Published:Updated:

தண்ணீர்... தண்ணீர்...

‘தண்ணீர் தமிழகம்’ தமிழக அரசு தயாரா?!நீர் மேலாண்மைஆர். குமரேசன், படங்கள்: உ.பாண்டி, ரா.ராம்குமார்

பிரீமியம் ஸ்டோரி

'வாய்க்கால் தண்ணீரில்

 மூழ்கிக் குளித்து

வரும் சிறுநீரையும்

கலக்க விட்டு

மேல் தண்ணீர் விலக்கி

இருகைகள் இணைத்து

அள்ளிப் பருகுவேன்

அப்போது புது

உற்சாகம் என்னுள் பிறக்கும்..

இப்போது

கூல்வாட்டர் குடிக்கிறேன்

குளிர் காய்ச்சல்

அடிக்கிறது’  - தி.சா. ஞானசந்திரனின் கவிதை, இன்றைய எதார்த்தத்தின் கண்ணாடி.

ஒருகாலத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பொது இடங்கள் என தாகம் தீர்த்த குடிநீர்க் குழாய்களை இப்போது பார்க்க முடிவதில்லை. அப்படியே அவை இருந்தாலும் யாரும் சீண்டுவதில்லை. 'மினரல் வாட்டர்’ என்ற பெயரில் பாட்டில் தண்ணீரோடுதான் பலரும் வலம் வருகிறார்கள். ஒட்டுமொத்த விவசாயக் குடும்பமும் உழைத்து உற்பத்தி செய்யும் பாலை, 30 ரூபாய் கொடுத்து வாங்க முகம்சுளிக்கும் பொதுஜனம், 25 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறது. ஒரு காலத்தில் 'பால் விற்பவர்தான் பணக்காரர்’ என்ற நிலை இருந்தது. இன்றைக்கு, தண்ணீர் வியாபாரிகள்தான் செல்வச்சீமான்கள் என்று நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது.

தண்ணீர்... தண்ணீர்...

மரங்களை, மணலைக் கொள்ளையடித்த மனிதனின் தற்போதைய இலக்கு தண்ணீர். மற்ற வளங்களையாவது உள்ளூர் திருடர்கள் கொள்ளையடித்தனர். ஆனால், தண்ணீர் கொள்ளை யில் ஈடுபட்டிருப்பது பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள். தன் நாட்டின் குளிர்பானங்களை, உலக மக்களுக்குமான பானமாக மாற்றும் முயற்சியில் அந்தந்த நாடுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரை நாசமாக்கும் வேலையைச் செய்து வருகிறது அமெரிக்கா. இதற்கு நடுவே சாத்தான் வேதம் ஓதிய கதையாக, ஊருக்கு அறிவுரை சொல்லும் வேலையையும் தொடர்கிறது அமெரிக்கா.

''மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் பெரும்சவாலாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தண்ணீர் ஒரு காரணமாகி வருகிறது. இந்தியாவில் 12 சதவிகிதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் வறட்சியால் பாதிக்கப்பட்டவை. இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 சதவிகிதம் 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. இதைத் தேக்கி வைக்க போதுமான வசதிகள் இல்லை. நகரப் பகுதிகளில், எல்லா வருவாய் தரப்பினரும் தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 சதவிகித குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை'' என்று புள்ளிவிவரங்களைப் பொளந்து கட்டியிருக்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக்.

தண்ணீர்... தண்ணீர்...

கூடவே, ''2025-ம் ஆண்டில் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். மக்கள் தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுதல் போன்றவற்றால் தோன்றும் இதுபோன்ற சவால்களை அரசாங்கத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் வேறு!

சில மாதங்களுக்கு முன்பு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வாஷிங்டன் மாநாட்டில் பிளேக் இப்படி பேசியதை இங்கே குறிப்பிடக் காரணம்... எந்த நாட்டின் வளங்களை அதிகமாக கொள்ளை அடிக்கிறதோ அல்லது அடிக்க நினைக் கிறதோ அந்த நாட்டின் மீது தனக்கு தனி அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் 'உத்தம வில்லன்’ அமெரிக்கா என்பதை உணர்த்தத்தான்!

திருநெல்வேலியில் தாமிரபரணி; திருச்சியில் சூரியூர்; ஈரோட்டில் பெருந்துறை... என பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் புற்றீசல் போலப் புறப்படுவதைத் தடுப்பதற்கு பதிலாக அனுமதியளிக்கும் அரசு இயந்திரங் களை என்னவென்பது?

அண்டை மாநிலங்களைப் போல வற்றாத ஜீவநதிகள் நமது மாநிலத்தில் இல்லை. நீர்த் தேவைக்கு நிரந்தரத் தீர்வாக இருப்பது நிலத்தடி நீர் மட்டுமே. இதையும் பன்னாட்டு கம்பெனிகள் உறிஞ்சுக் கொண்டிருந்தால், எதிர்கால தண்ணீர் தேவையை எப்படி பூர்த்தி செய்யப் போகிறோம்? மழைநீரைச் சேமிக்க முன்னோர்கள் வெட்டி வைத்த பெரும்பெரும் தொட்டிகளான குளங்கள், ஏரிகள் எல்லாம் இன்றைக்கு குற்றுயிராகக் கிடக்கும் நிலையில், தண்ணீர் சேமிப்பு சாத்தியமா?

அத்தனைக்கும் காரணம் ஆக்கிரமிப்பு!

தண்ணீர்... தண்ணீர்...

''கடந்த 50 ஆண்டுகளில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கர் பாசனபரப்பு குறைந்து, விளை நிலங்கள் வீட்டு மனைகளாகி விட்டன. ஒரு குளம் நிரம்பி, வரத்து வாய்க்கால் வழியாக வரும் நீர் அடுத்த குளத்தை அடைந்து, அது நிரம்பி அடுத்த குளம் என ஒரு சங்கிலித்தொடர் போன்றது நமது பண்டைய பாசனமுறை. இதில் ஒவ்வொரு குளத்தையும் இணைப்பவை வாய்க்கால்கள். இந்த வாய்க்கால்களில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு, சங்கிலித்தொடரின் கண்ணியைத் துண்டிக்கிறது. தண்ணீர் வராமல் குளங்கள் வறண்டு போன நிலையில், அங்கும் ஆக்கிரமிப்பு அரங்கேறுகிறது. இப்படியாக நாம் அழித்த நீராதாரங்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும். இதைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவேடுகளின்படி ஓடை புறம்போக்கு, வாய்க்கால் வரத்து, கண்மாய்கள் இருந்த இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் துணிந்து அப்புறப்படுத்த வேண்டும். தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்களின் பங்களிப்புடன் இதைச் செய்யா விட்டால் எதிர்காலம் இன்னும் மோசமாகும்'' என்று எச்சரிக்கிறார், தானம் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அலுவலர் குருநாதன்.

வாய்க்கால்கள், மனித உடலில் ஓடும் ரத்தநாளங்கள் போன்றவை. அவற்றைச் சரி செய்யாமல், எத்தனை ஆயிரம் கோடிகளைக் கொண்டு போய் திட்டங்கள் தீட்டி கொட்டினாலும், முழுமையான பயன் தராது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். வாய்க்கால், வரத்துகளை புனரமைப்பதற்கென்றே 'தண்ணீர் தமிழகம்’ எனும் திட்டத்தை, உடனடியாகத் தொடங்க வேண்டும்.

இதற்கு தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் மக்கள்... தமிழக அரசு தயாரா?!

- பொங்கிப் பாயும்... 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு