Published:Updated:

‘நானும் நம்மாழ்வாரும்’

பகிர்வுத.ஜெயகுமார்

பிரீமியம் ஸ்டோரி

ஜனநாதன், திரைப்பட இயக்குநர்:

'என்னோட பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டமா இருந்தாலும், சென்னையிலயே வளர்ந்ததால விவசாயத்தைப் பத்தி எதுவும் தெரியாது. சில சந்திப்புகள் மூலமா எனக்குள்ள விவசாய அறிவை, இயற்கை விவசாயம் பற்றிய தெளிவைப் புகட்டியது நம்மாழ்வார் ஐயாதான். அவர் சிறந்த போராளி. அவருகூட இருந்த சந்தர்ப்பங்கள் குறைவா இருந்தாலும், கத்துகிட்டது நிறைய. 'பேராண்மை’ படத்துல 'பாரம்பரிய நெல் செத்தா, நான் செத்த மாதிரி’னு ஒரு வசனம் வெச்சிருப்பேன். அவர் வெறுமனே நம்மோட பழம்பெருமையை மட்டும் பேசுறது கிடையாது. அதிலுள்ள சிறந்த அறிவைப் பரப்பியிருக்காரு. மத்தவங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருந்தாலும், 'இவர் போன்று எளிமையா சொல்லியிருக்க முடியுமா’னு தெரியல. தொடர்ந்து அவரைச் சந்திக்கணும், நிறைய விஷயங்கள் குறித்து பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன். இவ்ளோ சீக்கிரம் இயற்கையில கலப்பாருனு நினைச்சிக் கூட பாக்கல. மத்த துறைகளுக்கு ஆட்கள் இருக்காங்க. விவசாயத்துக்கு யாரு இருக்காங்க?'

‘நானும் நம்மாழ்வாரும்’

கு.சிவராமன், சித்த மருத்துவர்:

''2001-ம் ஆண்டு வாக்கில் இயற்கை உணவுகள் சம்பந்தமா நடந்த கருத்தரங்கில்தான் ஐயாவை சந்திச்சேன். அந்தக் கூட்டத்துல திராட்சை, கத்திரிக்காய் பத்தி ஐயா பேசினது இன்னிக்கும் நினைவில் இருக்கு. 'சொத்த கத்திரிக்காயா பாத்து வாங்கி சாப்பிடுங்க. ஏன்னா, பூச்சிக்கொல்லிகளோட பாதிப்பு அந்தக் காய்லதான் குறைவா இருக்கும். புழு சாப்பிட்ட பகுதியை நீக்கிட்டு, அந்தக் காயை சமைக்கலாம். திராட்சைக்கு பூக்கிற பருவத்துக்கு பிறகு பூச்சிக்கொல்லித் தெளிக்கக்கூடாதுனு சட்டமே இருக்கு. ஆனா, அறுவடை செய்றதுக்கு முந்தினநாள் வரைக்கும் மருந்து தெளிக்கிறாங்க’னு பேசினாரு. அந்த பேச்சே ஐயா மேல ஒரு மரியாதையை ஏற்படுத்திச்சு. 'சமூகத்தை நோய் பீடிச்சிருக்கு. உரம், பூச்சிக்கொல்லியால உணவுப் பொருள்கள் பாழடைஞ்சு கிடக்கு. சித்த மருத்துவத்தோட அடிப்படையே உணவே மருந்துங்கறதுதான். அத வலியுறுத்துங்க’னு சொன்னாரு. நான், இப்போ இந்தளவுக்கு சிறுதானியங்கள் பத்தி பேசுறதுக்கும் எழுதறதுக்கும் அவர் போட்ட விதைதான் காரணம்.'  

ரோகிணி, திரைப்பட நடிகை:

''பி.டி. தொழில்நுட்பத்தை எதிர்த்து திருச்சியில் பாதுகாப் பான உணவுக்கான கூட்டமைப்பு சார்பா ஒரு கூட்டம் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அதுலதான் நம்மாழ்வாரைச் சந்திச்சேன். அப்போ, வேகவைத்த பொருட்களைச் சாப்பிடாமல், இயற்கையாக விளையும் பொருட்களை சாப்பிட்டு வர்றதா சொன்னாரு. 'ஏன் வேகவைத்த உணவுப் பொருள்களை சாப்பிடக் கூடாது’னு கேட்டேன். 'நமக்குத் தேவையான சத்துக்கள் இயற்கையான பொருட்கள்ல கிடைக்கும்போது, எதுக்காக தனியா வேகவெச்சி சாப் பிடணும்’னு சொன்னார்.

'பெண்கள்கிட்ட விவசாயம் இருந்தா, அவங்க பத்திரமா பாத்துப்பாங்க. அவங்ககிட்ட இருந்தாலே பாதுகாப்பான உணவு கிடைச்சிடும்’னு ஒரு தரம் பேசினாரு. இதையெல்லாம் கேட்டு, இயற்கை விவசாயம் மீது ஆர்வம் வரவே, 'நீங்க நடத்துற பயிற்சியில கலந்துக்கிறேன்’னு கேட்டேன். 'நீங்க இருக்கிற இடத்துலே செய்ய வேண்டியது நிறைய இருக்கு. அத பண்ணுங்க’னு சொன்னார். அதன்பிறகு சென்னையில குப்பை மேலாண்மை தொடர்பா சில பணிகள செஞ்சிட்டு வர்றேன். பாதுகாப்பான உணவுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துட்டு வர்றேன்.'

ஊர்வசி, திரைப்பட நடிகை:

'அடிப்படையிலேயே ஆயுர்வேதம், இயற்கை உணவுகள் மீது ஆர்வம் கொண்ட குடும்பத்துல இருந்து வந்ததால இயற்கை பத்தி யார் பேசினாலும் ஆர்வமா கேட்பேன். நம்மாழ்வாரை நேரடியா சந்திச்சது இல்ல; ஆனா அவருடைய கருத்துக்களை நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். நம்மாழ்வார் மாதிரி இயற்கையை நேசிக்கிற மனிதர்களோட கருத்துக் களை நடைமுறையில் கடை பிடிக்கிறது குறைவாத்தான் இருக்கு. இப்ப, 100 வீடுகள் இருக்கிற இடத்துலகூட சர்வசாதாரணமா போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சுறாங்க. நாளைக்கு இதெல்லாம் என்ன மாதிரி யான பாதிப்புகளை ஏற்படுத் தும்னு தெரியாது. இப்படி இயற்கைக்கு எதிராவே எல்லாத்தையும் செஞ்சுட்டு இருக்கோம். இயற்கையிலே பெரியளவுல மாற்றம் நிகழ்ந்தா தான் எல்லாமே மாறும் போல''. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு