேர்க்கலாம்’ என்று ஓர் ஒப்பந்தம், 95-ம் ஆண்டே போடப் பட்டது. 'அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2005ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகள் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியங்களைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். பிறகு, இறுதி முடிவு எடுக்கலாம்’ என்கிறது, அந்த ஒப்பந்தம்.

ஆனால், மானியத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, 'உள்ளூர் மானியம்’, 'வர்த்தக மானியம்’ என்று தந்திரமாகப் பிரித்து, எல்லா மானியங்களையும் உள்ளூர் மானியங்களாக மாற்றி, தொகையையும் கூட்டிவிட்டன வளர்ந்த நாடுகள். இதற்கு பச்சைப் பெட்டி (Green box), ஆம்பர் பெட்டி  (Amber box), நீலப் பெட்டி (Blue Box)  என்று பெயரிட்டுக் கொண்டு, விவசாயம் செய்ய ஒரு மானியம், விவசாயம் செய்யாமல் இருக்க ஒரு மானியம் என்று வாரி வழங்குகின்றன. இவை இரண்டும் வணிக மானியக் கணக்கில் வராதாம்.

வலுத்தவன் வெட்டியதுதானே வாய்க்கால்!

குறிப்பிட்ட ஓர் ஆண்டில், தனது 25 ஆயிரம் பருத்தி விவசாயிகளுக்கு அமெரிக்கா கொடுத்த பச்சைப் பெட்டி மானியம், 3.9 பில்லியன் டாலர். அந்தாண்டு அமெரிக்க விவசாயிகள் விளைவித்த பருத்தியின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 3.4 பில்லியன் டாலர். அதாவது, மொத்த மதிப்பைவிட கூடுதலாக ஊக்கத் தொகை மட்டுமே கொடுக்கிறது, அமெரிக்க அரசு. இது மானியக் கணக்கில் வராதாம். ஆனால், நெல்லுக்கு, கரும்புக்கு, கோதுமைக்கு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையை (கட்டுபடியாகாத விலை)விட, 100, 200 என மாநில அரசு கூட்டிக் கொடுப்பதைக்கூட மத்திய அரசு தடுக்கிறது.

2005ம் ஆண்டு, ஹாங்காங் நகரில் ஐந்தாம் வர்த்தக மந்திரிகள் மாநாடு கூடியபோது, 'விவசாயத்தை உலக வர்த்தகத்தில் சேர்க்கக் கூடாது’ என உலக விவசாயிகள் ஒன்றுகூடி உக்கிர போராட்டம் நடத்தினோம். இதன் காரணமாக, உலக வர்த்தக அமைப்பே சிதையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், 'இந்திய நடுத்தட்டு மக்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையைவிட அதிகம். எனவே என்ன விலை கொடுத்தேனும் உலக வர்த்தக அமைப்பைச் சிதைய விட்டு விடக்கூடாது’ என்றார்.

உலக வர்த்தக ஒப்பந்தம்...

பிரச்னை இழுபறி, பேச்சுவார்த்தை என்று நீண்டுகொண்டே இருந்த நிலையில், சென்ற ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற வர்த்தக மந்திரிகள் மாநாட்டில் ஒரேடியாக விவசாயிகளைக் காவு கொடுத்தது, அன்றைய மன்மோகன் சிங் அரசு. 'வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்’ என்று அன்றைய வர்த்தக மந்திரி, ஆனந்த் சர்மாவும் ஆனந்தக் கூத்தாடினார். அதை அடி பிசகாமல் ஏற்று இன்றைய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் ஆனந்தக் கூத்தாடுகிறார்.

வருங்காலத்தில் இந்தியாதான் உலகில் இருக்கும் சந்தைகளில் பெரிய சந்தை. அதை அடைய நினைத்த அமெரிக்கா ஆனந்தக் கூத்தாடினால் அதில் நியாயம் இருக்கிறது. நீங்கள் எதற்காக கூத்தாட வேண்டும்? இனி, 'இந்திய பொருள்கள் கோஷம் (மேக் இன் இந்தியா)’ என்னவாகும்? மானிய விலையில் விளைவிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்களுடன், மரணப் போராட்டம் நடத்தி விளையவைக்கப்படும் உள்நாட்டு பொருட்கள் எப்படி போட்டியிட முடியும்? தடையற்ற உலக வர்த்தகத்தோடு சேர்த்து, வரியற்ற மண்டல வணிகம் என்று சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உள்பட பல நாடுகளை அனுமதித்து இருக்கிறீர்களே... நாடு தாங்குமா?

தீபாவளி சீசனில் கள்ளத்தனமாக புகுந்த சீனப்பட்டாசு, சிவகாசியையே காலி செய்தது உங்களுக்குத் தெரியாதா? 'சீனப்பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்’ என அறிவித்த அதே வாய், இன்றைக்கு வாசலைத் திறந்து விட்டு சல்யூட் அடிப்பது எந்த வகையில் நியாயம்?

ஓட்டுக்காக நாட்டைக் கூறுபோட்டு விற்றது மன்மோகன் அரசு. புதிய அரசோ... ஒட்டுக் கோவணத்துக்கும் வழியில்லாமல் தவிக்கும் விவசாயிகளையும் கூறுபோட்டு விற்றுவிடும் போலிருக்கிறது.

புதிய ஒப்பந்தப்படி, 86 முதல் 88ம் ஆண்டு வரை விவசாய விளைபொருட்களின் விலை அடிப்படையில், 10% மானியம் கொடுக்க ஒப்புக்கொண்டால், நெல்லுக்கு இப்போது, மத்திய அரசு கொடுக்கும் 1,380 ரூபாய்கூட கிடைக்காது. 1,000 ரூபாய்தான் கிடைக்கும். இந்த ஒப்பந்தம் நாட்டையே விதர்பா போல தற்கொலை பூமியாக மாற்றிவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு