Published:Updated:

'அணையைக் காணோம்...’

அலறும் விவசாயிகள்... அசையாத அதிகாரிகள்!பிரச்னைஉ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

பிரீமியம் ஸ்டோரி

'ரெண்டு மாசத்துக்கு முன்ன ஒரு கிணறு வெட்டினேன் சார். ஊருக்குப் போயிட்டு வந்து பார்த்தேன். வெட்டுன இடத்துல கிணறு இல்ல. அதான் உங்ககிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாமுனு வந்தேன்'' என்று ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி படுபிரபலம். இதேபோல, உண்மைச் சம்பவங்களும் நடக்கும் என்பதற்கு உதாரணமாக, தேனி மாவட்டத்தில் காணாமல் போன தடுப்பணைகளைச் சொல்லலாம். உத்தமப்பாளையம் தாலூகா, டி.ரெங்கநாதபுரம் ஊராட்சியில்தான் இந்தக் கொடுமை! இது, தமிழகம் முழுக்க நடைபெறும் முறைகேடுகளுக்கு ஒரு சோறு பதம்!

'அணையைக் காணோம்...’

 இதுகுறித்துப் பேசிய ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோவன், 'மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்ற மானாவாரி நிலங்களுக்காக, தேசிய மானாவாரி நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துது. பண்ணைக் குட்டை அமைக்கிறது, தடுப்பணை கட்டுறது, இலவசமாக பழ மரக்கன்றுகள் கொடுக்கிறது, நுண்ணூட்டச்சத்து உரம் கொடுக்குறது மாதிரியான வேலைகளை இந்தத் திட்டத்துல செய்வாங்க.

எங்க ஊராட்சியில இந்தத் திட்டம் மூலமா சில விஷயங்களை போன வருஷத் துல செய்தாங்க. அதுக்குப் பிறகு, இந்த வருஷம் ஜனவரி மாசம் 26-ம் தேதி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்துல இருந்து வந்த அதிகாரிகள், சில தீர்மானங்களை ஊராட்சி மன்றக் கூட்டத்துல நிறைவேத்தி தரச்சொல்லி கேட்டாங்க.

'அணையைக் காணோம்...’

குடிநீர் வசதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் செலவுல போர்வெல் அமைச்சதா ஒரு தீர்மானம். உண்மையில விதி மீறி போர்வெல் அமைச்சதால, அந்த போர்வெல்லுக்கு கரன்ட் கொடுக்க மாட்டோம்னு மின்வாரியம் சொல்லிடுச்சு. ஒரு நீர்த்தேக்கக் குட்டையை, 1 லட்சத்து 95 ஆயிரத்து 360 ரூபாய்ல அமைச்சிருக்கறதா இன்னொரு தீர்மானம். உண்மையில அப்படி எதையும் அமைக்கவே இல்லை. 14 தடுப்பணைகள் மட்டும் கட்டிட்டு, 16 கட்டினதா பொய் கணக்கு எழுதியிருந்தாங்க. ஒருத்தருக்கு மட்டும் பேருக்கு பழ மரக்கன்னுகளைக் கொடுத்துட்டு, 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு பழ மரக்கன்னுகள் கொடுத்ததா எழுதியிருந்தாங்க. இப்படி செய்யாத பல வேலைகளையெல்லாம் எழுதி தீர்மானமா நிறைவேத்த சொல்லயிருந்தாங்க. 'இதுல இருக்குறதெல்லாம் இப்போ எங்க இருக்கு?’னு கேட்டேன். அப்ப போனவங்க இதுவரைக்கும் வரல. திட்டப்பணிகளை ஆய்வு பண்ணச் சொல்லி பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்ல. மொத்தத்துல இந்தத் திட்டம் மூலமா எங்க ஊராட்சிக்கு செலவு பண்ணுனதா சொல்ற 50 லட்ச ரூபாயும் வீண்' என்று வேதனைக் குரலில் சொன்னார்.

'அணையைக் காணோம்...’

ஊரில் பலரிடம் பேசியபோதும் இதே குற்றச்சாட்டுக்களையே எதிரொலித்தனர்.

இதையடுத்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் திலகரிடம் இதுபற்றி கேட்டதற்கு, 'நான் இங்க வந்து மூணு மாசம்தான் ஆகுது. இதுக்கு முன்னாடி இருந்தவர் ரிடையர்டு ஆகிட்டாரு. நீங்க சொல்ற விவரங்கள் எனக்குத் தெரியல'' என்றபடி, நீர்வடிப்பகுதி உதவிப்பொறியாளர் செல்லமுத்துவைக் கை காட்டினார்.

'அணையைக் காணோம்...’

'அந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கும் எனக்கும் இருக்குற தனிப்பட்ட விரோதத்தை வெச்சு இப்படி பேசுறாரு. அங்க கட்டுன தடுப்பணைகள் எல்லாம் ஒரு இன்ச் மழைக்குத் தாங்குற மாதிரிதான் வடிவமைச்சேன். திடீர்னு பத்து இஞ்ச் மழை பேஞ்சா நான் என்ன பண்றது? கட்டுனதுல நாலு அணைகள்தான் உடைஞ்சிருக்கு. மிச்சமெல்லாம் நல்லாதான் இருக்கு. அணையை உடைச்சதே இவங்க தான். தேனியில 30 ஊராட்சிக்கு மேல இந்தப் பணிகள் நடக்குறப்போ இங்க மட்டும் உடையறதுக்கு என்ன காரணம்? உடைஞ்ச அணைகளை சீக்கிரத்துலயே சரிபண்ணி கொடுத்துடறேன்'' என்று சொன்ன செல்லமுத்து, அனைத்து குற்றச் சாட்டுக்களையும் மறுத்தார்.

மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமியிடம் விஷயத்தைக் கொண்டு சென்றோம். 'தடுப்பணைகள் உடைஞ்சிருக்குறதா புகார் வந்துச்சு. சரி பண்ணச் சொல்றேன். அந்தப் பகுதிகளில் நடந்ததா சொல்லப்படுற முறைகேடுகள் குறித்து இணை இயக்குநர் மூலமா விசாரிச்சு உரிய நடவடிக்கை எடுக் கிறேன்'' என்று அக்கறையுடன் சொன்னார்.

நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவோம்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு