Published:Updated:

‘‘புதுசு புதுசா முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும்”

- சாவித்திரி நம்மாழ்வார்நினைவுகள்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி

'தங்கள் நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருந்தவர் நம்மாழ்வார்’ எனப் பல விவசாயிகள் நா தழுதழுக்கச் சொல்லும்போதே அவர்களின் முகத்திலிருந்தும் நன்றியை வெளிப்படுத்துகிறது, கண்களில் வழியும் நீர். பலர் வாழ்க்கைக்குத் துணையாக இருந்த நம்மாழ்வாரைப் பற்றி அவருடைய வாழ்க்கைத் துணைவி சாவித்திரி நம்மாழ்வார், இங்கே பகிர்கிறார்.

‘‘புதுசு புதுசா முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும்”

''எத்தனை மணிக்கு தூங்குவாரு... எத்தனை மணிக்கு சாப்பிடுவாருனு எதையும் கணக்குப் போட்டெல்லாம் சொல்ல முடியாது. உழைப்பு... உழைப்பு... உழைப்புனு எந்த நேரமும் உழைப்புதான். அந்தளவுக்கு உயிர்மூச்சா விவசாயத்தை நேசிச்சாரு. எங்க சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணங்களுக்குப் போனோம்னா, இவரைச் சுத்தி கூட்டம் சேர்ந்துடும். இவர் வந்திருக்கார்னு தெரிஞ்சு, அந்தப் பகுதிகள்ல உள்ள விவசாயிகள் திரண்டுடுவாங்க. அந்த கல்யாண விழா, விவசாயக் கருத்தரங்கமாகவே மாறிடும்.

புத்தகங்கள் படிக்கிறதும் வாழ்க்கையில் முக்கியமான அங்கம்னு நினைச்சவரு. கொஞ்ச நேரம் ஓய்வு கிடைச்சாகூட புத்தகங்களைக் கையில் எடுத்துடுவாரு. எனக்கும் புத்தகம் படிக்குற பழக்கம் உண்டு. நான் நகை, புடவை கேட்டால் அதையெல்லாம் கொஞ்சம்கூட காதுல வாங்காத மனுசன், புத்தகங்கள் கேட்டுட்டா உடனே வாங்கிக்கிட்டு வந்துடுவாரு. மண், மரம், செடி, கொடி, புத்தகங்கள் இதைத்தவிர, வேறு எதுலயுமே அவருக்கு ஆரம்பகாலங்கள்ல இருந்தே பற்றுதல் கிடையாது.

அவருக்கு பெண்கள் மேல நிறைய மதிப்பு உண்டு. நான் அசைவம் விரும்பிச் சாப்பிடுவேன். ஆனா, அவருக்கு சின்ன வயசுல இருந்தே அசைவம் சாப்பிடுற பழக்கம் கிடையாது. அதனால, அசைவம் சமைக்காமலே இருந்தேன். 'எனக்காக நீ ஏன் உன் பழக்கத்தை மாத்திக்கணும்... நான் என்னோட பழக்கத்தை மாத்திக்கிறேன்’னு சொல்லி அசைவம் சாப்பிட ஆரம்பிச்சாரு.

‘‘புதுசு புதுசா முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும்”

திருநெல்வேலி, களக்காட்டுல அவர் வேலை பார்த்தப்ப, பண்ணையில உள்ள வீட்டிலதான் தங்கி இருந்தோம். நான் கடைத்தெருவுக்கு வரணும்னா, பல கிலோமீட்டர் தூரம் வந்தாகணும். 'எந்த ஒரு காரியத்துக்குமே மற்றவர்களோட தயவை எதிர்பார்த்து காத்திருக்கக் கூடாது. அது வாழ்க்கையில மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திடும்’னு சொல்லி, சைக்கிள் ஓட்டக் கத்துக்கொடுத்தாரு.

‘‘புதுசு புதுசா முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும்”

திருக்காட்டுபள்ளி பக்கத்துல திருசென்னம்பூண்டியில உள்ள எங்க நிலத்தை நானே நேரடியா அங்க விவசாயம் செய்துட்டிருந்தேன். எப்பவாவது நேரம் கிடைக்கும்போது அங்க வருவார். ஒரு தடவை நான் சீரகச் சம்பா சாகுபடி செஞ்சிருந்தப்ப, பூச்சித்தாக்குதல் அதிகமா இருந்துச்சு. அதைப் பார்த்துட்டு, 'எருக்கன் செடியை அங்கங்க நட்டு வெச்சா, பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்திடலாம்’னு சொன்னாரு. அதேமாதிரி செஞ்சதும் கைமேல பலன் கிடைச்சுச்சு. அடுத்த முறை நெல் சாகுபடி செய்யுறப்ப, கொள்ளிடம் ஆத்தங்கரையில் இருந்த நிறைய எருக்கன் செடிகளைக் கொண்டு வந்து நிலத்துல போட்டு மிதிச்சு, அடியுரமாக்கி அதுக்கு பிறகு நடவு செஞ்சேன். பூச்சி, நோய்த் தாக்குதல் வந்த பிறகு செய்றதைவிட, முன்னயே அடியுரமா போட்டுட்டா, இன்னும் நல்லதுனுதான் அப்படி செஞ்சேன். அதுக்கு அருமையான பலன் கிடைச்சுது. நோய், எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்ததோட, தழை உரமாகவும் பலன் கொடுத்துச்சு எருக்கு. எல்லாரும் ஆச்சரியப்படுற அளவுக்கு அதிகமா தூர் கட்டி அமோகமான விளைச்சலைக் கொடுத்துச்சு.

இதைப் பார்த்துட்டு அவர் ரொம்பவே பூரிச்சிப் போய், 'இப்படித்தான் புதுசு புதுசா முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும்’னு என்னை ஊக்கப்படுத்தினார். இதே போலத்தான் கடைசிவரைக்கும் ஊர், உலகத்தையும் ஊக்கப்படுத்திட்டே இருந்தார்'' என்று சொல்லி பெருமூச்செறிந்தார் சாவித்திரி நம்மாழ்வார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு