Published:Updated:

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

காளான் வளர்ப்பு!காசி.வேம்பையன், அ.ஆமீனா பீவி, படங்கள்: தே.சிலம்பரசன்

மாதம்

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

75 ஆயிரம்...!

'சைவ உணவுப் பிரியர்களுக்கு, அசைவம் சாப்பிட்டது போன்ற உணர்வைக் கொடுக்கக்கூடியவை 'காளான்’ உணவுகள்தான். அதனால், காளான் வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் களத்தில் இறங்கிய பலரும் நஷ்டத்தில் கையைச் சுட்டுக்கொள்ளஞ் லாபகரமாக காளான் வளர்ப்பு செய்து, வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பண்ணையாளர்களைக்  காட்டி, தொடர்ச்சியாக காளான் வளர்ப்பில் என்னை ஈடுபட வைத்தது 'பசுமை விகடன்’தான், என உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சியுடன் பேசுகிறார், விழுப்புரம் மாவட்டம், கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகரன்.

பணியிலிருந்து பண்ணைக்கு!

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

ஒரு காலைவேளையில் காளான் அறுவடைப்பணியில் ஈடுபட்டிருந்த சேகரனைச் சந்தித்தோம். ''பி.எஸ்.சி இயற்பியல் படிச்சுட்டு, எங்களோட 20 ஏக்கர் நிலத்துல நெல், வாழை, கம்பு, கேழ்வரகுனு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். வாழைக்குப் போதுமான அளவுக்கு தண்ணி கொடுக்க முடியாத சூழல்ல, அதையெல்லாம் அழிச்சுட்டு, 3 ஏக்கர்ல தென்னை நட்டேன். அந்தச் சமயத்துல பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிங்க வந்து பட்டுப்புழு வளர்க்கச் சொன்னாங்க. தென்னைக்கு இடையில மல்பெரி நட்டு, பட்டுப்புழு வளர்ப்புல இறங்கினேன். ஆரம்பத்துல நல்ல லாபம் கிடைச்சாலும், போகப்போக நோய்த்தாக்குதல் அதிகரிச்சு நஷ்டம் அதிகமாச்சு. அதனால, பட்டுப்புழு வளர்ப்பை விட்டுட்டு, நண்பர் ஒருத்தர் சொன்னதைக் கேட்டு காளான் வளர்ப்புல இறங்கினேன். உற்பத்தி நல்லா இருந்தாலும், விற்பனை செய்ய கஷ்டமா இருந்துச்சு. அதனால அதையும் விட்டுட்டு சென்னையில ஒரு பெரிய ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்துட்டேன்.

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

அங்க எனக்கு 'ஸ்டோர் கீப்பர்’ வேலைங்கிறதால, ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு காய்கறியையும் எவ்வளவு கிலோ பயன்படுத்துறாங்க அப்படீங்கிற கணக்கெல்லாம் என்கிட்டதான் இருக்கும். தினமும் 50 கிலோ காளான் அழிவாச்சு. அப்போதான், காளானை மக்கள் விரும்பி சாப்பிடுற விஷயம் புரிஞ்சுது. அதனால, 'வேலையை விட்டுட்டு திரும்பவும் காளான் வளர்ப்புல இறங்கலாம்’னு முடிவு பண்ணிட்டேன். அடுத்து, ரெண்டு, மூணு காளான் பண்ணைகளைப் போய் பார்த்துட்டு வந்தேன். காட்டுப்பாக்கம் கே.வி.கேயில் பயிற்சியும் எடுத்துக்கிட்டேன்'' என்ற சேகரன், தொடர்ந்தார்.

''பிராய்லர் கோழிப் பண்ணை வெச்சிருந்த என்னோட தம்பி, கொஞ்சம் நஷ்டம் வரவும், கோழி வளர்ப்பை விட்டுட்டார். அந்தக் கொட்டகை சும்மாதான் இருந்துச்சு. அதை அப்படியே காளான் வளர்ப்புக்கு ஏற்ற முறையில மாத்திக்கிட்டு... சிப்பிக்காளான் வளர்க்க ஆரம்பிச்சேன் 15 ஆயிரம் ரூபாய் முதல் போட்டு 400 சதுர அடியில வளத்ததுல... தினமும் 5 கிலோ அளவுக்கு காளான் கிடைச்சது. அதை, 500 கிராம் அளவுல பாக்கெட் போட்டு கடைகளுக்குப் போட்டேன். ஆனா, சரியா விற்பனையாகல. காரணம் கேட்டப்போ... 'பலருக்கு காளான் சாப்பிட ஆசை இருக்கு. ஆனா, எப்படி சமைக்கிறதுனு தெரியலை’னு சொன்னாங்க. அதுக்குப் பிறகு புத்தகங்கள்லயும், 'வெப்சைட்’லயும் தேடி, காளான் சமையல் முறைகளையும், மருத்துவக் குணங்களையும் காளான் பாக்கெட்டுலேயே அச்சடிச்சுக் கொடுத்தேன். அதோட ரெண்டு, மூணு பேர் இருக்குற குடும்பத்துக்கு ஏத்த மாதிரி 200 கிராம் அளவுல பாக்கெட் போட்டேன். கடைகள்ல கொடுக்கிறது இல்லாம நேரடியாகவும் வீடுகள்ல விற்பனை செய்தேன். முதல்ல வாங்கத் தயங்கினவங்க போகப் போக வாங்கிச் சாப்பிட ஆரம்பிச்சாங்க. அதுக்கு பிறகு படிப்படியா காளான் உற்பத்தியை அதிகப்படுத்தினேன்.

விலை உயர்வுக்கு வழிகாட்டிய பசுமை விகடன்!

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

''எனக்கு 'ஜூனியர் விகடன்’ இதழ் படிக்குற பழக்கம் கடந்த 20 ஆண்டுகளாக இருக்கு. அதன் மூலமா 'பசுமை விகடன்’ புத்தகம் அறிமுகம் கிடைச்சது. முதல் இதழ்ல இருந்து தொடர்ச்சியா படிக்கிறேன்.  ஆரம்பத்துல இருந்து எனக்கு இருந்த பலவிதமான சந்தேகங்களுக்கு பசுமை விகடன் இதழ் தீனிப்போட்டது. காளான் வாளர்ப்புக்கு எந்த அளவு விற்பனை வாய்ப்புகள் இருக்குனு தெரியாததால, தொடர்ச்சியா காளான் வளர்ப்பு செய்யலாமாஞ் வேண்டாமாஞ்? மனசுக்குள்ள சின்ன அச்சம் இருந்துச்சு. அந்த அச்சத்தை பசுமை விகடன்ல வெளிவந்த ’காளான் வளர்ப்பு’ சார்ந்த கட்டுரைகள்தான் நீக்குச்சு. அது மட்டும் இல்லாம,  ஒரு கிலோ 90 ரூபாய்னு நான் விற்பனை செய்துக்கிட்டிருந்த காளானை கிலோ 140 ரூபாய், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்னு வழிகாட்டினது பசுமை விகடன்தான். இப்ப  ஒரு நாளைக்கு 25 கிலோ அளவுக்கு காளான் உற்பத்தி செய்து, கிலோ 150 ரூபாய்னு (மொத்த விலை) திண்டிவனம், பாண்டிச்சேரி, சென்னைக்குனு அனுப்பி வைக்கிறேன்.

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

படிப்படியாக விலையேற்றம்!

15 வருஷத்துக்கு முன்ன கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையான காளான், இன்னிக்கு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையாகுது. சின்ன அளவுல பாக்கெட் போடுறதால கடைக்காரங்களுக்குக் கையாளுற வேலை சுலபமா இருக்குது. என்னோட காளான் விற்பனை லாபகரமா இருக்குறதுக்கு காரணம், உற்பத்தியாளர், விற்பனையாளர், நுகர்வோர்னு மூணு பேருமே திருப்தி அடையுறதுதான்'' என்ற சேகரன், நிறைவாக,

தினசரி லாபம் 2,500 ரூபாய்!

''2 ஆயிரத்து 500 சதுர அடியில, 2 ஆயிரத்து 600 படுக்கைகள் மூலம் தினமும் சராசரியா 25 கிலோ அளவுக்கு காளான் உற்பத்தி செய்றேன். சராசரியா ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வீதம் 25 கிலோவுக்கு 3 ஆயிரத்து 750 ரூபாய் வருமானம் கிடைக்குது. உற்பத்திச் செலவு கிலோவுக்கு 50 ரூபாய் வீதம் 1,250 ரூபாய் போக... தினமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் லாபமாகக் கிடைக்குது. ஒரு மாசத்துக்கு கணக்கு போட்டா, 75 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்றார், சந்தோஷமாக!

தொடர்புக்கு,

சேகரன், செல்போன்: 9940338374  

480 சதுரடியில் 600 படுக்கைகள்!

காளான் வளர்ப்பு முறை பற்றி, சேகரன் சொன்ன விஷயங்கள் இங்கே பாடமாக...

காளானில் பல வகைகள் இருந்தாலும் முதலில் காளான் வளர்ப்பில் இறங்குபவர்களுக்கு சிப்பிக்காளான் வளர்ப்புதான் ஏற்றது. இதை வளர்க்க 25 டிகிரி முதல் 28 டிகிரி வெப்பநிலை தேவை என்பதால், கீற்றுக் கொட்டகைதான் ஏற்றதாக இருக்கும். 30 அடி நீளம், 16 அடி அகலத்தில் (480 சதுர அடி) கொட்டகை அமைக்க வேண்டும். கொட்டகையின் உயரம் 10 அடிக்கு மேல் போகக்கூடாது. சுற்றுச்சுவரை தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு எழுப்பிக் கொள்ள வேண்டும். கொட்டகையைச் சுற்றிலும் இரண்டு அடுக்குகள் பச்சை நிழல்வலையைக் கட்டிக்கொண்டு... உள்பகுதியில் ஒரு அடுக்கு நிழல்வலையோடு சணல் சாக்குககளையும் சேர்த்துக் கட்டித் தொங்கவிட வேண்டும்.

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

கொட்டகைக்குள் ஒன்றரை அடி இடைவெளியில் உரிகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு உரியிலும் ஐந்து படுக்கைகளைக் கட்டித் தொங்க விட முடியும். இரண்டு வரிசைகளுக்கு இடைவெளியில் இரண்டரை அடி இடைவெளி கொடுத்து, அடுத்த உரியைக் கட்ட வேண்டும். 480 சதுர அடியில் மொத்தம் 600 படுக்கைகளைத் தொங்க விட முடியும்.

ஓர் அடி அகலம், இரண்டு அடி நீளம் இருக்கும் 80 கேஜ் பாலித்தீன் பையின், அடிப்பகுதியில் இரண்டு அங்குல உயரத்துக்குத் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வைக்கோலை நிரப்பி... அதன் மீது விதை வித்துகளைத் தூவ வேண்டும். அதன் மேல் வைக்கோலை நிரப்பி விதைகளைத் தூவ வேண்டும். இப்படி தொடர்ந்து பை முழுவதும் நிரம்பிய பிறகு, மேற்புறத்தை நூலால் கட்டி விட வேண்டும். இரண்டு படுக்கைகளுக்கு ஒரு விதைப் புட்டித் தேவைப்படும். வேப்பெண்ணெயில் நனைத்துத் துடைத்த சாக்கு தைக்கும் ஊசியால், படுக்கை முழுவதும் 12 இடங்களில் துளையிட்டு உரியில் தொங்கவிட வேண்டும். கொட்டகையில் உள்ள சாக்குகளை அவ்வப்போது நனைத்து உள்ளே தேவையான வெப்பநிலையைப் பராமரித்து வர வேண்டும். ஒரு படுக்கையில் இருந்து அதிக பட்சம் ஒரு கிலோ காளான் அறுவடை செய்யலாம்.

காளான் நிலைகள்!

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

18 முதல் 20-ம் நாளில் மொட்டு

21-ம் நாளில் முதல் அறுவடை 500 கிராம் (ஒரு படுக்கையில் இருந்து)

35 முதல் 40-ம் நாளில் இரண்டாவது அறுவடை 300 கிராம்.

55 முதல் 60-ம் நாளில் மூன்றாவது அறுவடை 200 கிராம்.

நானும் பசுமை விகடனும்!

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

பொறியியல் விவசாயி!

''தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டுவாக்கோட்டைதான் எனக்கு சொந்த ஊர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில இருக்கிற பொறியியல் கல்லூரியில் இளநிலை விமானப் பொறியியல் படிச்சுட்டு இருந்தப்ப, சீனியர் மாணவர் ஒருத்தர்தான் பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார். அதுக்குப் பிறகு, பலருக்கும் பசுமை விகடனை நான் அறிமுகப்படுத்த ஆரம்பிச்சுட்டேன். இதுல பெரும்பாலானவங்க பொறியியல் துறை பட்டதாரிகள்தான். பெங்களூர்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்பவும் பசுமை விகடன் படிக்காம இருந்ததில்ல. இதுல வரக்கூடிய கட்டுரைகள் தொடர்பா என்னுடய நண்பர்களோடு விவாதிச்சுக்கிட்டே இருப்பேன். இப்ப நான் விமானப் பொறியியல் துறையில மேற்படிப்பு படிக்கப் போறேன். கூடவே, நண்பர்களோட சேர்ந்து நிலம் வாங்குற முயற்சிகள்ல தீவிரமா இறங்கி இருக்கோம். அதுல ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப் போறோம்'' என்கிறார், விமானப் பொறியாளர் திவ்ய அரசன்.

பல்கலைக்கழகத்தில் பயிற்சி!

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

காளான் வளர்ப்பு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காளான் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ''பயிர் நோயியல் துறையின் கீழ் இயங்கும் காளான் ஆராய்ச்சி மையத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி அறிமுகப் பயிற்சி நடத்தப்படுகிறது. 5-ம் தேதி விடுமுறை நாளாக இருந்தால், அடுத்த நாள் பயிற்சி வகுப்பு நடக்கும். தவிர, செய்முறையுடன் கூடிய 'வணிக முறை’ காளான் வளர்ப்புப் பயிற்சியும் உண்டு. இது பத்து நாள் பயிற்சி. இதற்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணம்'' என்றார்.

தொடர்புக்கு:

கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு!

காளான் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.தொலைபேசி: 0422-6611336

இலவசப் பயிற்சியும் உண்டு!

காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் (கே.வி.கே) பேராசிரியர் மற்றும் தலைவர் குமரவேல், ''மாதம் தோறும் எங்கள் மையத்தில் சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் வளர்ப்புக்கான இலவசப் பயிற்சி கொடுக்கிறோம். இந்தப் பயிற்சியில் முன்னோடி காளான் வளர்ப்பு விவசாயிகள் தங்களின் அனுபவங்களையும், விற்பனை வாய்ப்புகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். தவிர, காளான் விற்பனை செய்யவும், கடன் வசதிக்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கிறோம்'' என்றார்.

வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம். தொலைபேசி: 0442-7452371

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு