Published:Updated:

பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை விவசாயம்!

ஏக்கருக்கு 3 ஆயிரத்து 100 கிலோ நெல்...மகசூல்காசி.வேம்பையன், படங்கள்: கா.முரளி

'பசுமைப் புரட்சி சொல்லிக்கொடுத்த பாடப்புத்தகத்தை வைத்துக் கொண்டு, 'ரசாயன உரங்களைக் கொட்டினால் அதிகமான மகசூல் கிடைக்கும்’ என தண்டோரா போடுகின்றனர், வேளாண்மைத்துறை அதிகாரிகள் பலர். ஆனால், ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் மண்ணைக் கெடுப்பதுடன், முட்டுவளிச் செலவையும் அதிகப்படுத்துகின்றன. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு 'இயற்கை முறை விவசாயம்’தான்’ என தான் செல்லும் இடங்களிலெல்லாம் முழங்கினார் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார். அவர் சொன்ன இயற்கை விவசாய முறைகளைக் கடைபிடித்து வெற்றி விவசாயிகளாக பலரும் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவராக நெல் விவசாயத்தை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானத்தை எடுத்து வருகிறார், திருவண்ணாமலையைச் சேர்ந்த பத்ரிநாராயணன்.

பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை விவசாயம்!

திருவண்ணாமலையில் இருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மேல்புத்தியந்தல் கிராமத்தில் இருக்கிறது, இவரின் வயல். வளர்ந்த மலைவேம்பு மரங்களும், செழித்துக் கிடக்கும் நெல் பயிர்களுமாகக் காட்சியளிக்கிறது, இவரது பண்ணை.

நிலம் வாங்க தூண்டிய விவசாயிகள்!

'அப்பா, தாத்தானு எல்லாரும் வியாபாரம்தான் பார்த்தாங்க. நானும் ஆரம்பத்துல நண்பர்கூட சேர்ந்து கமிஷன் மண்டி வெச்சிருந்தேன். அந்த மண்டிக்கு நெல், மணிலா (நிலக்கடலை), எள்னு எல்லா தானியங்களையும் விற்பனைக்கு கொண்டு வருவாங்க. நாங்களும், விவசாயிகளுக்குக் கடன் கொடுக்குறது, உரம் கொடுக்குறது மூலமா பைத்துறவு (கொடுக்கல்வாங்கல்) வெச்சிருந்தோம். அந்த சமயத்துல தமிழ்நாட்டுல திருவண்ணாமலைப் பகுதியிலதான் மணிலா அதிகமான விளைச்சல் இருந்துச்சு. அதனால மணிலாவுக்கு இங்க நிர்ணயம் செய்யுற விலைதான் தமிழ்நாடு முழுக்க இருந்துச்சு. தொடர்ச்சியா வியாபாரம் செய்தாலும், விளைபொருட்களை வாங்கி விற்பனை செய்யுற நாம ஏன் நிலம் வாங்கி விவசாயம் பார்க்கக்கூடாது?னு எண்ணம் வரவும், நானும் என்னோட பார்ட்னரும் சேர்ந்து இந்த இடத்துல நாலரை ஏக்கர் நிலம் வாங்குனோம். காலப் போக்குல தொழிலைப் பிரிச்சுக் கிட்டோம். அப்ப நிலத்தை நான் எடுத்துக்கிட்டேன். விவசாயம் பாத்துக்கிட்டே ஆந்திராவுல இருந்து அரிசி வாங்கி வியாபாரமும் செய்தேன். பையன்கள் வளர்ந்ததும் வியாபாரத்தை அவங்ககிட்ட விட்டுட்டு, முழுமையா விவசாயத்துல இறங்கிட்டேன்' என்று முன்னுரை கொடுத்த பத்ரி நாராயணன் தொடர்ந்தார்.

பூச்சிக்கொல்லிக்குத் தீர்வு சொன்ன நம்மாழ்வார்!

பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை விவசாயம்!

'ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயிதான். 80-ம் வருஷத்துலேயே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால பாதிப்புகள் இருக்குனு தகவல்கள் பரவ ஆரம்பிச்சது. அப்போதான் இயற்கை விவசாயம் பத்தி நானும் கேள்விப்பட்டு அது பத்தி தேட ஆரம்பிச்சேன். தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 50 பயிற்சிகள்ல கலந்துக்கிட்டேன். பலமுறை நம்மாழ்வார் நேரடியா நடத்தின பயிற்சிகள்ல கலந்துக்கிட்டேன். அந்தப் பயிற்சிகள்ல ரசாயன விவசாயத்துக்கு மாற்றா இருக்குற விவசாய முறைகளையும், தொழில்நுட்ப முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பறமா, விவசாயத்துல உரங்களோட பயன்பாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிட்டு வந்தாலும், பூச்சிக்கொல்லிகளை மட்டும் பயன்படுத்திட்டு வந்தேன். நம்மாழ்வார் மூலமா மூலிகைப் பூச்சிவிரட்டி கரைசல் தெளிக்கக் கத்துக்கிட்டு... 2004-ம் வருஷத்துல இருந்து முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன்.

இயற்கை இடுபொருட்களைக் கொடுக்கும் மாடுகள்!

அப்பறம் கொஞ்சம் நிலம் வாங்கினதுல இப்போ மொத்தம் ஏழரை ஏக்கர் நிலம் இருக்கு. நெல்லுக்கு அடுத்து எள் சாகுபடியும் செய்றேன். அதோட மலைவேம்பு மரங் களையும் வளர்க்குறேன். இயற்கை முறையில கரும்பு சாகுபடி செய்றேன். இப்போ, 2 ஏக்கர்ல கரும்பு, 4 ஏக்கர்ல நெல், 60 சென்ட்ல மலைவேம்பு, மீதி நிலத்துல மண்புழு கொட்டகை, மோட்டார் ரூம், வண்டிப்பாதையும் இருக்கு. என்னோட தேவைக்காக 3 மாடுகள் வளர்க்குறேன். அந்த மாடுகள் மூலமா கிடைக்குற சாணம், சிறுநீரை இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கவும், மண்புழு உரம் தயாரிக்கவும் பயன்படுத்துறேன். இந்த மண்புழு உரம்தான் என்னோட நிலத்துக்கான அடியுரம். தெளிப்புக்கும், தண்ணீர்ல கலந்து விடவும் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மீன் அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டினு தயாரிச்சுக்கிறேன்.

பரிசு வாங்கிக்கொடுத்த நெல் விளைச்சல்!

பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை விவசாயம்!

இயற்கை விவசாய முறையில நெல்லுல அதிகமான விளைச்சல் இருக்காதுனு பலரும் சொல்றாங்க. முறையான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்தா கண்டிப்பா இயற்கை விவசாய முறையில சாதிக்கலாம். அதுக்கு நானே உதாரணம். போன வருஷம் நெல் பயிர் விளைச்சல் போட்டியில கலந்துக்கிட்டு, ஆடுதுறை (ஏ.டி.டி) 49 நெல் ரகத்தை சாகுபடி செய்து, ஒரு ஏக்கர் நிலத்துல 3 ஆயிரத்து 100 கிலோ (75 கிலோ மூட்டை. மொத்தம்  41 மூட்டைகள்) உற்பத்தி செய்து, மாவட்ட அளவுல இரண்டாவது பரிசா 10 ஆயிரம் ரூபாய் வாங்கினேன். தொடர்ச்சியா இயற்கை விவசாயம்தான் பார்க்குறேன். அங்ககச் சான்றளிப்புத் துறையில இருந்து சான்றிதழ் வாங்கி இருக்கேன்' என்று சொல்லி வியக்க வைத்த பத்ரிநாராயணன், நிறைவாக...

ஏக்கருக்கு

பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை விவசாயம்!

25 ஆயிரம்!

'குண்டு (ஆடுதுறை-37), சன்ன ரகம்னு எது சாகுபடி செய்தாலும், 30 மூட்டையில இருந்து 40 மூட்டை மகசூல் கிடைக்குது. அதை நானே அரிசியா மாத்தி, நண்பர்கள் வட்டத்துலயும், இயற்கை அங்காடிகளுக்கும் கிலோ 40 ரூபாய்ல இருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்றேன். கிடைக்கிற வருமானத்துல சாகுபடி செலவும், பண்ணை பராமரிக்கும் மேலாளருக்கான ஊதியமும் போக ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. எள் சாகுபடி செய்தா 300 கிலோவுல இருந்து 400 கிலோ எள் கிடைக்கும். அதை எண்ணெயா மாத்தி, லிட்டர் 350 ரூபாய்னு விற்பனை செய்றேன். செலவு போக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கரும்புல இருந்து வருஷத்துக்கு ஒருமுறை செலவு போக ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்' என செலவு வரவு கணக்கு சொன்னார், மகிழ்ச்சியாக!

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பலதானிய விதைப்பு!

நெல் சாகுபடி செய்யும் முறை பற்றி பத்ரிநாராயணன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஏக்கருக்கு 3 கிலோ விதை!

நெல் சாகுபடி செய்யும் நிலத்தில் ஏக்கருக்கு 20 கிலோ பலதானிய விதைகளை விதைப்பு செய்து, 45-ம் நாளில் பூவெடுத்ததும் மடக்கி உழவு செய்ய வேண்டும். 10 நாட்கள் இடைவெளி கொடுத்து தண்ணீர்கட்டி சேற்று உழவு செய்ய வேண்டும். இப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பலதானிய விதைப்பு செய்யும்போது நல்ல பலன் கிடைக்கிறது.

பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை விவசாயம்!

ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதைநெல் என்ற கணக்கில் தரமான விதைகளைத் தேர்வு செய்து, ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் என்ற கணக்கில் சூடோமோனஸ் கலந்து சாக்கில் இட்டுக்கட்டிக் கொள்ள வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில், ஒரு லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்து, இதில் விதைநெல்லை 12 மணி நேரம் ஊற வைத்து, வெளியில் எடுத்து இருட்டான இடத்தில் 20 மணி நேரம் வைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் நான்கு மணி நேரங்கள் அமுதக்கரைசலில் மீண்டும் ஊற வைத்து விதைக்க வேண்டும். ஒரு சென்ட் நிலத்துக்கு 10 கிலோ மண்புழு உரத்தை அடியுரமாக இட்டு நாற்றங்காலில் தூவி விதைத்தால், 17-ம் நாளில் நாற்று தயாராகிவிடும்.

அடியுரமாக மண்புழு உரம்!

நடவு நிலத்தில் இரண்டு, மூன்று சால் உழவு செய்து மண்ணை சேறாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஏக்கருக்கு ஆயிரம் கிலோ மண்புழு உரத்துடன், 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து 3 நாட்கள் வைத்திருந்து அடியுரமாகஇட வேண்டும். அதனைத் தொடர்ந்து ஓர் அடிக்கு, ஓர் அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்யும்போது... ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 30 மில்லி பஞ்சகவ்யா வீதம் கலந்து அதில் நாற்றின் வேரை நனைத்து நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து 4 முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதுமானது.

10, 20 மற்றும் 30-ம் நாட்களில் பவர் வீடர் மூலம் களைகளை அழுத்த வேண்டும். ஏக்கருக்கு ஆயிரம் கிலோ மண்புழு உரத்துடன், 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து 3 நாட்கள் வைத்திருந்து 45-ம் நாளில் பரவலாக வயலில் தெளித்து கைகளால் களை எடுக்க வேண்டும். 50-ம் நாளில் டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி வீதம் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். பயிரின் வளர்ச்சி குறைவாக இருந்தால், டேங்குக்கு 50 மில்லி வீதம் மீன் அமினோ அமிலம் கலந்து ஏக்கருக்கு 6 டேங்குகள் வரை தெளிக்கலாம்.

பூச்சிக்கு வேட்டு வைக்கும் ஒட்டுண்ணி!

இலைச்சுருட்டுப்புழு மற்றும் குருத்துப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதலைத் தடுக்க 40-ம் நாளில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை 'டிரைக்கோகிரமா ஜப்பானிக்கம்’ என்ற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 3 சி.சி என்ற அளவில் கட்டிவிட வேண்டும். கூடவே, மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் விளக்குப்பொறி அமைக்க வேண்டும். மேலும், ஏக்கருக்கு பத்து இடங்களில் டி (ஜி) வடிவ குச்சிகளை அமைக்க வேண்டும் இதன் மூலமாக பூச்சித்தாக்குதல் குறைவாக இருக்கும். மேலும், பூச்சித்தாக்குதல் தென்பட்டால், டேங்க் ஒன்றுக்கு 300 மில்லி வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டிக் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். அதற்குமேல் கதிர் முற்றிவிடும். வயலைக் காயவைத்து அறுவடை செய்யலாம்.

தொடர்புக்கு,

பத்ரிநாராயணன், செல்போன்: 9442131410 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு