Published:Updated:

சக்கைப்போடு போடும் இயற்கை சம்பங்கி!

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

ஆண்டுக்கு

சக்கைப்போடு போடும் இயற்கை சம்பங்கி!

5 லட்சம்..!

''விதையை விதைச்சுட்டு, வருமானத்துக்காக மாசக்கணக்குல காத்து இருக்கறதெல்லாம் அந்தக்காலம். இப்பல்லாம் உடனுக்குடன் மகசூல் கிடைக்கணும்... தினந்தினம் வருமானம் வரணும்ங்கிறதுதான் பலரோட மனநிலை. இந்த மனநிலைக்கு தோதான பயிரா இருக்கறது மலர் சாகுபடிதான். அதுலயும் பூச்சி, நோய் தாக்காத, வருஷம் முழுக்க வருமானம் தர்ற சம்பங்கிதான் பெரும்பாலான விவசாயிகளோட தேர்வா இருக்கு'' என சம்பங்கி சாகுபடிக்கு கட்டியம் கூறுகிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்.

இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன்!

சக்கைப்போடு போடும் இயற்கை சம்பங்கி!

சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் செல்லும் சாலையில், ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெருங்கோட்டூரில் இருக்கிற சுப்பிரமணியனின் தோட்டத்துக்குச் சென்றோம். அன்புடன் வரவேற்றவர், ''எங்க பூர்வீகமே விவசாயம்தான். எங்க அப்பா காலத்துல ரசாயன விவசாயம்தான். எஸ்.எஸ்.எல்.சி முடிச்ச பிறகு படிக்கப் பிடிக்காததால, எங்களோட ரைஸ் மில்லைப் பாத்துக்க ஆரம்பிச்சேன். அப்படியே அப்பாவோட சேர்ந்து விவசாயத்தையும் பாத்துக்க ஆரம்பிச்சேன். அப்பா காலமானதும், தொடர்ந்து விவசாயம் பாத்துட்டு இருக்கேன்.

ஒருநாள் ராஜபாளையத்துல இருந்து சங்கரன்கோவிலுக்கு வர்றதுக்காக பஸ்ஸ்டாண்டுல காத்துக்கிட்டு இருந்தப்போதான் 'பசுமை விகடன்’ போஸ்டர் கண்ணுல தட்டுப்பட்டுச்சு. 'சும்மா படிச்சுப் பாப்போம், பஸ்சுல நேரம் போகுமே’னு நினைச்சு வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் பத்தின செய்திகள் இருந்த அந்தப் புத்தகம் எனக்குள்ள பல யோசனைகளைத் துண்டி விட்டுச்சு. அதிலிருந்து ஒவ்வொரு இதழையும் விடாம படிக்க ஆரம்பிச்சேன். திருநெல்வேலியில நடந்த நம்மாழ்வார் இயற்கை விவசாயக் களப்பயிற்சியில கலந்துக்கிட்டு... அமுதக்கரைசல், பஞ்சகவ்யா மாதிரியான இடுபொருட்களோட நன்மை பத்தியும் தயாரிக்கிற விதத்தையும் தெரிஞ்சுகிட்டேன். உடனே, 'ரசாயனத்துல இருந்து இயற்கைக்கு மாறணும்’னு முடிவு செஞ்சு... கரும்பு, நெல், எலுமிச்சைப் பயிர்களுக்கு அடியுரமா குப்பை உரத்தையும், அமுதக்கரைசலையும் கொடுத்தேன். நல்ல மாற்றம் தெரிஞ்சுது' என்று முகமெல்லாம் மகிழ்ச்சிப் பெருக் கெடுக்க சொன்ன சுப்பிரமணியன், தொடர்ந்தார்.

நம்பிக்கை நாற்று ஊன்றிய அனுபவ விவசாயிகள்!

சக்கைப்போடு போடும் இயற்கை சம்பங்கி!

'அப்படியே போய்க்கிட்டிருந்தப்போ, திண்டுக்கல் மாவட்டம், தவசிமடையைச் சேர்ந்த மருதமுத்து, செம்பட்டியைச் சேர்ந்த கண்ணன்  ரெண்டு பேரோட சம்பங்கி சாகுபடி பத்தி பசுமை விகடன்ல வந்துச்சு. உடனே ரெண்டு பேர்கிட்டயும் பேசிட்டு அவங்களோட தோட்டத்துக்குப் போய், சம்பங்கி சாகுபடி பத்தி 'ஏ டு இசட்’ கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வந்தேன். அவங்க கொடுத்த நம்பிக்கையில எனக்கு ஆர்வம் அதிகமானது. முதல்ல, 70 சென்ட்ல சம்பங்கி போட்டேன். அடுத்து 50 சென்ட்னு இப்போ மொத்தம் ஒண்ணேகால் ஏக்கர்ல சம்பங்கி இருக்கு. மூணு வருசமா சம்பங்கி மூலம் நல்ல மகசூல் எடுத்துக்கிட்டு இருக்கேன்'' என்றவர், சம்பங்கி சாகுபடி செய்யும் முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே... 'ஸ்ரீகார், சுஹாசினி, வைபோவ், பூலோரஜினி என பல ரக சம்பங்கிகள் இருந்தாலும் 'பிரஜ்வல்’ என்ற ரக விதைக்கிழங்கைத்தான் அதிகமாக நடவு செய்கிறார்கள். இது, மற்ற ரகங்களைவிட பூக்கள் பெரிதாகவும் அதிக மகசூலையும் தரும். செம்மண், செவல் கலந்த கரிசல் மண் நிலங்களில் சம்பங்கி நன்றாக வளரும். சாகுபடி நிலத்தை இரண்டு முறை உழவு செய்து, ஒரு வாரம் இடைவெளிவிட்டு, ஏக்கருக்கு 8 டிராக்டர் வீதம் தொழுவுரத்தைப் போட்டு உழவு செய்ய வேண்டும். பிறகு 3 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்திகளுக்கு இடையில் இரண்டரை அடி இடைவெளி இருக்க வேண்டும். பாத்திகளின் இரு ஓரங்களிலும் இரண்டரை அடி இடைவெளியில் மூன்று அங்குல அளவுக்குக் குழிபறித்து, குழிக்கு ஒரு கிழங்கு வீதம், முளைப்பு மேல் நோக்கி இருக்குமாறு செங்குத்தாக முக்கோண நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பொடி கிழங்காக இருந்தால், இரண்டு கிழங்குகளை நடவு செய்ய வேண்டும். வாய்க்கால், சொட்டுநீர், ஸ்பிரிங்லர் ஆகிய முறைகளில் எது வசதியாக இருக்கிறதோ அந்த முறையில் பாசனம் செய்யலாம் (இவர் ஸ்பிரிங்லர் அமைத்திருக்கிறார்).

120-ம் நாளில் பூக்கும்!

முதல் பத்து நாட்களுக்கு தினமும் தண்ணீர்விட வேண்டும். பிறகு, நிலத்தின் தன்மையைப் பொறுத்தும் காலநிலையைப் பொறுத்தும் பாசனம் செய்து கொள்ளலாம். நட்ட 15-ம் நாளில் முளைப்பு வரும். பிறகு படிப்படியாக வளர ஆரம்பிக்கும். 120-ம் நாளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். எட்டாவது மாதத்துக்கு மேல் மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். மாதம் ஒரு முறை களை எடுக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 10 டிராக்டர் தொழுவுரமிட வேண்டும்.  இதை இரண்டு செடிகளுக்கு இடையில் குழிதோண்டி, ஒரு குழிக்கு முக்கால் சட்டி வீதம் கொடுக்க வேண்டும். ஒரு செடிக்கும் அடுத்த செடிக்கும் இடையில் எருவை வைப்பதால் இரண்டு செடிகளுக்கும் தேவையான சத்து கிடைத்துவிடும். இவ்வாறு செய்தால் மகசூல் அதிகரிப்பதோடு, செடியின் ஆயுளும் கூடும்.’

சக்கைப்போடு போடும் இயற்கை சம்பங்கி!

மாதம் 500 கிலோ!

சாகுபடிப்பாடம் முடித்த சுப்பிரமணியன் மகசூல் மற்றும் விற்பனை பற்றிச் சொன்னார். ''சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுலதான் சம்பங்கியை விற்பனை செய்றேன். தினமும் காலையில் பூவைப் பறிச்சதும் வீட்டுலயே வெச்சு ஒரு கிலோ அளவுல தனித்தனி பாக்கெட்டுகளாக எடை போட்டு மார்க்கெட்டுல போட்டுருவேன். ஒண்ணேகால் ஏக்கர்ல இருந்து மாதம் சராசரியாக 500 கிலோ பூ கிடைக்குது. வருஷத்துக்கு 6 ஆயிரம் கிலோ பூ கிடைக்கும். ஒரு கிலோ பூ சராசரியாக 90 ரூபாய்க்கு விற்பனையாகுது. இந்தக் கணக்குல 6 ஆயிரம் கிலோவுக்கு, 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு போக, வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும். விதைக்கிழங்கு, ஸ்ப்ரிங்லர்னு ஆரம்பகட்ட செலவு 64 ஆயிரம் ரூபாய் ஆகும். இது நிரந்தர முதலீடு. அதுக்கப்பறம் தொடர்ந்து வருஷக்கணக்குல வருமானம் எடுத்துட்டே இருக்கலாம்'' என்றார்.

சக்கைப்போடு போடும் இயற்கை சம்பங்கி!

வெற்றி மேல் வெற்றி!

நிறைவாகப் பேசிய சுப்பிரமணியன், 'மத்த விவசாயத்துல ஒரு ஏக்கர்ல எடுக்குற மகசூலை, அரை ஏக்கர்ல எடுக்கிறதை இலக்காக வெச்சுக்கிட்டு அதுக்கான பயிர்கள போடணும். சம்பங்கியை ஒரு முறை நட்டா குறைஞ்சது 6 வருஷத்துக்கு கணிசமான வருமானம் கிடைச்சுட்டே இருக்கும். குறைவான முதலீட்டுல அதிக வருமானம் எடுக்குற வழியைத் தெரிஞ்சுக்கிட்டு அதை முறையா செய்தாலே விவசாயத்துல வெற்றி மேல வெற்றிதான்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.

உத்திகள்... தொழில்நுட்பங்கள்!

கூடுதல் மகசூல் தரும் இடைவெளி!

விதைக்கிழங்கை நடவு செய்வதற்கு முன், அமுதக்கரைசலில் அரை மணி நேரம் ஊற வைத்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் வேர் அழுகல் நோய் தாக்காது. சிலர் ஓர் அடி இடைவெளியில் நடுகிறார்கள். ஆனால், இரண்டரை அடி இடைவெளி விடும்போது, மகசூல் கூடுவதோடு, செடிகளின் ஆயுளும் கூடும்.

வீட்டில் எடை... மார்க்கெட்டில் விலை!

வீட்டில் வைத்தே ஒரு கிலோ, இரண்டு கிலோ என்ற கணக்கில் தனித்தனி பாக்கெட்டுகளில் எடை போட்டு மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்வதுதான் சுப்பிரமணியனின் பாணி. இதனால் மார்க்கெட்டில் கூட்ட நெரிசலில் எடை போடுவதற்கு காத்திருக்க வேண்டியதில்லை. சரியாக எடை போட்டார்களா இல்லையா என்ற சந்தேகம் கொள்ளவும் தேவையில்லை. மார்க்கெட்டுக்குள் நுழைந்ததும் அன்றைய விலை என்ன என்பதைத் தெரிந்து நாமே கணக்கிட்டுக் கொள்ளலாம். எடை போடுபவர்கள் ஒவ்வொரு பாக்கெட்டாக தராசில் வைத்து எடைபோடும் போது அவர்களுக்கும் சுலபமாக இருக்கும்.

தண்ணீரை சிக்கனப்படுத்தும் ஸ்பிரிங்லர்!

வாய்க்கால் பாசனத்தில் தண்ணீர் அதிகம் செலவாகும். சொட்டு நீர்ப்பாசனத்தில் செல வாகும் தண்ணீரை விடவும், 50 சதவிகிதம் குறைவாகத்தான் ஸ்பிரிங்லர் முறையில் செலவாகிறது. வாய்க்கால் பாசன முறையில் வேலையாட்கள் தேவை. இதில் வேலையாட்கள் மிச்சம். தவிர, சொட்டு நீர்க்குழாய் போல, அடைப்புப் பிரச்னைகள், ஸ்பிரிங்லரில் இல்லை.

சக்கைப்போடு போடும் இயற்கை சம்பங்கி!

முழுபலன் தரும் முக்கோண நடவு!

விதைக்கிழங்கை நேருக்கு நேராக நடவு செய்யாமல் 'ஜிக்ஜாக்’ முறையில் நடவு செய்ய வேண்டும். நேருக்கு நேர் நடவு செய்யும் போது செடிகள் ஒன்றோடொன்று மோதி வளர்ச்சி குறையும். முக்கோண நடவு செய்யும்போது, நிலம் முழுவதும் செடிகள் அடர்ந்து வரும். பாசனத்துக்கும் தடை இருக்காது.

நோய்த் தாக்குதல் நோ..நோ!

இயற்கை உரம் போடுவதால் கிழங்கு அழுகல், வேர்ப்புழுத் தாக்குதல், மொட்டுத் துளைப்பான் போன்ற சேதாரங்கள் எதுவும் வருவதில்லை. சம்பங்கிப் பூவை இயற்கை முறையில் பயிரிடும்போது பூக்களும் தரமாக இருக்கும். பூவின் நுனியில் சிவப்பு நிறம் மிகக் குறைவாக காணப்படும். செயற்கையில் பயிரிடும் போது அதிகமான சிவப்பு நிறம் தெரியும். இயற்கை முறை சம்பங்கியா... ரசாயன உரத்தில் விளைந்ததா... என்பதை இதை வைத்துத்தான் கண்டுபிடிப்பார்கள்.

அகத்தி வேலியால் கிடைக்கும் உபரி வருமானம்!

சம்பங்கி வயலைச் சுற்றி அகத்தி நடவு செய்திருக்கிறார், சுப்பிரமணியன். அதுபற்றிப் பேசியவர், ''ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சு வதால் காத்து அடிக்கும் போது தண்ணீர் பரவலாக வீணாகும். அதில்லாம மயில் மாதிரியான பறவைகள் வராம இருக்குறதுக்காகவும் அகத் தியை ஒரு அடி இடைவெளியில் வேலி மாதிரி நட்டிருக்கேன். நான் வளர்க்குற ஆடுகளுக்கு இந்த அகத்தியைத்தான் தீவனமா கொடுக்கிறேன். அதனால ஆடுகள் மூலமாவும் ஒரு வருமானம் கிடைக்குது' என்றார்.

விற்பனைக்கு சங்கரன்கோவில் பூ மார்க்கெட்!

சக்கைப்போடு போடும் இயற்கை சம்பங்கி!

சங்கரன்கோவில் பூ மார்க்கெட் தலைவர் வெள்ளத் துரையிடம் பேசினோம். ''முப்பது வருஷத்துக்கு முன்னாடி 4 கடைகளோட தொடங்கின இந்த சந்தையில இப்போ 40 கடைகள் இருக்கு. குறுக்கல்பட்டி, தேவர்குளம், பெரும்பத்தூர், மணலூர், நயினாபுரம், அழகாபுரி, பெருங்கோட்டூர், வாடிக்கோட்டைனு சங்கரன்கோவிலைச் சுத்தி யிருக்குற 50 கிராமங்கள்ல இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக வருது. தினமும் காலை 8 மணியில இருந்து மதியம் 12 மணி வரை சந்தை இருக்கும். மாசி மாசத்துல இருந்து ஆடி மாசம் வரைக்கும் மதியம் 2 மணி வரை விற்பனை நடக்கும். மல்லி, செண்டு, சேவல் (கோழி) கொண்டை, சம்பங்கி, சிவப்பு அரளிப் பூக்கள்தான் அதிகமா வரத்தாகும். சிவகாசி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடினு இங்க இருந்து பூ போகுது. கேரளாவுக்கும் அதிகமா போகுது. சாதாரண நாட்கள்ல ஒருநாளைக்கு சராசரியாக 5 லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடக் கும். சீசன் சமயங்கள்ல 10 லட்ச ரூபாய்க்கு மேல வர்த்தகமாகும்'' என்றார்.

தொடர்புக்கு,

சுப்பிரமணியன்,செல்போன்: 9790584942

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு