Published:Updated:

மூலிகை வனம்! வீட்டுக்கொரு வைத்தியர்...- 14

பொங்கல் காப்புக்கட்டு... மூலிகைக்கு மரியாதை!தீர்வுரா.கு.கனல் அரசு, படங்கள்: வீ.சக்திஅருணகிரி

மூலிகை வனம்! வீட்டுக்கொரு வைத்தியர்...- 14

பொங்கல் காப்புக்கட்டு... மூலிகைக்கு மரியாதை!தீர்வுரா.கு.கனல் அரசு, படங்கள்: வீ.சக்திஅருணகிரி

Published:Updated:

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

இது பொங்கல் பண்டிகைக் காலம். தமிழர்கள், அறுவடைத் திருநாள் கொண்டாடும் அற்புதத் தருணம். பண்டிகை என்பது கொண்டாட்டமாக மட்டுமே இருந்து விடக்கூடாது என நினைத்த முன்னோர்கள், சில சம்பிரதாயங்களைப் பழக்கப்படுத்தினார்கள். ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் மனித நல்வாழ்வுக்கான ஒரு செய்தி ஒளிந்தே இருக்கிறது. உதாரணமாக தை மாதத்தை வரவேற்கும் விதமாக, மார்கழி மாதத்தின் கடைசி நாளில், 'காப்புக்கட்டு’ என்ற பெயரில் சிறுபீளை, ஆவாரை, வேப்பிலை ஆகியவற்றை வீடுகளின் முற்றங்களில் கட்டி வைப்பார்கள். அதேபோல, மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளின் கழுத்தில் பிரண்டை, வேப்பிலை மாலைகளைக் கட்டி ஓட விடுவார்கள். இவை அனைத்தும் தற்போது வெறும் சடங்காக மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த சடங்குகளின் பின்னால் இருக்கிறது, அறிவுப்பூர்வமான, அறிவியல்பூர்வமான ஆரோக்கிய அணுகுமுறை. உதாரணமாக... பூரான், பூச்சி போன்ற விஷக்கடிகளில் இருந்து முதலுதவி பெற்றுக்கொள்ளவும்... உழுது, வண்டி இழுத்து கழுத்தில் வலியோடு இருக்கும் மாடுகளுக்கு வலியைக் குறைக்கவும்தான் மாடுகளுக்கு பிரண்டை மாலை அணிவித்தார்கள் ஆதித் தமிழர்கள்.

ஆக, பொங்கல் பண்டிகை கொண்டாடும் போது சம்பிரதாயமாகக் கொண்டாடாமல், நாம் பயன்படுத்தும் மூலிகைகளின் பயன்களை அறிந்தபடியும் இனி கொண்டாடுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுபீளை!

மூலிகை வனம்!  வீட்டுக்கொரு வைத்தியர்...- 14

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மானாவாரியாக விளைந்து கிடக்கும் சிறுபீளை சிறுநீர்க்கல்லை உடைக்கும் அருமருந்து. கடினமான பாறையை உடைக்கும் சிறு உளியைப் போன்றது இந்த அதி அற்புத மூலிகை. ஆண்டின் அத்தனை நாட்களிலும் இந்தச்செடி முளைத்தாலும், மார்கழி, தை ஆகிய பனிமாதங்களில் நன்கு செழிப்பாக வளரும். நகரம், கிராமம், சாலைகள், தரிசு நிலங்கள், வயல்கள் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த மூலிகைக்கு சிறுகண் பீளை, கண்பீளை, கற்பேதி எனப் பல பெயர்கள் இருக்கின்றன. சிறுநீர்க்கல்லை அகற்ற அறுவை சிகிச்சையையே அதிகம் பரிந்துரைக்கின்றனர், ஆங்கில மருத்துவர்கள். ஆனால்,  Aerva lanata என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த இந்த சின்னஞ்சிறிய செடியே போதும் என்கிறது சித்த மருத்துவம். இந்தக் கருத்தை விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக, தான் கலந்து கொள்ளும் களப்பயிற்சிகளில், 'அறுவை சிகிச்சை மூலிகை’ என்றே இதை அழைத்து வந்தார் நம்மாழ்வார்.

'நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை

பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்

பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை யாமிது கற்பேதி யறி’ என்கிறது பதார்த்த குணபாடம் (219).

சிறுநீரில் உள்ள மணிச்சத்தும், சில உயிரியற் பொருட்களும் தகுந்த விகிதத்தில் கலந்திருக்கும். இந்த விகிதம் சரியாக இருந்தால், அவை படிகங்களாகவோ, திடப் பொருளாகவோ சிறுநீர்த் தாரைகளில் படியாது. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் இந்த விகிதம் மாறும்போது, இவைகள் சிறு துகள்களாகப் படிகின்றன. இவையே நாளைடைவில் கற்களாக உருவாகின்றன. உணவுப்பொருட்களில் உண்டாகும் புரதச்சத்து சிதைப்புக்குப் பிறகு உண்டாகும் கழிவுப்பொருளான யூரிக் அமிலம், ரத்தத்தில் 6 மில்லி கிராம் அளவில் இருக்க வேண்டும். இந்த அளவைத் தாண்டும்போது, சிறுநீரில் கலந்து வரும் 'யூரிக் அமிலம்’ துகள்களாகப் படிவதுண்டு.

கல்லை உடைக்கும் கஷாயம்!

சிறுநீர்க்கல் பிரச்னையால் பாதிப்பு இருந்தால் கவலையே வேண்டாம். சிறுபீளை, சிறுநெருஞ்சில் செடிகளை வேரோடு பறித்து, பாத்திரத்தில் போட்டு நீரூற்றி சுண்ட காய்ச்சிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஐந்து டம்ளர் நீர் ஊற்றினால், அது ஒரு டம்ளராக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். இந்த ஒரு டம்ளர் நீரை தினமும் மூன்றுவேளை பகிர்ந்து அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தினாலே சிறுநீரில் கற்கள் உடைந்து வெளியேறுவதை கண்கூடாகப் பார்க்கலாம். 8 மில்லி மீட்டர் அளவுள்ள கற்களைக்கூட உடைத்து வெளியேற்றும் திறன் இந்த கஷாயத்துக்கு உண்டு'' என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

மூலிகை வனம்!  வீட்டுக்கொரு வைத்தியர்...- 14

பிரண்டை!

காடு, மேடுகளில் கொடியாகப் படர்ந்து கிடக்கும் பிரண்டையை நாம் பெரும்பாலும் கவனத்தில் கொள்வதே இல்லை. வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் பிரண்டையைத் புறந்தள்ளி... ஆங்கில மருந்துக்கு அடிமையாகக் கிடப்பதையே பெருமையாக நினைக்கிறோம். பிரண்டையில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்களான அமைரின், அமிரோன், சிட்ரோசிரால் மற்றும் வைட்டமின்சி ஆகியவை இருக்கின்றன. Cissus quadrangularis  என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த பிரண்டையில்... ஓலைப்பிரண்டை, உருண்டைப்பிரண்டை, சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப் பிரண்டை, நாப்பிரண்டை, முப்பிரண்டை ஆகிய வகைகள் இருந்தாலும், மூன்று பட்டைகளை உடைய முப்பிரண்டை அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது.

மெலிந்த உடல் வலுப்பெறும்!

கருக்கலைப்புக்கு பிரண்டையைப் பயன்படுத்தியுள்ளனர் தமிழர்கள். இதனால்தான் பிள்ளைகளை வெறுப்பில் திட்டும்போது, 'உன்னை பெத்ததுக்கு வயித்துல பிரண்டையைக் கட்டியிருக்கலாம்’ என்ற வசவு சொல் வழக்கத்தில் இருக்கிறது. 'என்ன சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே இருக்கிறதே’ என கவலைப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக மெலிந்துள்ள குழந்தைகள் உடல் வலுப்பெற்று பருமனாக வேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பு. இதற்கு சரியான தீர்வு, பிரண்டைத் துவையல். இளம் முப்பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாகச் செய்து வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இந்தத் துவையல், பசியின்மை, வாய்க்கசப்பு, வயிற்றுப் பொருமல், வாயுத் தொல்லை போன்றவற்றையும் சரியாக்கும்.

உடைந்த எலும்புகள் இணையும்!

எலும்பு சந்திப்புகளிலும், நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கி, முதுகு, கழுத்து வலி ஏற்படும். இந்த நீரானது, முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி, பின்பு பசைபோல முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி, முறுக்கிக் கொள்ளும். இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு இளம் முப்பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடிசெய்து, அதனுடன் சிறிது வெந்நீர் விட்டு பசைபோல கலந்து முதுகு, கழுத்துப் பகுதிகள் பற்றுப் போட்டால் முறுக்கிய பகுதிகள் இளகி, வலி குணமாகும். எலும்புமுறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டி, பிரண்டைத் துவையலைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குறைவதுடன், உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து வலுபெறும்'' என்கிறது, சித்த மருத்துவம்.

இயற்கை வழங்கியுள்ள இலவச நோய் நீக்கியான மூலிகைகளை அறிந்து ஆராதித்தால் நோயற்ற பெருவாழ்வு வாழலாம்.

நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்!

சிறுநீர்க்கல் பிரச்னைக்கு, சிறுபீளை மூலிகை பறித்து கஷாயம் செய்ய வாய்ப் பில்லாதவர்கள், சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் சிறுகண் பீளை சூரணம், நெருஞ்சில் குடிநீர் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

- வலம் வருவோம்...