Published:Updated:

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்...

வாக்குறுதிகளை மறக்கிறதா பி.ஜே.பி?பிரச்னைஅனந்து

பிரீமியம் ஸ்டோரி

'மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் களப் பரிசோதனையைச் செய்ய மத்திய அரசு அனுமதி’ என்ற செய்தி, சில வாரங்களுக்கு முன்பு மீடியாக்களிலும், சமூக வலைதளங்களில் பரபரப்பாகச் சுழன்றடித்தது. இது தொடர்பாக, மத்திய அரசு தரப்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளிவராத நிலையில், 'அனுமதித்தார்களா... இல்லையா?’ என்கிற குழப்பம் இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து நீடிக்கிறது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்...

 உண்மையில் நடந்தது என்னவென்றால்... சில களப் பரிசோதனைகளுக்கு கடந்தகால காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கியிருந்தது. இவை தவறுதலாக வழங்கப்பட்டவை. ஆனால், இவற்றைக் காட்டியே, புதியதாக அனுமதி அளிக்கப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர். மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தயாரித்து விற்பனைக்கு விடும் நிறுவனங்கள் மூலமாக, ஊடகங்களில் இந்த பொய் பரப்புரை நிகழ்ந்திருக்கலாம் என்கிற சந்தேகம் நிலவுகிறது.

எல்லாவற்றுக்கும் காரணமே மத்திய அரசுதான். மரபணு மாற்றுப்பயிர்கள் அனுமதி தொடர்பான விஷயத்தில், அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லாமல்... கழுவும் மீனில் நழுவும் மீன் மனப்பான்மையில் இருப்பதுதான் இதுபோன்ற குழப்பங்களுக்குக் காரணம். நாடாளுமன்ற வேளாண் நிலைக்குழு, கடந்த ஆண்டு வெளியிட்ட தனது ஆய்வின் முடிவில், 'விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்தத் தொழில்நுட்பம் அழிக்கும் என்பதால், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தேவை இல்லை’ என அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. நாட்டின், சிறந்த ஐந்து விஞ்ஞானி களைக் கொண்ட, உச்ச நீதிமன்றத்தின் தொழில்நுட்ப ஆய்வுக் குழுவும், 'மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் அவற்றின் களப்பரிசோதனை, நம் நாட்டுக்குத் தேவையே இல்லை. இவற்றுக்கு நிரந்தரத் தடை வேண்டும்’ என நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்திருக்கிறது. இந்தியாவில் மரபணு பொறியியலின் தந்தையான டாக்டர் புஷ்பா பார்கவா, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வன்மையாக எதிர்க்கிறார்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்...

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், பல நிபந்தனைகளை விதித்து, அவை நிவர்த்தியாகும் வரை பி.டி. கத்திரிக்கு காலவரம்பற்ற தடை விதித்திருந்தார். இதையெல்லாம்விட, தனது தேர்தல் அறிக்கையில், 'மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தேவை இல்லை’ என்றும், 'அதற்கு ஆதரவு கொடுக்க மாட்டோம்’ என வாக்குறுதியும் கொடுத்திருந்தது பி.ஜே.பி. இத்தனை இருந்தும், நமது விவசாய நிலங்களின் உயிரிபன்மயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை நம்மீது திணிப்பதற்கு, கடந்த கால காங்கிரஸ் அரசுபோலவே, தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் பி.ஜே.பி அரசும் ஏன் துடிக்கிறது? என்பதுதான் சந்தேகமாக உள்ளது.  

'மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் உலகின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது’ என்பதை பல ஆய்வுகளும், ஆவணங்களும் நிரூபிக்கின்றன. பி.டி. பயிர்கள் அதிகம் பயிரிடப்படும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலேயே உணவுப் பாதுகாப்பு குறியீடுகள் குறைவாகத்தான் உள்ளன. உலக அளவில் உணவுப் பாதுகாப்பு உற்பத்தியில் பிரச்னை இல்லை. ஆனால், விநியோகத்தில்தான் சிக்கல் இருக்கிறது என்பதுதான் உண்மை. உதாரணத்துக்கு நமது நாட்டின் உற்பத்தி... தேவையைவிட இரு மடங்காக இருக்கிறது. அரசின் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. கடந்த அக்டோபர் 1ம் தேதி நிலவரப்படி 4.76 கோடி டன் உணவுதானியங்கள் இருப்பில் இருந்தன. இவை, முறையாகப் பராமரிக்கப்படாமல், அழுகி, எலிகளுக்கு உணவாகும் அவலம் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. இதை முறைப்படுத்தி, விநியோகத்தை ஒழுங்குபடுத்தினாலே, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்து விடலாம்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்...

உலகில் ஒரே ஒரு சதவிகித விவசாயிகள் மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சாகுபடி செய்கிறார்கள். உலகின் பெரும்பான்மை நாடுகள் இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஒதுக்கித் தள்ளி விட்டன. மேலும், உலகின் மொத்தவிவசாய நிலங்களில் 4 சதவிகிதப் பரப்பில் மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை பருத்தி மட்டுமே அனுமதிக்கப்பட்டு, இன்றளவும் விளைவிக்கப்படுகிறது. சில மாநிலங்களில் சோளம், கடுகு, போன்ற சில தானியங்களில் களப்பரிசோதனை நடக்கிறது. உதாரணமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில் ரஹுரியில் சோளத்துக்கு களப்பரிசோதனை நடக்கிறது. அக்டோபர் 29-ம் தேதி பல விவசாயிகள் குழுக்களும் சேர்ந்து அங்கு இந்தப் பரிசோதனையை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தனர்.

மொத்தத்தில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான களப்பரிசோதனைகளே தேவையற்ற ஒன்றுதான். விரைவில் உச்ச நீதிமன்றம் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தும் என்று நம்புவோம்.

கட்டுரையாளர் அனந்து, சென்னையில் உள்ள ‘OFM’  என்னும் தொடர் கூட்டுறவு இயற்கை அங்காடிகளின் நிறுவனர் மற்றும் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.

வேண்டாம், மரபணு மாற்று உணவுப் பயிர்!

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பொறுத்தவரை, மாநில அரசின் ஒப்புதலுடன்தான் களப்பரிசோதனை செய்ய இயலும் என்பது விதி. தமிழகம் உட்பட பல மாநிலங்கள் வேண்டாம் என்று கூறியுள்ளன. ஏற்கெனவே, பி.ஜே.பி ஆளுகையில் இருக்கும் சில மாநிலங்கள் இப்படி ஒரு முடிவை அறிவித்திருக்கின்றன. இன்று மத்தியில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் ராஜஸ்தான், சட்டீஸ்கர், குஜராத் ஆகிய மாநில அரசுகள், மரபணு மாற்றப்பட்ட பயிர் வேண்டவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. சமீபத்தில் மத்தியப்பிரதேசம் கூட இந்த வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இது அரசியலை மீறி, அறிவியல்பூர்வமான காரணமும், தமது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய இந்த மரபணு உணவையும், களப்பரிசோதனையையும் வேண்டாம் என்ற ஒரே காரணமாகத்தான் இருக்க முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு