Published:Updated:

‘‘வளம் குறைகிறது... செலவு எகிறுகிறது!’’

பாடம்பா.சிதம்பர பிரியா, படங்கள்: எல்.ராஜேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி

'இயற்கை விவசாயமே, இயற்கையைத் தக்கவைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறை’ என்ற தலைப்பில், டிசம்பர் 12 அன்று குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது. 'பசுமை விகடன்’ மற்றும் ஸ்ரீபராசக்தி கல்லூரி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில்... தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300 விவசாயிகள் பங்கேற்றனர்.

‘‘வளம் குறைகிறது... செலவு எகிறுகிறது!’’

கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய கல்லூரி முதல்வர் ராஜராஜேஸ்வரி, ''1950-ம் ஆண்டில் நமது ரசாயன உரத்தேவை ஒரு ஹெக்டேருக்கு அரை கிலோ அளவில்தான் இருந்தது. ஆனால், பசுமை புரட்சிக்குப் பிறகு, 90 கிலோ பரிந்துரைக்கப்படுகிறது. இதைவிட அதிகமாகவே விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான், மண்ணின் வளம் குறைந்து, விவசாயிகளுக்கு இடுபொருள் செலவு அதிகமாகிறது'' என்று குறிப்பிட்டார்.

மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பத்மலதா பேசும்போது, ''தமிழகம் அதிக நீரிழிவு நோயாளிகள் கொண்ட மாநிலமாக இருக்கிறது. இதற்குக் காரணம், நம்மைச் சுற்றியுள்ள பாரம்பரிய சிறப்புள்ள பல தாவரங்களை மறந்ததுதான். அங்ககப் பொருட்கள் சார்ந்த விவசாயத்தை செய்வதுதான் நம்மை பயமுறுத்தும் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கும்' என்றார்.

‘‘வளம் குறைகிறது... செலவு எகிறுகிறது!’’

இயற்கைத் தரச்சான்றிதழ் வழங்குவது பற்றி 'லகான்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் செந்தில்குமார்; இயற்கை விளைபொருட்கள் விற்பனை பற்றி புளியங்குடி விவசாய சேவா நிலைய நிறுவனர் மற்றும் முன்னோடி விவசாயி கோமதிநாயகம்; இயற்கை விவசாய முறை பற்றி முன்னோடி இயற்கை விவசாயி அந்தோணிசாமி; கரிம இடுபொருள்கள் மற்றும் பயன்பாடு பற்றி இயற்கை விவசாயி சென்னகேசவன்; நோனி மர பயன்பாடு பற்றி 'காளாம்பபட்டி’ ஸ்ரீனிவாசன், பால் காளான் வளர்ப்பு பற்றி ராஜ்குமார்பிரியா தம்பதி ஆகியோர் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

கருத்தரங்கில் பங்கேற்ற செங்கோட்டையைச் சேர்ந்த காந்திமதி, ''வணிகவியல் துறை நடத்துறதால மார்க்கெட்டிங் பத்தி மட்டும்தான் சொல்வாங்கனு நினைத்து வந்தேன். ஆனா, இயற்கை விவசாயம், அதனால் ஏற்படும் பலன்கள் இயற்கை உரம், கரிம இடுபொருள் பற்றிய விளக்கங்கள் எல்லாம் ரொம்ப அனுபவப் பூர்வமாகப் பகிர்ந்துகிட்டாங்க. காளான் வளர்ப்பு பற்றிய செயல்முறை விளக்கங்கள் பயனுள்ளதாக இருந்துச்சு' என்று அனைத்து விவசாயிகளின் குரலாக ஒலித்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு