Published:Updated:

விவசாயப் பண்ணைகளே வேளாண் கல்லூரிகள்!

வரலாறு, ஓவியம்: ஹரன்

'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்து விட்டார். அவருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ் வாருக்காகப் பேசுகிறேன்’ என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி இதழ்தோறும் பேசுகிறார்கள்.

விவசாயப் பண்ணைகளே வேளாண் கல்லூரிகள்!

நம்மாழ்வார் 1938-ல் பிறந்தது முதல் 2013 டிசம்பர் 30-ம் தேதி இயற்கையுடன் கலக்கும் வரை, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இப்போது நம்மாழ்வார் நம்முடன் இல்லை. ஆனால், அவர் பேணி வளர்த்த ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு மரமும் அவரை உயிர்ப்புடன் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டின் மூலை, முடுக்குகளெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக் கொண்டே இருக்கின்றது.

விவசாயப் பண்ணைகளே வேளாண் கல்லூரிகள்!

ஒரு பண்ணைக்குள் நுழைந்தால், அங்கு இயற்கை விவசாயம் மட்டுமல்ல... அந்தப் பண்ணைக்கு பெயர் சூட்டி பெருமைப்படுத்துவதும் நம்மாழ்வாரின் வழக்கம். கொழிஞ்சி, புதுநிலவு, எதிர்காலம், எழுங்கதிர், திருமால் இருஞ்சோலை... என்று வானகம் வரை அவர் சூட்டிய பெயர்களின் பட்டியல் ரொம்பவே நீளம். இயற்கை விவசாயத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்ப்பதற்காக கால்நடையாகவே பல ஊர்களுக்கு நடந்தும், சைக்கிளிலும், மாட்டு வண்டியிலும், லாரியிலும்கூட பயணம் செய்தார். கௌதம புத்தருக்குப் பிறகு, தன்னுடைய கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல அதிக தூரம் பயணம் செய்தவர்களில் தந்தை பெரியாருக்கும், நம்மாழ் வாருக்கும் மறுக்க முடியாத இடம் உண்டு என்று அடித்துச் சொல்லலாம்.

இயற்கை விவசாயத்தை வேகமாகக் கொண்டு செல்ல, முதலில் அதை ஆவணப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதற்காக 2001-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணைகள் பற்றி 'பேசும் பண்ணைகள்’ என்ற தலைப்பில் சிறுநூலை வெளியிட்டார். இதில் சத்தியமங்கலம் சுந்தரராமன், பெர்னார்ட் டி கிளார்க், பொள்ளாச்சி மது.ராமகிருஷ்ணன், பணிக்கம்பட்டி கோபால கிருஷ்ணன், உப்புப்பள்ளம் ரவி....என்று இயற்கை விவசாயத்தை ஆரம்ப காலத்தில் வளர்தெடுத்த முப்பதுக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளின் அறிமுகங்களும், அவர்களுடைய பண்ணைகளின் சிறப்புகளை யும் எளிய நடையில் பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டு விவசாயிகளின் அறிவைப் பல்கிப் பெருக வைக்க... 2002-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தில் 'வாழ்வியல் பல்கலைக்கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்புக்கு எங்கும் கட்டடம் கிடையாது. பெயர்ப் பலகைகூட இல்லை. இந்த அமைப்புக்கான செயல் வடிவம்... 2008-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம், பாலையூரில் பசுமை விகடன் நடத்திய களப்பயிற்சியின் போதுதான் கிடைத்தது.

''வயல்வெளியே பல்கலைக்கழகம், விவசாயிகளே பேராசிரியர்கள். நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகளின் பண்ணைகளே கல்லூரிகள்...' என்று உண்மையை உணர்த்தினார் நம்மாழ்வார்.

விவசாயப் பண்ணைகளே வேளாண் கல்லூரிகள்!

வாழ்வியல் பல்கலைக்கழகம் சார்பில் 'கால்காணி வெள்ளாமை’ என்ற கையேட்டை நம்மாழ்வாரும், 'அறச்சலூர்’ ரா.செல்வமும் எழுதியுள்ளனர். 'உயர்சம்பளத்துடன் நல்ல நிலையில் இருக்கும் ஒரு வங்கி அதிகாரியின் குடும்பம் உண்ணும் அளவுக்கான உணவை, ஐந்து பேர் கொண்ட சாமான்யனின் குடும்பமும் உண்ண வேண்டும் என்றால், கால்காணி நிலமே போதும். கணக் காசான் தபோல்கரின், 'கால்காணி வெள்ளாமை’ மராட்டியத்தில் சாத்தியமானதைப் போல, தமிழ்நாட்டிலும் சாத்தியமாகும்’ என்று முன்னுரையில் நம்பிக்கை விதைகளை விதைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. இந்திய அளவில் நடைபெற்ற இயற்கை விவசாய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார் நம்மாழ்வார். இந்திய அளவில் இயற்கை விவசாயத்துக்காக கோவா மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 'ஆர்கானிக் ஃபார்மிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ (Organic Farming Association of India -OFAI)  என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதை 2003ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி நிறுவியவர்களில் நம்மாழ்வாரும் ஒருவர்.

''இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் எங்கள் அமைப்பின் கூட்டத்தில், நம்மாழ்வார் கட்டாயம் கலந்து கொள்வார். ஒவ்வொரு முறையும், நிறைய விவசாயிகளை அழைத்து வருவார். இந்த அமைப்புக்கான தமிழ்நாட்டுத் தொடர்பாளராகவும் இறுதி காலம் வரை இருந்துள்ளார். இந்திய அளவில், இயற்கை விவசாயத்துக்காக ஓயாமல் செயல்பட்டவர்களில் நம்மாழ்வார் முதன்மையானவர். இந்திய இயற்கை விவசாய வரலாற்றில் நம்மாழ்வாருக்கு தனியிடம் உண்டு' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் கிளாடு ஆல்வாரிஸ்.

2002-ம் ஆண்டு. பவானிசாகர் முதல் கொடுமுடி வரை 25 நாட்கள் நடைப்பயணம் சென்றார் நம்மாழ்வார். 2003-ம் ஆண்டு காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் தொடங்கி, கல்லணை வரையில் நடைப்பயணம் சென்றார். இந்த நடைப்பயணங்களில், நீர்நிலைகளின் முக்கியத்துவத்தைச் சொல்வது, இயற்கை விவசாயத்தின் நன்மைகளை விளக்கிச் சொல்வது போன்ற விஷயங்களை மையமாகக் கொண்டு செயல்பட்டார்.  

ஈரோடு மாவட்டத்தை மையமாகக் கொண்டு நாடு முழுக்க சுற்றிச் சுழன்று வந்தவரை, 'சுனாமி’ வந்து நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்றது.    

வேம்பாழ்வார்...!

'வேம்பு எங்களுடையது’ என்று காப்புரிமைச் சட்டத்தைக் காட்டி வெளிநாட்டினர் சொந்தம் கொண்டாடிய நேரம் அது. வேம்பு என்பது இந்திய மண்ணுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்க, 2000-ம் ஆண்டு, மே மாதம் 9,10 தேதிகளில் ஜெர்மனி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த இந்தியக் குழு ஒன்று சென்றது. அதில் நம்மாழ்வாரும் இடம்பெற்றார். வெற்றிகரமாக காப்புரிமையை மீட்டுவந்த பிறகு, வெற்றி விழாக் கூட்டம்  செங்கல்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் எளிய முறையில் நடந்தது.

''கோர்ட்டுக்கு வெளியே பல நாட்டுக்காரனும் நின்னுக்கிட்டு இருக்கான். நான் வேப்பங்குச்சியை எடுத்து வாயில் வெச்சு நல்லா கடிச்சேன். ஒருத்தன், 'என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?’னு கேட்டான். 'பிரஷ் பண்றேன்’னேன். 'எது பிரஷ்?’னு கேட்டான். வாயில மென்னுக்கிட்டிருந்த வேப்பங்குச்சியைக் காட்டினேன். 'பேஸ்ட் எங்கே?’னு கேட்டான். 'குச்சிக்குள்ளயே இருக்குற கசப்புச் சாறுதான் பேஸ்ட்’னு சொன்னேன். கடைசியா, என்னோட பிரஷை தூக்கிப் போட்டா, நுண்ணுயிரிங்க தின்னுட்டு மண்ணை வளமாக்கும், உன்னோட பிளாஸ்டிக் பிரஷை தூக்கிப் போட்டா, மண்ணுல இருக்கிற நுண்ணுயிரிகளைக் கொல்லும்’னு சொன்னேன் எல்லாரும் பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டாங்க. கோர்ட்டுக்குள்ள, 'எங்க ஊர் விவசாயிங்க வேப்பந்தழையையும், மாட்டுக் கோமியத்தையும் கலந்து, பூச்சி விரட்டியா தெளிக்கிறான். உங்களுக்கு, 'மேரி மாதா’ மாதிரி எங்களுக்கு, 'மாரியாத்தா பொம்பளை’ தெய்வம். அவளுக்கு வேப்ப இலையிலதான் மாலை போடுவோம்’னு சொல்லி சங்கப்பாடல் தொடங்கி, கூழ் வார்க்கும்போது பாடும் கும்மிப்பாட்டு வரை எல்லாத்தையும் பாடிக்காட்டினேன்!’ என்று அப்படியே மேடையில் நடித்தும் காட்டினார் நம்மாழ்வார். இந்த நிகழ்வில்தான் 'வேம்பாழ்வார்’ என்ற பட்டம் நம்மாழ்வாருக்கு சூட்டப்பட்டது.

விவசாய குரு...!

நம்மாழ்வாரின் வெளிநாட்டுப் பயணங்களில் முக்கியமானது மலேசியப் பயணம். இதைப் பற்றி பேசும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் இத்தீரிஸ், ''2002-ம் ஆண்டு தமிழகம் வந்தபோது, நம்மாழ்வாரைச் சந்தித்தேன். வாழ்வியல் பல்கலைக்கழகம் தொடக்க விழா விலும் என்னைக் கலந்து கொள்ள வைத்து பெருமைப்படுத்தினார். இவரது எழுத்துக்களை நிறைய படித்திருந்தாலும், இந்த சமயத்தில்தான், பேச்சாற்றலும், இயற்கை விவசாயத்தில் அவருக்குள்ள ஆற்றலும், என்னை மிகவும் கவர்ந்தது. இதன் காரணமாக மலேசியாவுக்கு அழைத்தேன். 2003-ம் ஆண்டு ஏப்ரலில் வருகை தந்தார். வெகுகாலமாகவே விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டுக்கு எதிராக எங்கள் அமைப்பு பிரசாரம் மேற்கொண்டிருந்தாலும், நம்மாழ்வார் மூலமாகவே இயற்கை விவசாயம் பற்றிய முழுமையான புரிதல் கிட்டியது மலேசிய விவசாயிகளுக்கு'' என்கிறார்.

விவசாயப் பண்ணைகளே வேளாண் கல்லூரிகள்!

பினாங்கு பயனீட்டர் சங்கத்தின் கல்வி அதி காரி என்.சுப்பா ராவ் பேசும்போது, ''நம்மாழ்வாரின் வருகையைத் தொடர்ந்து இங்கே இயற்கை விவசாயம் வேகமெடுத்துவிட்டது. கடந்த 11 ஆண்டுகளில், மலேசிய விவசாயிகள் தமிழகத்தில் இயற்கை விவசாயப் பயிற்சிகளை பல தடவை எடுத்துள்ளனர். தமிழகத்திலிருந்தும் நிபுணர்களை வரவழைத்து, பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர்.

காஞ்சிபுரத்திலிருந்து, சீனாவுக்குச் சென்ற போதிதர்மாவை, ஜென் குருவாக ஏற்றுக் கொண்டது சீனா என்பது வரலாறு. இதேபோல இன்றைக்கு சீன விவசாயிகள் பலரும்கூட அய்யாவை, இயற்கை விவசாயத்தின் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். சீன மொழியில்  'சீபூ’ (குரு) என்றே அவரை அழைக்கிறார்கள். அவருடைய மறைவுக்குப் பிறகு, அவரின் புகைப்படத்தை வணங்கி வருகிறார்கள்''  என்று உணர்வுப் பூர்வமாகச் சொல்கிறார்.

-  பேசுவார்கள்

சந்திப்பு: பொன். செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு