Published:Updated:

ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு...

நம்மாழ்வார் வழியில் அசத்தும் பெண் விவசாயி!பாதைஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

''விவசாயம் தொழிலும் அல்ல... கலாசாரமும் அல்ல... அது ஒரு வாழ்வியல்'' என்று சொல்வார் நம்மாழ்வார். இதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு, இயற்கை வழி வேளாண்மையை அசத்தலாக மேற் கொண்டிருக்கிறார், திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி.பரிமளா தேவி.

ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு...

''பழமை மாறாத, புதிய விவசாய யுக்திகளைக் கையாண்டு பார்த்து, அதில் திருப்தி ஏற்பட்டால் நம்முடைய வயலில் தைரியமாக செயல்படுத்தலாம்'' என்பதும் நம்மாழ்வார் சொல்லிச் சென்றதுதான். இதையும் தன்னுடைய வயலில் செயல்படுத்தி வெற்றிகரமாக வலம் வரும் பரிமளாதேவியை, நம்மாழ்வார் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம்.

முத்தூரில் இருந்து கூப்பிடுதொலைவில் இருக்கிறது, இவருடைய பண்ணை. ஆடு, மாடு, கோழி எனப் பல்லுயிர் சுழற்சிக்கான முக்கிய அம்சங்களுடன் திகழ்கிறது இப்பண்ணை! 'குட்டி நாதஸ்வரம்’ போன்ற மஞ்சள் பூக்கள் குலுங்க தோட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் பூவரச மர நிழலில் கட்டி இருந்த நாட்டு மாட்டுக்கு, பூவரச இலைகளை உண்ணக் கொடுத்து கொண்டிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தோம். கணவர் பெரியசாமி மற்றும் மகன் ராம்குமார் இருவரும் இணைந்துகொள்ள, கடகடவென ஆரம்பித்தார் பரிமளாதேவி.

''எங்களுக்கு மொத்தம் 10 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. இதுல மேய்ச்சல் நிலம் 4 ஏக்கர் போக, 6 ஏக்கர்ல விவசாயம் பண்றோம். வீடு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பட்டுபுழு வளர்ப்புமனைனு சில கட்டடங்களையும் கட்டி இருக்கோம். கடந்த நாலு வருஷமா முழுக்க இயற்கை வழியிலதான் எங்க பண்ணை நடக்குது. அதுவும் ஐயா நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த வழியிலதான் அடி பிசகாம போயிட்டு இருக்கு. இதுக்கு முன்ன நாங்க செஞ்சிட்டு இருந்த ரசாயன விவசாயத்துல பட்ட துன்பங்கள் ஏராளம். பெற்ற கடன்களும் எக்கச்சக்கம். இதனால ஏற்பட்ட பிரச்னைகள் எல்லாம் படிப்படியா குறைஞ்சு, மனநிறைவோட இருக்கோம்னா, இதுக்குக் காரணம் ஐயாதான். ரசாயனத்தை விட்டு இயற்கைக்கு மாறிய காலகட்டத்தில் சில சமயம் சோர்வு வந்துச்சு. அந்த சமயம் எல்லாம், 'முயற்சி விதைபோல... முளைத்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்’ என்கிற ஐயாவோட வாக்கு நினைவுக்கு வரும். வந்த சோர்வைத் தூக்கிவீசிட்டு, அடுத்த வேலைய பார்க்கப் போயிடுவேன்'' என்று குரலில் உறுதிதொனிக்க சொன்ன பரிமளாதேவி, தொடர்ந்தார்.

வீட்டுக்கு நாட்டுமாடு... விற்பனைக்குக் கறவை மாடு!

ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு...

''நாட்டுமாடுகளை அழிவில இருந்து காப்பாத்தணும்னு அய்யா அடிக்கடி சொல்வார். அதனால, ரெண்டு காங்கேயம் பசுக்களை வாங்கினோம். இந்த மாடுகளோட சாணம், மூத்திரம் எல்லாம் அதிக வீரியமானது. இதை பயன்படுத்தித்தான் இடுபொருட்கள் தயாரிக் கிறோம். வீட்டுக்குத் தேவையான சத்து அதிகமான சுவையான பால், கைமணக்கும் நெய், தாகம் தீர்க்கும் மோர் எல்லாம் இதன் மூலமாவே கிடைக்குது. தவிர, பால் விற்பனைக்காக 4 கறவை மாடுகளை வெச்சிருக்கோம். சராசரியா, ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கிடைக்குது. அதை, லிட்டர் 36 ரூபாய்னு கொடுக்கிறோம். அதுக போடுற சாணியைத் தொழுவுரமா பயன்படுத்திக்கிறோம்.

ஆண்டு முழுவதும் வருமானம்!

பண்ணையில 20 வெள்ளாடு களை வளர்க்குறோம். பகல்ல மேய்ச்சலுக்கு விட்டுட்டு ராத்திரியில கிடை அடைச்சிடுவோம். இதுக மூலமா குறைஞ்சபட்சம் வருஷத்துக்கு 20 குட்டிகள் கிடைக்குது. அதை விற்பனை செய்றதுல 50 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. நிலத்துக்கு எருவும் கிடைச்சுடுது. சிறுசும் பெருசுமா 50 நாட்டுக்கோழிகள் இருக்கு. தோட்டத்துல இருக்குற புழு, பூச்சிகளை மேய்ஞ்சே இதுக வளந்துடும். தினசரி ஒருவேளை மட்டும் கொஞ்சமா தீவனம் இறைப்போம். இதுகளுக்கு பெரிசா செலவு இல்லை. குஞ்சுகள், முட்டைகள்னு விற்பனை செய்றது மூலமா மாசம் 5 ஆயிரம் ரூபாய் வரும்படி வருது. பயிருக்கு கோழி எரு போய் சேந்துடுது. 'ஒரு பண்ணை ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைக் கொடுக்கணும். வருமானத்தை ஈட்டணும்’னு ஐயா சொல்வார். அந்த வகையில்தான் எங்க பண்ணையை வடிவமைச்சு இருக்கிறேன்'' என்று பெருமையாகச் சொன்ன பரிமளாதேவி, பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.

ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு...

தற்சார்பு விவசாயம்!

''எங்க வீட்டு சமைய லுக்குத் தேவையான அரிசி, பயறு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும், கால் நடைகளுக்குத் தேவையான வைக்கோல், சோளத்தட்டை, கடலைக்கொடி போன்ற உலர்தீவனங்களையும் சேமிச்சு வெச்சுக்கிறோம். கோ4 ரக மறுதழைவு பசுந்தீவனப்பயிரை ஒரு ஏக்கர்ல போட்டிருக்கோம். இது, கறவைமாடுகளுக்கு அதிக புரதச்சத்தையும் நார்ச்சத்தையும் கொடுக்கும். 15 நாளுக்கு ஒரு தடவை பஞ்சகவ்யாவையும் அமுதக்கரைசலையும் மாத்தி மாத்திக் கொடுப்போம். அடியுரமா ஆட்டு எரு போட்டிருக்கோம். அதனால வெட்ட வெட்ட தழைஞ்சு, வேண்டிய அளவுக்கு தீவனத்தை அள்ளி வழங்குது. இந்தக் கரணைகளையும் வெட்டி குறைந்த விலைக்கு விற்பனை செய்றோம். இதுவரை 100 விவசாயிங்களுக்கு இந்த பசுந்தீவனக் கரணைகளைக் கொடுத்திருக்கோம். அவுங்க மூலமா மத்த விவசாயிங்களுக்கும் பரவுது. 'எதையும் இலவசமா கொடுக்காதே, நீயும் வாங்காதே’, 'விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு விதை, தொழில்நுட்பம் எல்லாம் பரவணும்’ங்கிற ஐயாவின் வார்த்தைகளை சரியா நாங்க நிறைவேத்துறோம்.

உரமும் நமது... உயர் விளைச்சலும் நமது!

வருஷம் முழுசும் எங்க நிலத்துல ஒரு இடம் பாக்கியில்லாமல் ஆட்டுக்கிடை போட்டுடுவோம். ஒரு இடத்துல பத்து நாள் வரை கிடைபோடுறதால, ஆட்டு எரு மண்ணு தெரியாத அளவுக்கு நெறைஞ்சிருக்கும். அதனால, எந்த வெள்ளாமை வெச்சாலும் மகசூல் பட்டைய கிளப்புது. அது போக பருவமழைக்கு முந்தி, சேமிச்சு வெச்சிருக்கிற கோழி எருவை பயிருக்குக் கொடுப்போம். அது இயற்கையான மேலுரமாக மாறி பயிருக்கு ஊக்கம் கொடுக்கும். ஆக, நம்மாழ்வார் சொன்ன 'ஒன்றின் கழிவு... மற்றொன்றின் உணவு’ என்கிற சுழற்சி முறை விவசாய விதி, ரசாயன உரத்துக்கு மாற்றா நின்னு. உற்பத்திச் செலவைக் குறைக்குது'' என்ற பரிமளாதேவி,

மாத வருமானத்துக்கு மல்பெரி!

ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு...

''ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம் கிடைக்கும்படி பண்ணையை வடிவமைச்சிருக்கோம். ஆனா, போதிய மழை கிடைக்காம போனதால ஆண்டு வருமானம் கொடுக்கிற பயிர்களை இந்த போகம் நடல. ஆனா, 'பசுமை விகடன்’ மூலமாக நிரந்தர மாத வருமானம் பார்க்க ஒரு வழி கிடைச்சுது. தாராபுரம் பக்கத்துல இருக்கிற காசிலிங்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து  பாப்பாத்தி தம்பதி, பட்டுப்புழு வளர்த்து மாநில விருது வாங்கினது பத்தி வந்த கட்டுரை, எங்களையும் மல்பெரி விவசாயியா மாத்திடுச்சு. அதுவும் முழுக்க முழுக்க இயற்கைதான். நாலு ஏக்கர்ல சொட்டு நீர் போட்டு மல்பெரி செடிய நட்டிருக்கோம். ஏற்கெனவே கிடைபோட்ட மண்ணு. அதோட அமுதக்கரைசலையும் கொடுக்கிறதால, மல்பெரி எல்லாம், சும்மா வெத்தலை மாதிரி 'தளதள’னு இருக்கு. ஐயா சொன்ன அத்தனை விஷயங்களையும் எங்க பண்ணையில தவறாம கடைபிடிக்கறதால எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு. அதனாலதான் அவரை நாங்க தெய்வமா பாக்குறோம்'' என்றபடி விடைகொடுத்தார்.

தவறுகளும்... விளக்கங்களும்!

'34 சென்ட்... ஆண்டுக்கு ரூ 2. லட்சம்... ஒப்பற்ற ஒரு பண்ணை’ என்ற தலைப்பில், பசுமை விகடன், 25.12.14 தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் என்பவரின் பண்ணை பற்றிய அக்கட்டுரையில் சில தகவல்கள் தவறாக இடம்பெற்றிருப்பதாக, நம்மிடம் குறிப்பிட்ட ஃபெலிக்ஸ், '’கட்டுரை நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கு. நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்திருக்கு. தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கு. ஆனா, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் இதையெல்லாம் நான் பயன்படுத்துற மாதிரி கட்டுரையில வந்திருக்கு. இதையெல்லாம் நான் பயன்படுத்துறதில்ல. வடிகரைசலை மட்டும்தான் பயன்படுத்துறேன். இதேபோல வனராணி ரகக் கோழி 1,000 ருபாய் விலை போகும்னு வந்திருக்கிற தகவலும் தவறு. ஒரு கோழி 300 ரூபாய் வரைதான் விலை போகும்'' என்று தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.

ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு...

தொடர்ந்து பேசிய ஃபெலிக்ஸ், '’இந்தப் பண்ணையை வருமான நோக்கத்துக்காக நான் உருவாக்கல. அப்படி ஒரு நோக்கம் இருந்திருந்தா, ஐ.டி.துறையிலேயே (தகவல் தொழில்நுட்பத்துறை) இருந்திருப்பேன். இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்கு மாத்திக்க நினைச்சுதான் இந்த பண்ணையை உருவாக்கினேன். இதை முழுமையா புரிஞ்சுக்காத சிலர், 'ரெண்டு லட்சம்தான் வருமானம் கிடைக்குதா?னு கேக்கறாங்க. இந்த இடத்துல கழிவுகள் அத்தனையும் மறுசுழற்சி ஆகுது; இயற்கைக் காயப்படாம இருக்கு; தற்சார்பு விவசாயம் நடக்குது; எல்லாத்துக்கும் மேல மனநிம்மதியான வாழ்க்கை கிடைக்குது. இதுக்கு ரெண்டு லட்சம் இல்ல... ரெண்டு கோடி... ரெண்டாயிரம் கோடினு எப்படி வேணும்னாலும் மதிப்பு போட்டுக்கலாம். இயற்கை விவசாயத்தின் மூலமா வருமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதைவிட, வாழ்வியல் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைக்கறவன் நான். அதனால, இந்த வருமானக் கணக்குலயெல்லாம் எனக்கு விருப்பமே இல்ல'' என்று சொன்னார்.

ஃபெலிக்ஸ் கூறியவற்றில் இரண்டு விஷயங்கள், தவறாக இடம்பெற்றுவிட்டன. இப்படித் தவறான தகவலைத் தந்தமைக்காக வருந்துகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழா வண்ணம் பணியாற்ற உறுதி ஏற்கிறோம்.

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு