Published:Updated:

அறிவியல்பூர்வமா... அமெரிக்கப்பூர்வமா...?

அறிவியல்பூர்வமா... அமெரிக்கப்பூர்வமா...?

பிரீமியம் ஸ்டோரி

அனைவருக்கும் பசுமை வணக்கம்..!

''மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தீமை விளைவிக்கக் கூடியவை என்பதற்கு ஆதாரமில்லை'' என்று மாநிலங்களவையில் சொல்லியிருக்கிறார் மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜடேகர்.

அறிவியல்பூர்வமா... அமெரிக்கப்பூர்வமா...?

''பூச்சித் தாக்குதல், வறட்சி உள்ளிட்டவற்றைத் தாங்கும் திறன்கொண்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களால், அதிக விளைச்சலும் ஊட்டச்சத்தும் கிடைக்கும்'' என்று பாராட்டுப் பத்திரம் வேறு வாசித்துள்ளார்.

'மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், குறிப்பிட்ட பூச்சிகளுக்கு மட்டுமே எதிராகச் செயல்படும். மற்றபடி, அதிக விளைச்சலோ, கூடுதலான சத்துக்களோ அதில் இல்லை’ என்று இந்த விதைகளைக் கூவி விற்கும் அமெரிக்க நிறுவனங்களே தெளிவாகச் சொல்லியிருக்கின்றன. ஆனால், இல்லாத ஒன்றை உருவகப்படுத்தச் சொல்வதையே இங்கே சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இந்தப் பொய்யை, அமைச்சரும் பேசும் அளவுக்கு எங்கிருந்து நெருக்கடியோ?

மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, உருளைக்கிழங்கு, கோதுமை, நிலக்கடலை, கரும்பு உட்பட 12 பயிர்களை சோதனை அடிப்படையில் விளைவிக்க, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய மரபணுப் பொறியியல் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால், பலமுனைகளிலும் எதிர்ப்புக் கிளம்பவே, அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்தனர்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை பி.ஜே.பியும்கூட எதிர்க்கும் வரிசையில்தான் நின்றது. 'மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லாமல் அனுமதிக்க மாட்டோம்’ என்று சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், தங்களின் தேர்தல் அறிக்கையிலும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது பி.ஜே.பி. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு, ஆட்சியில் அமர்ந்த பிறகு மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகிமையைப் போற்றிப் பாட ஆரம்பித்துவிட்டனர்.

இது, அறிவியல்பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையிலா... அல்லது அமெரிக்கப்பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையிலா?

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு