Election bannerElection banner
Published:Updated:

நான் ‘எமர்ஜென்ஸி’ விவசாயி!

நினைவுகள்பசுமைக் குழுபடங்கள்: வி.செந்தில்குமார்

முழுநேரப் பத்திரிகையாளராக இருந்த ஆனந்த விகடன் குழுமத்தின் சேர்மன் எஸ். பாலசுப்ரமணியனின் மறுபக்கம், விவசாயம். சென்னை அருகேயுள்ள படப்பை கிராமத்தில் இருக்கிறது ஜெமினி வேளாண்மைப் பண்ணை. விவசாயத்தில் பலவிதப் புதுமைகளையும் புகுத்தியவர், அந்தப் பகுதி விவசாயிகளுக்கே முன்மாதிரியாகவும் இருந்தார். தான் கற்ற பலவிஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர். 19.12.2014 அன்று 79-ம் வயதில் காலமாகிவிட்ட  விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியனின் விவசாய ஆர்வம் பற்றிய சில நினைவுக்குறிப்புகள் இங்கே...

நான் ‘எமர்ஜென்ஸி’ விவசாயி!

ஜெமினி வேளாண் பண்ணையில், 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி 'கேட்’ அறக்கட்டளையுடன் இணைந்து 'பசுமை விகடன்’ ஏற்பாடு செய்திருந்த 'நேரடி நெல் விதைப்புப் பயிற்சி’ நடைபெற்றது. அப்போது, அங்கு குழுமிய விவசாயிகளிடம் தன்னுடைய விவசாய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

''ஒவ்வொரு தடவையும் சாகுபடி செய்யும் போது என்னென்ன தவறு செய்தோம் என்பதை சிவப்பு மையில் நான் எழுதி வைப்பேன். அடுத்த சாகுபடியின்போது, அந்தத் தவறைச் செய்ய மாட்டேன். தவறுகளைக் குறித்துவைத்துக் கொண்டு, அதையெல்லாம் களைந்தாலே, விவசாயத்தில் ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றுக்கொண்டு வெற்றியடைய முடியும். கடந்த 47 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். இன்றுவரை கற்றுக் கொண்டேதான் இருக்கிறேன்'' என்று பெருமையோடு சொன்னார்.

இவர், இப்படி முழுநேர விவசாயியாகவும் மாறியதற்குக் காரணம், இவருடைய தந்தையான ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன். இதைப் பற்றி 6-5-1987 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் சிலாகித்துப் பேசியிருக்கிறார் எஸ்.பாலசுப்ரமணியன்.

''1958-ம் ஆண்டு முதலே படப்பையில் நான் காய்கறிப் பண்ணை வைத்திருக்கிறேன். 1979லிருந்து ஆனந்த விகடனை முழுமையாக கவனிக்க ஆரம்பித்தது போலவே அந்தப் பண்ணையை தீவிரமாக என்னால் கவனிக்க முடிகிறது. மிகவும் வெற்றிகரமான மகசூல்களையும் என்னால் கொடுக்க முடிகிறது. என் தந்தை எஸ்.எஸ். வாசன் அவர்களுக்கு விவசாயத்தில் மட்டும் நூற்றில் ஒரு பங்குகூட ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் அவருடைய தந்தை சுப்ரமணியம், விவசாயத்தைத்தான் நம்பி இருந்தார். ஆனால், விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத அவர்தான், நான் இன்று விவசாயப் பண்ணை வைப்பதற்கே காரணமாக இருந்தார் என்பது மிகவும் வேடிக்கையான விஷயம்.

நான் ‘எமர்ஜென்ஸி’ விவசாயி!

அன்று தீபாவளி. இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்த சமயம். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதல் முறையாக நேரு எமர்ஜென்ஸி கொண்டு வந்தார். நாட்டில் பலருக்கும் எமர்ஜென்ஸி என்றால், என்ன வென்றே தெரியாத சமயம். தீபாவளியன்று தந்தையைப் பார்த்துவிட்டுப்போக பல நண்பர்கள் வருவார்கள். அப்போது எமர்ஜென்ஸியின் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி எல்லோரும் ஹாலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மதச் சண்டைகளை அறவே தவிர்க்க வேண்டும். உற்பத்தித் திறனைப் பெருக்குவது மக்களின் முக்கியக் கடமை. ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் தொழிற்சாலையும் இரண்டு மடங்கு உற்பத்தி செய்யவேண்டிய நேரம் இது. வீட்டிலுள்ள ஒவ்வொருவரும், ஏதாவது ஒருவிதத்தில் உற்பத்தியைப் பெருக்கி, நாட்டில் பற்றாக்குறை ஏற்படாமல் செய்ய வேண்டும். வீட்டில் ஒரு குரோட்டன்ஸ் செடி இருந்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு கத்திரிக்காய் விளைந்தால், அந்த வீட்டின் காய்கறிகளின் தேவைக்குப் பயன்படும். இப்படி கிடைக்கிற கொஞ்சம் மண்ணைக்கூட பொன் விளையும் பூமியாகச் செய்ய முடியும்’ என்று வீட்டுக்கு வந்த நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

பக்கத்து அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த என் மனதில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மவுண்ட் ரோட்டில் ஆனந்த விகடன் அலுவலகம் முன்பு ஒரு ஏக்கர் நிலத்துக்கு மேல் தரிசாகக் கிடந்தது. ஆனந்த விகடன் தொழிலாளர்களுடன், பக்கத்திலிருந்த ஜெமினி தொழிலாளர்களையும் கூட்டாகச் சேர்த்தேன். மாலையில் வேலை முடிந்ததும் எல்லோரும் மண்வெட்டி எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவோம். நிலத்தைச் சீர் செய்து தோட்டம் அமைத்தோம். எல்லாவிதமான காய்கறிகளையும் பயிரிட்டோம். விளைந்த காய்கறிகளைக் குறைந்த விலைக்கு எங்களுக்குள்ளேயே வாங்கி விநியோகித்து செலவைச் சரிக்கட்டினோம். இப்படி சின்ன அளவில் கூட்டுறவு முறையில் காய்கறித் தோட்டம் அமைத்ததே என் முதல் அனுபவம். இதுவே பிற்பாடு என்னை விவசாயத்தின் பக்கம் முழுமையாக இழுத்தது!''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு