Published:Updated:

மஞ்சள் மகிமை!

பாரம்பரியம்ஜி.பழனிச்சாமி, படங்கள்: அ.நவீன்ராஜ்

பொங்கல் படையலில் கரும்புக்கு அடுத்த முக்கிய பொருள், மஞ்சள் கிழங்கு. பொங்கல் தவிர முக்கிய வழிபாடுகளுக்கும் மங்கலகரமான மஞ்சள் கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் விளைந்தாலும், மஞ்சளுக்குப் பெயர் பெற்ற பகுதியாக இருப்பது... ஈரோடு மாவட்டம்தான்! பொங்கல் சிறப்பிதழுக்காக சிவகிரியை அடுத்துள்ள தோற்காதான்வலசு கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எஸ்.ஈஸ்வரமூர்த்தியைச் சந்தித்தோம்.

மஞ்சள் மகிமை!

 'எனக்கு வயசு 65. பரம்பரை விவசாயக் குடும்பம். எல்.பி.பி. பாசனத்துல, 30 ஏக்கர் விவசாயம் நிலம் இருக்கு. கரும்பும், மஞ்சளும் கொழிக்கிற வளமான நிலம். சென்னை, கிறித்தவக் கல்லூரியில எம்.ஏ. பொருளாதாரம் படிச்சு, 1968-ம் வருஷம் பட்டம் வாங்கினேன். வாங்கின கையோடு மனம் உவந்து ஏத்துகிட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். 40 வருஷமா தவமா செய்துக்கிட்டிருக்கேன்.

எங்க தோட்டத்துல பட்டம் தவறாம மஞ்சள் இருக்கும். வைகாசிப் பட்டத்துல நடவு செஞ்சு தை மாசத்துல அறுவடை செய்வோம். பொங்கல் சமயத்துல மஞ்சள் 'தகதக’னு வெளைஞ்சு கிடக்கும். அதை அப்படியே கொத்தோடு பிடுங்கி, பொட்டு வெச்சு பூ சுத்துன பொங்கப்பானையோடு சேர்த்துக் கட்டிடுவோம். மூணு நாள் கொண்டாடுற பொங்கல் பண்டிகையில் முதல் நாள் வாசல் பொங்கல் வைப்பாங்க. அதுல சூரியப்பொங்கல், குலதெய்வப் பொங்கல், முன்னோர் பொங்கல்னு மூணு பொங்கல் பானைய பொங்க விடுவாங்க. ரெண்டாம் நாள் தொழுவத்துல வைக்கிற மாட்டுப்பொங்கல் பானைகளிலும், மூணாம் நாள் வைக்கிற காணும் பொங்கல் பானைகளிலும் மஞ்சள் கொத்துக் கட்டுவோம்'' என்று மஞ்சள் மகிமையை முதலில் பேசிய ஈஸ்வரமூர்த்தி, தொடர்ந்தார்.

''இந்த வருஷம் மூணு ஏக்கர்ல மஞ்சள் நட்டிருக்கேன். இப்ப பாதி கிழங்கு ஊறிடுச்சு. தை கடைசியில முழுசா வளந்திடும். அந்த சமயத்துல கிழங்கு தோண்டலாம். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசை இருக்கு. இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த நேரங்காலம் தோதா இல்லை.  அதனால 1 ஏக்கர்ல மட்டும் இயற்கை முறையில செய்றேன். அடியுரமா தொழுவுரம், இலைப்புள்ளி நோய்க்கு நீம் ஆயில், பாசனத்துல பஞ்சகவ்யா, வேர் அழுகலுக்கு வேப்பம் பிண்ணாக்குனு இயற்கையா செய்றேன்.

மஞ்சள் மகிமை!

50 வருஷத்துக்கு முந்தியெல்லாம் முழுக்க முழுக்க பாரம்பரிய முறையிலதான் மஞ்சள் வெளைஞ்சுது. ஈரோட்டின் பெருமை சொல்ற விரலி ரகம்தான் பிரதான வெள்ளாமை. ஊர் நாட்ல இருக்கிற குப்பைக் குழி மண்ணையெல்லாம் அள்ளி மாட்டுவண்டியில போட்டு நிரப்பிக் கொண்டு வந்து,  குவியல் குவியலா தோட்டத்துல கொட்டி வைப்போம். காய்கறிக்கழிவு, கோழி எரு, அடுப்புச் சாம்பல்னு சேர்ந்து ஊட்டமுள்ள உரமா நின்னு வெள்ளாமைக்கு உசிரு கொடுக்கும். வருஷம் ஒரு தரம் ஊர்ல இருக்கிற எல்லார் வீட்டு புறக்கடை குப்பைக் குழியும் சுத்தமாயிடும். இது சும்மாவே கிடைச்சிது. அதுல வெளைஞ்ச விரலி மஞ்சள் கிழங்கைப் பிடுங்கினாலே கமகமனு மணக்கும். வேர் மண்ணை உதிர்த்துட்டு பொங்கல் பானையில கட்டி வெச்சா, களத்துமேடு முச்சூடும் மஞ்சள் வாசம்தான். அதுதான் உண்மையான பொங்கல்.

இன்னிக்கும் கிராம வீடுகளில் குப்பைக் குழி இருக்கு. ஆனா, அதுல முழுக்க முழுக்க கண்ணாடிச் சில்லு, பிளாஸ்டிக் கழிவு, எலக்ட்ரானிக் துகள்னு ஆயுளுக்கும் மட்காத கழிவுகளாத்தான் இருக்கு. அதனால, பெரும்பாலான விவசாயிங்க குப்பைக் குழி மண்ணைப் பயன்படுத்துறதில்லை. அதில்லாம எல்லோர் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறதால சாம்பலும் கிடைக்கிறதில்லை. ரசாயனத்தைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கு' என்று வேதனை பொங்கச் சொன்ன ஈஸ்வரமூர்த்தி,

'பொங்கல் வாரங்கள்ல மஞ்சள் கிழங் குக்கு ஏக கிராக்கி வந்துடும். மஞ்சள் விளையாத மாவட்டங்கள்ல உள்ள மக்களின் தேவையைப் பூர்த்தி செய்றதுக்கு வெளியூரு வியாபாரிங்க ஈரோடு மாவட்டத்துல இருந்து லாரி லாரியா கொத்து மஞ்சள் கிழங்குகளை வாங்கிட்டுப்போறாங்க. சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மாதிரியான மாநகர மார்க்கெட்டுகளில் பொங்கல் நாட்கள்ல மஞ்சள் கிழங்கு வியாபாரம் சக்கை போடு போடும். இந்த மாதிரி சில விஷயங்கள்ல நம்ம பாரம்பரியத்தை மக்கள் மறக்காம இருக்காங்கங்கிறது ஆறுதலான விஷயம்' என்று தானும் ஆறுதல்பட்டுக் கொண்டார்.

தொடர்புக்கு,

எஸ்.ஈஸ்வரமூர்த்தி, செல்போன்: 9442843640

அடுத்த கட்டுரைக்கு