Published:Updated:

செவந்தம்பட்டி கத்தரி...

இருமடிப்பாத்தியில் செழிப்பான வளர்ச்சி!மகசூல்காசி. வேம்பையன், படங்கள்: தே.சிலம்பரசன்

'லாபம்’ மட்டுமே நோக்கம் எனக்கொண்டு, வீரிய ஒட்டுவிதைகளையும், ரசாயன உரங்களையும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த விவசாயிகள் பலரும்... நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த வழியில் இயற்கை விவசாயம், இருமடிப்பாத்தி, பாரம்பரிய விதைகள் என மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். குறைவான செலவில் நல்ல வருமானம் எடுப்பதோடு, மகிழ்ச்சியான வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ஒருவராக குறைந்த பரப்பு நிலத்தில் 'செவந்தம்பட்டி கத்திரி’யை சாகுபடி செய்து, நல்ல வருமானம் எடுத்துக் கொண்டிருக்கிறார், விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன்.

செவந்தம்பட்டி கத்தரி...

கைவிட்ட காவலர் பணி... கைகொடுத்த விவசாயம்!

கத்திரிக்காய் அறுவடைப் பணியில் இருந்த பாண்டியனைச் சந்தித்தோம். 'லேப் டெக்னீசியன் படிப்பு முடிச்சிட்டு, அது சம்பந்தமா மூணு வருஷம் வேலை பார்த்தேன். அதுல போதுமான திருப்தி இல்ல. அதுக்கப்பறம் போலீஸ் வேலைக்குப் போலாம்னு கடுமையான பயிற்சி எடுத்து, டெஸ்ட்ல செலக்ட் ஆகிட்டேன். ஆனா, நான் விவசாயத்துக்குத்தான் வரணும்னு இருந்திருக்கும் போல. அந்த சமயத்துல ஆட்சி மாறுனதால ரீ செலக்ஷன் வெச்சாங்க. அதுல எனக்கு போலீஸ் வேலை கிடைக்கல. சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அதனால விவசாயத்துக்கே போயிடலாம்னு முடிவு பண்ணி, தச்சூர் கிராமத்துல இருந்த தாத்தாவோட ரெண்டு ஏக்கர் நிலத்துல நெல், சூரியகாந்தி, காரா மணினு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். கல்யாணத்துக்கப்பறம் இந்த நரசிங்கனூருக்கு குடி வந்துட்டோம். இங்கயே ரெண்டரை ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் பாத்துட்டு இருக்கேன்' என்று முன்னுரை கொடுத்த பாண்டியன், தொடர்ந்தார்.

பாதை காட்டிய பசுமை விகடன்!

''முன்னாடி, வழக்கமான முறையில உரம், பூச்சிக்கொல்லி தெளிச்சு... நெல், மணிலா (நிலக்கடலை), எள், உளுந்துனு சாகுபடி செய்தேன். பால் வியாபாரத்துக்காக 10 கலப்பின மாடுகள் வாங்கி வளர்த்துட்டு இருந்தேன். ஆனா, மாடுகளைப் பராமரிக்க முடியாம விற்பனை செய்துட்டேன். சிலசமயங்கள்ல பூச்சிக்கொல்லிகள் தெளிக்கிறப்போ அது ஒத்துக்காம உடம்புல சில பிரச்னைகள் வந்துச்சு. ஆனா, அதைத் தவிர்க்க முடியலை. மாற்று வழிகளும் தெரியல. இந்த சமயத்துலதான், என்னோட மச்சான் மூலமா, 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுல பல இயற்கைத் தொழில் நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதை கொஞ்ச கொஞ்சமா செய்து பாத்தப்போ, பலன் கொடுத்துச்சு. அதனால எனக்கு இயற்கை விவசாயம் மேல ஆர்வம் வந்துச்சு.

செவந்தம்பட்டி கத்தரி...

2012-ம் வருஷம் நம்மாழ்வார் ஐயாவோட களப்பயிற்சியில கலந்துக்கிட்டேன். அதுல அவர் சொல்லிக் கொடுத்த இருமடிப்பாத்தித் தொழில்நுட்பமும், இடுபொருள் தொழில் நுட்பங்களும் நம்பிக்கைக் கொடுத்துச்சு. ''நம்ம வாழ்க்கையும், வெள்ளாமையும் சந்தோஷமா இருக்குறதுக்கு தற்சார்புப் பண்ணையம் செய்யணும்’னு ஐயா சொன்னார். அதை என்னோட வாழ்க்கையில கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டேன். எங்களுக்குத் தேவையான காய்கறி, அரிசி, உளுந்துனு முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும்  நாங்களே உற்பத்தி செய்துக்குறதால, குடும்பச்செலவு கணிசமா குறைஞ்சிடுச்சு. மூணு வருஷமா ஆஸ்பத்திரி பக்கம் போற வேலையே இல்லை' என்று சொல்லி, ஆச்சர்யம் கூட்டிய பாண்டியன், தொடர்ந்தார்.

பனை மட்டை மூடாக்கு!

'இந்த ரெண்டரை ஏக்கர் நிலத்துல... வீடு, வண்டிப்பாதைனு 15 சென்ட் நிலத்தை ஒதுக்கிட்டேன். ஒரு ஏக்கர் 65 சென்ட்ல கிச்சிலி நெல் இருக்கு. 50 சென்ட்ல உளுந்து, பச்சைப்பயறு இருக்கு. மீதியிருக்கிற 20 சென்ட் நிலத்துல இருமடிப்பாத்தி போட்டு வீட்டுத்தேவைக்காக வெண்டை, கத்திரி, முள்ளங்கி, மிளகாய்ச் செடிகள் இருக்கு. சந்தையில கிடைச்ச நிறைய கத்திரிச்செடிகளையும் நட்டுட்டதால பல ரக கத்திரிக்காய்கள் காய்க்குது. நண்பர் ஒருத்தர் நல்லா பழுத்த செவந்தம்பட்டிக் கத்திரியைக் கொடுத்து 'கடலூர் மாவட்டம் செவந்தம்பட்டி பகுதிதான் இந்த கத்திரி ரகத்துக்கு பூர்வீகம். இது நல்ல விளைச்சலைக் கொடுக்கும். இதோட சுவை அருமையா இருக்கும்’னு சொன்னாரு.

நண்பர் கொடுத்த பத்து கத்திரிப் பழத்துல இருந்து விதை எடுத்து, அதையும் இருமடிப்பாத்தியில நடவு செய்தேன். செடிகள் நல்லா வளர்ந்ததோட காய்களும் திரட்சியா இருந்துச்சு. இருமடிப்பாத்தியில இலைதழைகளை மூடாக்கா போடுறப்போ, கொஞ்சநாள்லயே களைகள் வந்துடும். ஒருசமயம் பக்கத்து வீட்டுக்காரர் கூரையைப் பிரிச்சப்போ நிறைய பனைமட்டை கிடைச்சுது. அதை மூடாக்கா போட்டப்போ களைகள் குறைவா இருந்துச்சு. அதோட அடிக்கடி தண்ணீர் கட்டுற வேலையும் குறைஞ்சுடுச்சு. அதனால பனை மட்டைகளைத்தான் மூடாக்கா பயன்படுத்துறேன். பெரியளவுல பராமரிப்பு இல்லாமலே ரெண்டு வருஷமா கத்திரிச்செடிகள் காய்ப்புல இருக்கு. வீட்டுத்தேவைக்குப் போக மீதத்தை விற்பனை செய்துட்டு இருக்கேன். அதுல ஒரு வருமானமும் கிடைக்குது'' என்ற பாண்டியனைத் தொடர்ந்தார், அவருடைய மனைவி மணிமேகலை.

'இயற்கை விவசாயம், இயற்கைச் சூழலோடும் வாழ்ற வாழ்க்கை சந்தோஷமா இருக்கு. எங்க வீட்டுல கேஸ், மண்ணெண்ணெய் அடுப்பு எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க விறகு அடுப்புதான். அதோட எங்க நிலத்துல விளையுற நெல், மணிலா, உளுந்து, கேழ்வரகு, தினைனு எல்லா பொருட்களையும் மதிப்புக்கூட்டி நேரடியாத்தான் விற்பனை செய்றோம். வீட்டுத்தேவைக்குப் போக, மீதம் இருக்குற கத்திரிக்காயை கிலோ 30 ரூபாய்னு நேரடியா விற்பனை செய்றோம். எல்லாத்தையுமே நேரடியா விற்பனை செய்றதால கூடுதல் லாபம் கிடைக்குது. எங்க நண்பர்களுக்கு விஷமில்லாத பொருட்களை விளைவிச்சுக் கொடுக்கிற திருப்தியும் இருக்கு' என்று சொல்ல, அதை ஆமோதித்த பாண்டியன் மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

இருமடிப்பாத்தியில் செவந்தம்பட்டி கத்திரி சாகுபடி செய்யும் முறை பற்றி பாண்டியன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

நடவுக்குத் தேர்ந்தெடுத்த நிலத்தில் களைகள் இல்லாத அளவுக்கு உழுது, நான்கடி அகலத்தில், தேவையான நீளத்தில் இருமடிப்பாத்தி அமைக்க வேண்டும். அதாவது, நிலத்தில் முக்கால் அடி ஆழத்துக்கு மேல் மண்ணை வெட்டி எடுத்துவிடவேண்டும். பிறகு இந்தக் குழியில் இலைதழைகள், எரு ஆகியவற்றைப் போட்டு, அமுதக்கரைசலைத் தெளித்தபிறகு, வெட்டி எடுத்து வைத்திருக்கும் மேல் மண் கொண்டு மூட வேண்டும். இதுதான் இருமடிப்பாத்தி. இரண்டு பாத்திகளுக்கு இடையில் ஓரடி இடைவெளியை நடைபாதைக்காக விட வேண்டும்.

செவந்தம்பட்டி கத்தரி...

இப்படி நான்கைந்து பாத்திகள் போடும்போது ஒரு குழியில் எடுக்கும் மண்ணை, அப்படியே அடுத்த குழியில் நிரப்பிக் கொண்டே வந்தால் வேலை குறையும். இல்லாவிட்டால் ஓரிடத்தில் குவித்து, அதை மீண்டும் எடுத்துப் போட வேண்டியிருக்கும். பாத்திகளின் ஓரத்திலிருந்து உள்பக்கமாக அரையடிவிட்டு, அதில் 3 அடி இடைவெளியில் ஒரு மாத வயது கொண்ட கத்திரிச் செடிகளை நடவு செய்து, செடிகளைச் சுற்றி மூடாக்குப் போடவேண்டும். மண்ணின் ஈரப்பதத்துக்கு ஏற்ப பாசனம் செய்தால் போதுமானது.

நடவு செய்ததில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் அமுதக்கரைசல், ஜீவாமிர்தக் கரைசல் இரண்டையும் மாற்றி மாற்றி பாசனத் தண்ணீரில் கலந்து வரவேண்டும். ஒரு கிலோ வேப்பங்கொட்டை, 100 கிராம் பூண்டு ஆகியவற்றை ஒன்றாக இடித்து, 2 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊறவைத்த கரைசலை டேங்குக்கு (10 லிட்டர்) அரை லிட்டர் வீதம் கலந்து, மாதம் ஒரு முறை தெளித்து வரவேண்டும். இது, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும்.

40 முதல் 50 நாட்களில் பூவெடுத்து, 70-ம் நாளில் இருந்து அறுவடைக்கு வந்துவிடும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை காய் பறிக்கலாம். பராமரிப்பைப் பொருத்து 2 ஆண்டுகள் வரை கத்திரிச் செடி காய்க்கும். இருமடிப்பாத்தி என்பதால் செடிகள் பழுதான இடங்களில் மட்டும் புதிய செடிகளை நடவு செய்து கொண்டே வந்தால், தொடர்ச்சியாகக் காய்ப்பு இருக்கும்.

சுவையான செவந்தம்பட்டி கத்திரி!

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் செவந்தம்பட்டி கத்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரகம், பி.எஸ்.ஆர்-2 (பாலூர்-2) என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகிறது. கத்திரிக்காய் சாப்பிடுவதற்கு மென்மையாகவும், சுவையாகவும், மணமாகவும் இருக்கும். சாம்பார், காரக்குழம்பு, எண்ணெய் கத்திரி, கத்திரிப் பொரியல், வத்தல் என பலவிதமான பதார்த்தங்களைச் செய்யலாம். வயது 150 முதல் 160 நாட்கள். இதன் பராமரிப்பைப் பொறுத்து நீண்ட நாட்களுக்கும் காய்க்கும். எல்லா பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.

தொடர்புக்கு,

பாண்டியன், செல்போன்: 9500627289

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு