மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா?

புறா பாண்டி, படங்கள்: தி.விஜய், வீ.சிவக்குமார்

''மரக்கன்றுகள் நடவு செய்தால், இலவச மின்சாரம் வழங்குவார்கள், என்று 'பசுமை விகடன்’ இதழில் படித்த ஞாபகம் உள்ளது. என்னுடைய நிலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்துவிட்டு இலவச மின்இணைப்பு கேட்டேன். மின்சார அலுவலகத்தில், 'கொடுக்க முடியாது’ என்கிறார்கள். என்ன செய்வது?''

 நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா?

- ஏ.தங்கமுத்து, பாலக்குறிச்சி.

கோயம்புத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் பிரசாரப் பிரிவுத் தலைவர் நாராயணசாமி, பதில் சொல்கிறார்.

''நெல், கரும்பு, வாழை மாதிரியான வேளாண்மைப் பயிர்களுக்கு மட்டும்தான் இலவச மின்சாரம். மரப்பயிர்களுக்குக் கிடையாது என்று தமிழக மின்வாரியம் தொடர்ந்து கெடுபிடி காட்டிவந்தது. எங்கள் சங்கம் தொடர்ச்சியாக இதுபற்றி முறையிட்டதால், 'வேளாண்மை மற்றும் இதரப் பயிர்களுக்கும் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் என்று சட்டத்தில் இருக்கிறது. இதரப்பயிர்கள் என்கிற அடிப்படையில், 10 ஹெச்.பிக்கு குறைவாக இருக்கும் மின் இணைப்புகள் மூலம் மர சாகுபடி செய்யும் விவசாயிகள், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி பாசனம் செய்து கொள்ளலாம்’ என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநர் 2013-ம் ஆண்டே தெளிவுபடுத்திவிட்டார்.

 நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா?

இதன் அடிப்படையில், புதிய மின் இணைப்பு வாங்கும்போது, மரம் வளர்ப்புக்கு என்று குறிப்பிட்டுக் கேட்டே இலவச மின்சார இணைப்பை வாங்க முடியும். ஏற்கெனவே விவசாயத்துக்காக இலவச மின்இணைப்பு வைத்திருக்கும் விவசாயிகள், மரப்பயிருக்கு மாறும்போது சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலகத்தை அணுகி, எளிதில் மாற்றிக் கொள்ள முடியும். இதைத்தான் ஏற்கெனவே பசுமை விகடன் இதழ் வாயிலாக நான் தெரியப்படுத்தியிருந்தேன். அதேசமயம், மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம். உடனடியாக புதிய மின் இணைப்பு கொடுங்கள் என்று கேட்க முடியாது. இலவச மின்சாரம் கேட்டு ஏற்கெனவே பதிவு செய்திருப்பவர்களுக்குரிய சீனியாரிட்டி அடிப்படையில்தான் கொடுப்பார்கள்.''

தொடர்புக்கு, செல்போன்: 9943284746.

''கறவை மாடு வளர்க்க விரும்புகிறேன். அரசு மற்றும் தனியார் பண்ணைகளில் குறைந்த விலையில் மாடுகள் கிடைக்குமா?''

 நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா?

- ஆ.திருநாவுக்கரசு, அனுமந்தண்டலம்.

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.குமரவேல் பதில் சொல்கிறார்.

''தமிழ்நாட்டில் கால்நடைப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையின் கால்நடைப் பண்ணைகள் பரவலாக உள்ளன. இந்தப் பண்ணைகளில் அவ்வப்போது, இளம் கிடேரிக் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சிலசமயம், கறவை மாடுகளும்கூட விற்பனைக்கு கிடைக்கும். இந்த இரண்டு பண்ணைகளிலும் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுவாக, இந்தப் பண்ணைகளில் ஜெர்சி, சிந்தி, கலப்பினங்கள் விற்பனை செய்யப்படும். குறிப்பாக, செட்டிநாடுப் பண்ணையில் பாரம்பரிய இனமான தார்பார்க்கர் இனமும், மாதவரம் பண்ணையில் சிந்தி இனமும் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நீங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் என்பதால், அருகில் உள்ள காட்டுப்பாக்கம் முதுநிலை கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் முன்பதிவு செய்து மாடுகளை வாங்கிக் கொள்ளலாம். இதுதவிர, வேளாண் அறிவியல் மையங்களில் தனியார் பண்ணைகள் குறித்த விவரங்களைப் பெற்றும் மாடுகளை வாங்கலாம்.

 நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா?

எங்கள் வேளாண் அறிவியல் மையத்தைப்  பொறுத்தவரை, வாரம்தோறும் சனிக்கிழமை 'வானவில்’ என்ற பெயரில் வாரச்சந்தையை நடத்தி வருகிறோம். இங்கு விவசாயிகள் மூலம் நேரடியாக விளைபொருட்கள், விதைகள், இடுபொருட்கள், கோழி, ஆடு, மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தச் சந்தைக்கு வந்தும், மாடுகளை வாங்கிக் கொள்ளலாம். தனியார் கால்நடைப் பண்ணைகளின் முகவரியும் எங்களிடம் உள்ளன. இதைப் பெற்றும்கூட தேவையான கறவை மாடுகளை வாங்கி பண்ணை அமைக்கலாம். மாடுகள் வாங்கும்போது, கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. இதன் மூலம், மாட்டின் கறவைத் திறன், நோய்த்தாக்குதல்... பற்றி அறிந்துகொள்ள முடியும்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி’ சும்மா 'பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இமெயில் மூலமும் அனுப்பலாம்.