Published:Updated:

மீத்தேன் எமன்

அமெரிக்காவிலும் அனல் கிளப்பும் மீத்தேன்!போராட்டம்கு. ராமகிருஷ்ணன், ஓவியம்: செந்தில், படம்: கே. குணசீலன்

'மீத்தேன் எடுத்தால், பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும்னு சொல்றீங்களே... நீங்க என்ன பெரிய விஞ்ஞானியா?'

 நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காவல்துறை உயரதிகாரி ஒருவர், மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்களைப் பார்த்து இப்படி கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

மீத்தேன் எமன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கிட்டத்தட்ட இதே தொனியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உயர் அலுவலர் ஒருவரும் நக்கலான வார்த்தைகளை உதிர்த்தார்.

'ஆசிட் வீசினால் முகம் சிதைந்து போகும்’ என வேதியியல் விஞ்ஞானியோ, தோல் மருத்துவரோ சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனாலும் கூட, விஞ்ஞானிகள் வந்து சொன்னால்தான் எதையுமே இந்த அதிமேதாவிகள் ஏற்றுக்கொள்வார்கள் போல.

இவர்களுக்காகவே, நானும் ஒரு விஞ்ஞானியைச் சந்தித்தேன். அவர், அமெரிக்கா வில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று, புவி விஞ்ஞானத்தில் (எர்த் சயின்ஸ்) முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இயற்கை எரிபொருள் எடுக்கும் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஜெயராமன்.

மீத்தேன் பற்றி ஜெயராமன் சொல்வதற்கு செவி மடுப்போமா...

'2004-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீத்தேன் எடுக்கும் பணிகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைக்கு வந்தன. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ், கலிஃபோர்னியா, பென்சில்வேனியா, பவுடர் ரிவர் பேசின், டேக்கோட்டா உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூட்டம் கூட்டமாக ஒன்றுகூடி, மகிழ்ச்சியோடு தங்கள் நிலங்களை மீத்தேன் திட்டத்துக்கு ஒப்படைத்தார்கள். இதனால், பல்வேறுவிதமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பது அப்போது அவர் களுக்குத் தெரியாது. காரணம், அது தொடக்க காலம். ஆனால், தொடங்கப்பட்ட உடனேயே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

மீத்தேன் எமன்

ராட்சத இயந்திரங்களின் இயக்கத்தினால் அங்குள்ள வீடுகளில் அதிர்வுகள் உண்டாயின. ரசாயனக் கலவைகளாலும், ராட்சத இயந்திரங்களின் புகையாலும் சுவாச நோய்கள், தோல் வியாதிகள், வாந்தி, பேதி, கண் நோய்கள், தூக்கமின்மை, கடுமையான தலைவலி உள்ளிட்ட இன்னும் பல்வேறு விதமான உபாதைகளுக்கு உள்ளானார்கள்.

நிலத்தடி நீரில் மீத்தேன் வாயு கலந்ததால், அங்குள்ள வீடுகளில் குழாய்களைத் திறந்தால் தண்ணீரோடு சேர்ந்து மீத்தேனும் வெளிவந்தது. இதனால், அங்குள்ள வீடுகளில் எப்போது வேண்டுமானாலும் தீ விபத்துகள் நிகழக்கூடிய அபாயச் சூழல். மீத்தேன் கலந்த தண்ணீரைப் பயன்படுத்தினால் ஆபத்தான நோய்கள் உண்டாகும் என்பதால், அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த மக்கள் அஞ்சுகிறார்கள். வயோமீன் என்ற பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதால் விவசாயமே இல்லாமல் போய்விட்டது. ரசாயனக் கழிவுகளாலும் மீத்தேன் கசிவாலும் அங்குள்ள நீர்நிலைகளும் விளைநிலங்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கதிரியக்கத்தை உருவாக்கக்கூடிய வீரியமிக்க ரசாயனங்கள் காற்றிலும் நீரிலும் கலந்ததால் அங்கு புற்றுநோயாளிகளின் என்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நிலக்கரி மற்றும் வண்டல் மண் பாறைகளின் இடுக்குகளில் இருந்து மீத்தேன் எடுப்பதற்கு 'ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் பூமியின் சமநிலை பாதிக்கப்படும். பல ஆயிரம் டன் எடை கொண்ட கரைசல் அதிவேக அழுத்தத்தில் பூமிக்குள் பீய்ச்சி அடிக்கப்படுவதால், நில அடுக்குகளில் அதிர்வுகள் உண்டாகும். நிலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நில அடுக்குகள் பிடிமானத்தை இழக்கும். இதனால், பூகம்பம் உண்டாகக்கூடிய ஆபத்துகள் அதிகம். நிலக்கரிப் படிமங்களை உடைத்து, மீத்தேன் முழுமையாக எடுக்கப்பட்ட பிறகு, அங்குள்ள வெற்றிடங்களில் இருந்து தானாக மீத்தேன் உருவாகி, பூமியின் மேற்பரப்பில் ஊடுருவி தீ விபத்துகள் நிகழவும் வாய்ப்புள்ளது.

மீத்தேன் எமன்

ரசாயனக் கழிவுகளாலும் மீத்தேன் உள்ளிட்ட வாயுக்களாலும் நிலத்தின் மேற் பரப்பு பாதிக்கப்படுவதாலும், தண்ணீர் உறிஞ்சப்பட்டு நிலத்தின் மேற்பரப்பில் உள்ள ஈரத்தன்மை முற்றிலுமாக வறண்டு போவதாலும் தாவரங்கள் உயிர் பிடித்து வளர முடியாத நிலை உருவாகும்.

மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிகையோடு, மிகவும் பாதுகாப்பான முறையில்தான் மீத்தேன் எடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மீத்தேன் கிணறுகளில் இருந்து வெளியில் எடுக்கப்படும் ரசாயனக்கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் பராமரிக்க, கழிவுநீர்க் குட்டைகளில் பிரத்யேகமான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஆனாலும் கூட பாதிப்புகளைத் தடுக்க முடியவில்லை. காரணம்... ரசாயனக்கழிவுகளில் பல்வேறு வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால், ஒன்றொடு ஒன்று வேதி வினைகள் புரிந்து, வீரியம் அதிகமாகி நிலத்திலும் காற்றிலும் கலந்து விடுகின்றன.

மீத்தேன் எடுக்கும் பணிகள் நடைபெறும் இடங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண்ணின் தன்மை மாறிவிட்டது. தண்ணீரை உறிஞ்சக்கூடிய தன்மையை இழந்துவிட்டது. தற்போது அமெரிக்காவில் மீத்தேன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன' என விஞ்ஞானி ஜெயராமன் சொல்லச் சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

''தற்போது அமெரிக்காவில் மீத்தேனுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை நடத்துபவர்கள்... பிரபல பாடகரான ஜான் லெனனின் மனைவியான ஒக்கோ ஓனோ, அவருடைய மகன் ஸீன் லெனன் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் பலரும் போராட்டக் களத்தில் குதித்துள்ளார்கள். அங்கு அனைத்துத் தரப்பு மக்களும் விவசாயிகளோடு கைகோத்துள்ளார்கள்'' என்று சொல்லி, என்னுடைய அதிர்ச்சிக்கு கொஞ்சம் மருந்து போட்டார் ஜெயராமன்.

மீத்தேன் எடுக்கும் பணிகளால் அமெரிக்கா வில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் அடுத்த அத்தியாயத்தில்...

- பாசக்கயிறு நீளும்...