Published:Updated:

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள்!போராட்டம்கு.ராமகிருஷ்ணன், ஓவியம்: செந்தில், படம்: கே.குணசீலன்

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள்!போராட்டம்கு.ராமகிருஷ்ணன், ஓவியம்: செந்தில், படம்: கே.குணசீலன்

Published:Updated:

மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த விபரீதங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி வருகிறார், 'மே 17 இயக்கம்’ எனும் அமைப்பைச் சேர்ந்த அருண்குமார். இவர் சொல்லும் தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம். நீங்களும் கேளுங்களேன்...

''அமெரிக்காவில் தியோ கல்போர்ன் என்பவரின் தலைமையிலான ஆய்வுக்குழு அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. மீத்தேன் கிணற்றின் கழிவுநீரில் உள்ள வேதிப்பொருட்களில் 37% ஆவியாகக் கூடியவை. இவற்றில் 81% வேதிப்பொருட்கள் மூளை மற்றும் நரம்புகளைத் தாக்கக் கூடியவை. 71% வேதிப்பொருட்கள் இதயத்தையும், 68 % வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தையும் தாக்கக்கூடியவை என்கிறது, அந்த ஆய்வறிக்கை. அவர்களின் ஆய்வுப்படி, மீத்தேன் எடுப்பதற்கான கரைசலில் 12 வகையான உடல் பாதிப்புகளை உருவாக்கக்கூடிய, 353 வேதிப்பொருள்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வேதிப்பொருட்கள் மூளை, நரம்பு, ஈரல், சிறுநீரகம், நுரையீரல், நாளமில்லா சுரப்பிகள், தோல், கண், இதயத் தமனி, ரத்தம் உள்ளிட்டவைகளில் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். புற்றுநோய், மரபணு மாற்றுக் கோளாறுகள், தொடுவுணர்வு அழிதல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதை ஆதராங்களோடு வெளியிட்டார்கள்.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2005-ம் ஆண்டு கொலராடோ மாகாணத்தில் வசித்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேற முடியாத அளவுக்கு மோசமான நாற்றமுடைய வாயு எல்லா இடங்களிலும் பரவியது. காரணம், அங்கிருந்த நான்கு மீத்தேன் கிணறுகளில் 'ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங்’ செய்யப்பட்டு, கழிவுநீர் வெளியேற்றப்பட்டதுதான். மார்ச் 2011-ம் ஆண்டு பென்சில்வேனியாவில் மீத்தேன் கழிவுநீர்க் குட்டை ஒன்று தீப்பிடித்து எரிந்து, சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அடர்ந்த கரும்புகையும் துர்நாற்றமும் வீசியது. டெக்சாஸ் பகுதியில் மீத்தேன் கிணறுகள் அமைந்த இடங்களில் காற்றில் பென்சீன் அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

10 மீத்தேன் கிணறுகளின் கழிவுநீரிலிருந்து 32 ஆயிரத்து 500 கிலோ மெத்தனால் வெளியேறி காற்றில் கலக்கிறது. இந்தக் காற்றைச் சுவாசித்தால் பார்வை இழப்பு, இரைப்பைக் கோளாறுகள், தூக்கமின்மை, தலைவலி, மயக்கம், குமட்டல் ஏற்படும். பென்சில்வேனியாவில் உள்ள மீத்தேன் கிணறுகளில் இருந்து 2011-ம் ஆண்டு சுமார் 20 மில்லியன் கேலன் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. விஞ்ஞான ஆய்வுகளின்படி இக்கழிவுநீரில் உட்செலுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் மட்டுமின்றி, நிலத்துக்கு அடியில் இயற்கையாக இருக்கக்கூடிய பல்வேறு தனிமங்களும், தாது உப்புக்களும், ஆபத்தான கதிரியக்கத்தை உண்டாக்கக்கூடிய தனிமங்களும், ஆவியாகக் கூடிய பிற ஆபத்தான வேதிப்பொருட்களும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைச் சுத்திகரிப்பதும், மறுசுழற்சி செய்வதும் அத்தனை எளிதான காரியமல்ல. செலவும் அதிகமாகும் என்கிறது, அந்த ஆய்வு.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

அங்கு மீத்தேன் கிணறுகளின் கழிவுநீர்க் குட்டைகளில் இருந்து வெளியேறிய ரசாயனக் கழிவுகள் கலந்ததால், ஏராளமான நீரோடைகள் நஞ்சாகிக் கிடக்கின்றன. 2011-ம் ஆண்டு மே மாதம் 'ரேஞ்ச் ரிசோர்ஸ்’ என்ற மீத்தேன் கிணற்றுக்கு கொண்டுவரப்பட்ட ரசாயனக் கரைசல், குழாய்க் கசிவினால் வெளியேறி, அருகில் இருந்த ஆற்றில் கலந்து விஷமானது. இதனால் ஏராளமான உயிரினங்கள் இறந்தன. கலிபோர்னியாவில் 'கபாட்’ என்ற எரிவாயு நிறுவனம், 'ஹெயிட்மென்’ என்ற எரிவாயுக் கிணறு அமைந்துள்ள இடத்தில் 30 ஆயிரத்து 283 லிட்டர் நீர்மப்பசை போன்ற 'எல்.ஜி.சி 35’ என்ற வேதிப்பொருளைக் கசியவிட்டது. இது நேரடியாக 'ஸ்டீவன்ஸ்’ ஆற்றில் கலந்து, தண்ணீரை நஞ்சாக்கியது.

வாஷிங்டன் மாகாணத்தில் மிக முக்கியமான நீர்ப்பிடிப்புப் பகுதியாக 'டங்கிள்’ என்ற நீரோடை உள்ளது. 'அட்லஸ் ரீசோர்ஸ்’ என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு கிணற்றின் நீராவிக் குட்டையில் இருந்து வெளியேறிய ரசாயனக்கழிவுகளால் அந்த நீரோடை சீரழிந்து போனது. கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு எரிவாயுக் கிணற்றின் மேல் பகுதி உடைந்து, ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங்கில் பயன்படுத்தப்படும் வீரியமிக்க நீர்மப்பொருள் அதிக அழுத்தத்தில் பீய்ச்சி அடித்ததால், அங்குள்ள நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்குள்ள நிலங்களில் அரை அங்குல உயரத்துக்கு இந்த ரசாயனக்கழிவு படிந்தது. ஓஹையோ என்கிற பகுதியில் மீத்தேன் கிணறு அமைக்கப்பட்ட பிறகு, ஒரே ஆண்டில் 109 பூகம்பங்கள் ஏற்பட்டன.

இப்படியாக அபாயப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆஸ்திரேலியா, அயர் லாந்து, போலந்து, கனடா ஆகிய நாடுகளிலும் மீத்தேன் திட்டத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அங்கும் மீத்தேனுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பிரான்ஸ், சுவிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீத்தேன் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. ருமேனியா, ஜெர்மனி, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் இது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது'' என்று அதிர்ச்சியைக் கூட்டும் அருண்குமார், ''காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்க 500 அடி முதல்  1,650 அடி ஆழம் வரை மட்டும்தான் பூமியைத் தோண்டுவார்கள் என்ற தவறான தகவல்கள் பரவிக் கிடக்கிறது. இந்த ஆழத்திலேயே நிலக்கரி, மீத்தேன் கிடைக்கும் என்றால், விவசாயிகள் போர்வெல் போடும்போது இவை கிடைத்திருக்க வேண்டுமல்லவா. உண்மையான நிலவரம் நம் நெஞ்சைப் பதற வைக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் அடியிலிருந்து 10 ஆயிரம் அடிக்கும் அதிகமான ஆழம் வரை தோண்டியுள்ளார்கள். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன' என்கிறார்.

அரசாங்கங்கள் யோசிக்க வேண்டும்!

காலி செய்யப்பட்டதா 'தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் அலுவலகம்’?

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க அனுமதி பெற்றுள்ள தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அலுவலகம், தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, செயல்பட்டு வந்தது. திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் அனல் பறக்கத் தொடங்கியதால், இந்நிறுவனத்தின் பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, கடந்த பல மாதங்களாகப் பூட்டியே கிடந்தது. இந்நிலையில், டிசம்பர் 15-ம் தேதி இந்த அலுவலகம் முழுமையாக காலி செய்யப்பட்டு இங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் மகிழ்ச்சி கலந்த பரபரப்பு பரவியது. மீத்தேன் எடுப்பதற்காக தமிழக அரசுடன் இந்நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைகிறது. 'இதனை தமிழக அரசு புதுப்பிக்கக்கூடாது’ என போராட்டங்கள் வலுத்து வருகிறது. மேலும் இந்த அலுவலகத்தின் மீது மக்கள் ஏதேனும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பதற்றமான சூழல் உருவானதால்தான் இது காலி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

இங்கிருந்த பொருட்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது நாம் அங்கு சென்றோம். 'புகைப்படங்கள் எடுக்கக் கூடாது’ என நம்மைத் தடுத்தார் அங்கிருந்த ஒருவர். மலையாளம் கலந்த தமிழில் பேசிய அந்த நபர், 'நாங்க ஓண்ணும் பயந்துகிட்டெல்லாம் காலி செய்யலை. மீத்தேன் எடுக்குறதை, அரசு தற்காலிகமா நிறுத்தி வெச்சிருக்கு. இவ்வளவு பெரிய வாடகைக் கட்டடம் இப்போதைக்குத் தேவையில்லைனுதான் இப்ப காலி செய்றோம். இதைத் தவிர வேற எதையும் என்னால் சொல்ல முடியாது' என்ற அந்த நபர், தன்னுடைய பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களைச் சொல்ல மறுத்துவிட்டார்.

சரக்கு வாகனத்தில் இருந்த தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, பொருட்கள் திருச்சிக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தார்கள். இந்த அலுவலகம் திருச்சிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள்.

மீத்தேன் மோடிகள்!

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்க அனுமதி பெற்றுள்ள தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம், குஜராத்தைச் சேர்ந்த பிரசாந்த் மோடிக்குச் சொந்தமானது. இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராம். இதனால் மீத்தேன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்படும் என்கிறார்கள், மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள்.

இதை உறுதிப்படுத்தும்விதமாக, 'நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்துவோம்' என நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார், மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி.

தாரை வார்க்கப்பட்டுள்ள 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர்!

'பெங்கால் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன், பெங்கால் எனர்ஜி, ஜூபிலியன்ட், ஜி.எஸ்.பி., சி.பி.சி.எல்., கெயில் ஆகிய நிறுவனங்களுக்கு காவிரிப் படுகையில் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதில் குஜராத் அரசு பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கும் பங்குள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே மிக விரைவில் காவிரிப் படுகையில் மீத்தேன் மற்றும் நிலக்கரி எடுப்பதற்கான அபாயம் காத்திருக்கிறது' என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிடுகிறது மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு.

- அடுத்த இதழில் முடியும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism