Published:Updated:

பறவைக் காய்ச்சல், இப்போதைக்கு பயம் வேண்டாம்!

எச்சரிக்கைஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி

கேரளா மாநிலம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் திடீர் என 20 ஆயிரம் வாத்துகள் இறந்து போயின. பறவைக் காய்ச்சல்தான் காரணம் என்று மாநில கால்நடைத்துறை விளக்கம் அளிக்க, பற்றிக் கொண்டது, பறவைக் காய்ச்சல் பீதி. கேரளாவை உரசிக் கொண்டிருக்கும் மாநிலமான தமிழ்நாட்டிலும் இந்நோய் பரவாமல் தடுக்க, தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, நம்முடைய கால்நடைப் பராமரிப்புத்துறை.

 எப்போதுமே 'உஷார்தான்!

பறவைக் காய்ச்சல், இப்போதைக்கு பயம் வேண்டாம்!

இதுகுறித்துப் பேசிய தென்னிந்திய கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழுவின் (பி.சி.சி.) செயலாளர் சுவாதி கண்ணன் என்ற சின்னச்சாமி, ''தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகளும்,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிப் பண்ணைகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் வளர்க்கப்படும் கோழிகள், உள்ளூர் தேவைகள் போக, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தினந்தோறும் அனுப்பப்படுகின்றன. இதில் சில நிறுவனங்கள் பதப்படுத்திய கோழி இறைச்சியை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகின்றன.

பறவைக் காய்ச்சல், இப்போதைக்கு பயம் வேண்டாம்!

தமிழ்நாட்டில் உள்ள கறிக்கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் இதுவரை காணப்படவில்லை. அதற்குக் காரணம் ஆண்டு முழுவதும் சீரான தடுப்பு மருந்துகளை தகுந்த நாட்களில் தெளித்து வருவதுதான். அதற்கான பயிற்சிகள், உபகரணங்கள், மருந்துகள் ஆகியவற்றை பண்ணையாளர்களுக்குக் கொடுப்பதுடன், எங்கள் அமைப்பின் மருத்துவர்கள் ஒவ்வொரு பண்ணையாகச் சென்று, தொடர் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகிறார்கள். கறிக்கோழியின் மொத்த ஆயுள் 40 நாட்கள்தான். பண்ணையை விட்டு கோழிகள் சென்ற பிறகு, 20 நாட்கள் வரை பண்ணையின் சுகாதாரப் பராமரிப்புக் களைச் செய்த பிறகுதான், அடுத்த பேட்ச் குஞ்சுகளை இறக்குவோம்.

கோழி எருவை சுத்தமாக அள்ளி, அப்புறப்படுத்திவிட்டு, பண்ணை முழுவதும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கிருமிநாசினிகளைத் தெளித்து, தளத்தில் கடலைபொட்டு, தவிடு, தென்னை நார்க்கழிவு ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பரப்பி அதன் மீது குஞ்சுகளை வளர விடுகிறோம். தண்ணீர் மற்றும் தீனியுடன் தேவையான சமயங்களில் தடுப்பு மருந்துகளையும் கொடுத்து வருவதால், இங்கே பறவைக் காய்ச்சல் தலை காட்டவில்லை. தேவையில்லாமல் வீண்பீதிகள் வலம் வருகின்றன. இதன் காரணமாக கறிக்கோழி வாங்குவதை மக்கள் தவிர்ப்பார்கள். இதனால் ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரம்தான் பாதிக்கும்'' என்று சொன்னார்.

தமிழ்நாட்டில் இல்லை பறவைக் காய்ச்சல்!

திருப்பூர் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் டாக்டர்.நாகராஜனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அறவே இல்லை. மற்ற இடங்களில் இருந்து வரும் கோழிகள் இறப்புச் செய்திகள் கூட பறவைக் காய்ச்சலால்தான் என்று உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக்குழுக்கள் மூலம் கேரளாதமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் உள்ள சின்னாறு, கோபாலபுரம், வாழையாறு உள்ளிட்ட செக் போஸ்ட்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, டயர்கள் நனையும்படி தடுப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. கால்நடைத் துறை வல்லுநர் குழு, பறவைக் காய்ச்சல் தடுப்பு முறைகள் குறித்த மருத்துவ விழிப்பு உணர்வை பண்ணையாளர் களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறது. எனவே, பறவைக் காய்ச்சல் பற்றிய பீதி தேவையில்லை'' என்று சொன்னார்.

இந்த விஷயம் பற்றி பேசிய தமிழ்நாடு தற்சார்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பொன்னையன், 'அனைத்து கால்நடைக் கிளை மருத்துவமனைகளிலும் சிறிய அளவிலான நோய் ஆய்வு பரிசோதனைக் கூடங்களை அமைக்க வேண்டும். கால்நடைகளின் அவசர சிகிச்சைக்கு லேப் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் விடப்படவேண்டும். கால்நடை மருத்துவர்கள் வாரம் ஒருமுறை அனைத்து கிராமங்களுக்கும் சென்று, வருமுன் காப்போம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்'' என்று அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்தார்.

காட்டுயிர்களைப் பாதிக்கும்! 

பறவைக் காய்ச்சல், இப்போதைக்கு பயம் வேண்டாம்!

''கறிக்கோழிக் கழிவுகளால் காடுகளுக்கு ஆபத்து உருவாகியிருக்கிறது'' என்று சொல்லும் பறவைகள் ஆராய்ச்சியாளர் கோவை சதாசிவம், 'வனங்களை ஒட்டிய பகுதியில் வசிக் கும் மக்களில் பலரும் இறைச்சிக்கழிவுகளைப் புதைக்காமல் அப்படியே வீசி விடுகின்றனர். இவற்றின் ரத்தச்சுவையைக் கண்ட சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள், குடியிருப்புகளில் நுழைந்து, எதிர்பட்டவர்களைக் கடித்துக் குதறுகின்றன. பல நோய் தொற்றுக்களும் உருவாகின்றன. இதில் பறவைக் காய்ச்சலும் ஒன்று. பறவைகளை எளிதாகத் தாக்கும் இந் நோய் காட்டுப்பயிர்களுக்குப் பரவும் வாய்ப்பு மிக அதிகம். காட்டுயிர்கள் அழிந்தால் உயிர்ச் சங்கிலியின் கண்ணிகள் அறுந்து, வனமே அழியும் சூழல் உருவாகிவிடும்'' என்று எச்சரிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு