Published:Updated:

ஜீவநதியை உயிர்ப்பித்த சூபாபுல்!

மாத்தி யோசிமண்புழு மன்னாரு, ஓவியம்: ஹரன்

பிரீமியம் ஸ்டோரி

வ்வொரு நாட்டுலயும், நம்ம நம்மாழ்வார் மாதிரியான இயற்கைப் போராளிங்க வாழ்ந்திருக்காங்க... வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. இவங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் நம்ம எல்லாருக்கும் தேவையான சங்கதிகள் நிறையவே இருக்கு. இப்படிப்பட்டவங்கள்ல ரெண்டு பேரைப் பத்திதான் இங்க சொல்லப்போறேன்.

இந்தோனேஷியா நாட்டுல 'சிக்காப்’ங்கிற மலைப்பிரதேசம். நம்ம ஊர் ஏற்காடு, ஊட்டி மாதிரி. இந்த மலைப்பிரதேசத்துல கூட்டம், கூட்டமா வாழ்ந்த மலைவாழ் மக்கள், காட்டுல விளைஞ்ச காய், கனிகளைப் பறிச்சு சாப்பிடறது... காட்டுல ஒரு பகுதியை சீர்திருத்தி, சாப்பாட்டுக்குத் தேவையான பயிரை விவசாயம் செய்றது, பிறகு இன்னோர் பகுதிக்கு இடம் மாறி, விவசாயம் செய்றதுனு வாழ்ந்திருக்காங்க. இப்படி மாறி மாறி விவசாயம் செய்ததால, ஏற்கெனவே விவசாயம் செய்த இடத்துல திரும்பவும் மரம், செடி, கொடிங்க எல்லாம் நல்லா வளர்ந்திருக்கு. சுழற்சி முறையில விவசாயம் செய்ததால காடு அழியாம, தன்னைப் புதுப்பிச்சுக்கிட்டே இருந்திருக்கு.

ஜீவநதியை உயிர்ப்பித்த சூபாபுல்!

காட்டுல பெய்த மழை மொத்தமும் காட்டுக் குள்ளயே இறங்குச்சு. மண்ணுல மழைநீர் நேரடியா விழாம... மரம், செடி, கொடிகள் மழைத் துளிகளை ஏந்தி தரைப்பகுதிக்குக் கொடுத்துச்சு. தரையில மண்டிக்கிடந்த இலைதழைங்க, மழைத் தண்ணியைப் பிடிச்சு வெச்சுக்கிட்டு நிதானமா வடியவிட்டிருக்கு. இதிலிருந்து கசியற தண்ணி, 'பாடிக்வாயிறு’ங்கற பேர்ல வற்றாத ஜீவநதியை உருவாக்கியிருக்கு. மழை இருந்தாலும் சரி, இல்லாட்டாலும் சரி, ஆத்துல எப்பவும், தண்ணி ஓடியிருக்கு. சமவெளிப் பகுதி வரையிலும் ஓடின இந்த ஆத்தை நம்பி, விவசாயமும், நகரமும் பெருகியிருக்கு.

இதெல்லாம் 1900-ம் ஆண்டு வரை நல்லபடியா நடந்திருக்கு. இதுக்குப் பிறகு, சமவெளிப் பகுதி மக்கள், மலைக்காடுகளை ஆக்கிரமிச்சு குடியேறி, கான்கிரீட் பில்டிங் எல்லாம் கட்டவே, மலைவாழ் மக்களால முன்னமாதிரி, இடம் மாறி மாறி விவசாயம் செய்ய முடியல. இதனால, ஒரே இடத்தில் நிரந்தரமா விவசாயம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. 'நாங்களும் விவசாயம் செய்வோம்ல’னு விவசாயம்ங்கற பேர்ல காட்டை அழிச்சு, கழனியாக்குற வேலையைத் தீவிரமா செய்திருக்காங்க நகரவாசிகள்.

இதனால, 1919-ம் வருஷம், அடிச்ச மழையில காடு, காடா இல்ல. சமவெளிப் பகுதி வரையிலும் வெள்ளம் ஓடி, ஊரை சேதப்படுத்தியிருக்கு. கொஞ்ச காலத்துல 'பாடிக் வாயிறு’ ஆறு, நம்ம ஊரு பாலாறு கணக்கா வறண்டு போயிருக்கு. காட்டுல கை வெச்சதால, ஒரு ஆத்தையே கொலை செய்துட்டாங்க. காடு இருந்த வரையிலும் மழைத்தண்ணியைத் தேக்கி வெச்சி உதவுச்சு. காடுகள் அழிக்கப்பட்டதும் மழைத்தண்ணி வெள்ளப்பெருக்கா மாறி, சேதப்படுத்தியிருக்கு. நல்ல மழை இருந்தாலும், அது வெள்ளமா வடிஞ்சு கடலுக்கு ஓடிடவே... மலையில தண்ணி பற்றாக்குறை. இதனால, விவசாயமும் கைக்கொடுக்கல. ஒரு கட்டத்துல, காட்டை நம்பி வாழ்ந்தவங்க, கையேந்தி நிற்க வேண்டிய நிலை உருவாயிருக்கு.

1967-ம் வருஷத்துல இந்த மலைப்பகுதிக்கு கிறிஸ்தவ மதப்பணிக்காக போய்ச் சேர்ந்தார் போல்லன் பாதிரியார். 'மலையில எவ்வளவு மழை பெஞ்சாலும், வறட்சியா இருக்கே’னு யோசிச்சவர், பழைய கதையையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு, 'திரும்பவும் காட்டை உருவாக்கினாதான் மழை தண்ணி, மண்ணுக்குல இறங்கி பூமி செழிக்கும்’னு முடிவுசெய்திருக்காரு. இதுக்காக இவர் தேர்வு செய்த மரம்தான், சூபாபுல் (சீமைசவுண்டல்). இந்த சூபாபுல், பாறை இடுக்குலகூட நல்லா வளரக்கூடியது. வறண்ட மலையில சூபாபுல் செடிகளை பாதிரியார் நட ஆரம்பிச்சாரு. புல்லுகூட முளைக்க சிரமப்பட்ட, பூமியில சூபாபுல் செடி சூப்பரா வளர்ந்திருக்கு.

இதைப் பத்தி மக்கள்கிட்ட நிறையவே பேசினார் பாதிரியார். இதுல, மோக்கூர் அப்படிங்கற விவசாயிக்கு மட்டும் பாதிரியார் சொன்ன விஷயங்கள் 'பளிச்’னு புரிஞ்சிருக்கு. தன்னோட நிலத்துலயும் சூபாபுல்லை வளர்த்தாரு. மரத்தோட தழையை, தன்னோட வயலுக்கு உரமாவும், ஆடு, மாடுங்களுக்குத் தீவனமாவும் கொடுத்தாரு. இதனால, முன்னவிட, நிலத்துல விளைச்சல் கூடியிருக்கு. மோக்கூர், இப்படி நல்ல விளைச்சல் எடுத்த விஷயம் பகுதி முழுக்க பரவியிருக்கு. இதனால, மோக்கூர் நிலத்தைத் தேடி, விவசாயிங்க படையெடுக்க ஆரம்பிச்சாங்க. எல்லா விவசாயிங்களும் சூபாபுல்லுக்கு மாறி, ஒருகட்டத்துல சூபாபுல் மரக்கன்னு நடறதை ஓர் இயக்கமாவே செய்திருக்காங்க.

கொஞ்ச வருஷத்துல பகுதி முழுக்க சூபாபுல் மரங்க வளர்ந்து, பசுமையான வனமா மாறியிருக்கு. இதனால, மழை பெய்யும்போது, அந்தத் தண்ணியை சூபாபுல் மரமும், தழைகளும் மண்ணுக்கு அனுப்பியிருக்கு. 1976-ம் வருஷத்துல இருந்து திரும்பவும், 'பாடிக் வாயிறு’ வற்றாத ஜீவநதியா மாறியிருக்கு. நம்ம ஊர்ல மாட்டுக்குத் தீவனம் கொடுக்குற மரம்னு நம்பிக்கிட்டு இருக்கிற சூபாபுல் மரம், ஒரு ஆத்துக்கே உயிர் கொடுத்திருக்குங்கிற செய்தி ஆச்சர்யம்தானே. இந்த சூபாபுல்லை மக்கள் மத்தியில பரப்புன பாதிரியார் போல்லன், விவசாயி மோக்கூர் இந்த ரெண்டு பேரும் நிச்சயம் 'இந்தோனேஷியா நம்மாழ்வார்கள்’தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு